குவியல் 1 எண்ணம் 4
காற்று

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
காற்று, அதன் தன்மைக்கேற்ப தென்றல், புயல், சூறாவளி என்று அழைக்கப்படுகிறது. எமது நாட்டைப் பொறுத்தவரை (இலங்கை) இரு பருவப்பெயர்ச்சிக் காற்றுக்கள் வீசுகின்றன. ஒன்று வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று, மற்றையது தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று. இவற்றை விட வெவ்வேறு திசைகளிலிருந்து வீசும் காற்றிற்கு வாடைக்காற்று, சோழகக்காற்று, கொண்டல்காற்று, கச்சான்காற்று என்று எம் முன்னோர்கள் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தனர். தெற்கிலிருந்து வீசும் மென்மையான காற்று தென்றல் என்று அழைக்கப்படுகின்றது.
எங்கும் நிறைந்திருக்கும் காற்றானது மனிதரால் செல்ல முடியாத இடத்திற்கும் செல்லக்கூடியது. கண்களால் காண முடியாத காற்றை நாம் மரம், செடி, கொடிகளின் அசைவின் மூலமும் எம்மை தழுவிச் செல்லும் போதும் நாம் மூச்சுவிடும்போதும் உணர்கிறோம்.
காற்று,
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது;
தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் காரணிகளில் ஒன்று;
மின்சார உற்பத்திக்கு உதவுகிறது;
பல தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கு காற்று பயன்படுத்தப்படுகிறது;
வெப்பமான சூழலை குளிர்ச்சியாக மாற்றுகிறது;
புற ஊதா கதிர்களைத் தடுக்கும் பாதுகாப்பு அரணாக பூமியைச் சுற்றி இருக்கிறது.
மனிதனுக்கு அவசியமான காற்று வேகமாக வீசும்போது பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
தாவரங்கள் விரைவில் பாதிப்படையும்;
மண்ணரிப்பு ஏற்படும்;
வேரின் ஆழம் குறைவாக இருக்கும் தாவரங்கள் சாய்ந்துவிடும்;
குடியிருப்புக்கள் சேதமடையும்;
மரங்கள் முறிந்து விழும்;
விண்ணிலும் தரையிலும் போக்குவரத்து பாதிப்படையும்;
கனன்றுகொண்டிருக்கும் சிறு தீப்பொறியையும் பெருந்தீயாக மாற்றிவிடும்;
காட்டுத்தீ வேகமாக பரவும்.
இவை யாவும் இயற்கையாக நிகழ்பவை.
இதே காற்றானது நோய்கள் பரவுவதற்கும் காரணமாக அமைகிறது. தூசை அள்ளிச் செல்வதால் சுவாசம் சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றன. பல்வேறு நோய்களைப் பரப்பும் கிருமிகளை சுமந்து சென்று தொற்று நோய்களைப் பரப்புகிறது.
மனிதனின் செயற்பாடுகளான
புகை பிடித்தல்;
பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை எரித்தல்;
வாகனங்கள் புகை கக்குதல்;
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை;
போன்ற காரணிகளினால் காற்று மாசடைகிறது. இக் காற்றை நாம் சுவாசிப்பதால் ஆரோக்கியத்தை இழந்து நோய்கள் எம்மை இலகுவாக பீடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எனவே எம்மால் இயன்றளவு இந்த நடவடிக்கைகளை தவிர்த்து தீங்கு ஏற்படுத்தாத மாற்று வழிகளை கையாள்வது கட்டாயமாகிறது.
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் பேணி, வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடிகள் என பயன்தரும் தாவரங்களை வளர்த்து சுத்தமான காற்றை பெறுவோம், சுகமாக வாழ்வோம்.
உதாரணக் கதை
“காற்றண்ணா! காற்றண்ணா!” சன்னமான குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தது காற்று. தீக்குச்சி ஒன்றில் அணையாமல் கனன்று கொண்டிருந்தது தீ.
“என்ன தம்பி! யார் உன்னை இந்த நிலையில் இங்கு எறிந்தது?” கேட்டது காற்று.
தீப் பொறி கவலையுடன், “மனிதனின் கவலையீனமும் அலட்சியமும் தான் அண்ணா. சிறு பொறிதானே அதுவே அணைந்துவிடும் என்று நினைத்துவிட்டான். நீங்கள் சிலைபோல் இருப்பதால் இப்படி இருக்கின்றேன். உங்களது சிறிய அசைவுகள் எவ்வளவு பெரிய விளைவைக் கொடுக்கப் போகின்றது. என்னை இப்படியே விட்டால் அருகில் உள்ளவற்றை பற்றிக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.” என்றது கவலையுடன்.
“எவ்வளவு நேரம்தான் என்னால் இப்படியே இருக்க முடியும். உன்னை அணைப்பதற்கு வேறு வழி ஏதாவது இருந்தால் சொல். இயலுமா என்று பார்க்கிறேன்.” என்று சலிப்புடன் கூறியது காற்று.
“ஒரு வழி இருக்கிறது அண்ணா, ஆகாயத்திற்கு ஒரு செய்தி கடத்திச் செல்லுங்கள். எவ்வளவு விரைவில் மழை பொழிய முடியுமோ அவ்வளவு விரைவில் பொழியச் சொல்லுங்கள். வேறு வழி இல்லை அண்ணா”
காற்றும் இச் செய்தியை விரைந்து கடத்திச் சென்று ஆகாயத்திடம் கூறியது.
ஆகாயம் திகைத்து நின்றது. செய்வதறியாது தவிப்புடன்,
என்ன சொல்கிறீர்கள் காற்றாரே? தற்சமயம் மழையைத் தரக்கூடிய மேகங்கள் என்னிடம் இல்லை. இதற்கு மனிதன் தான் காரணம். அவனது தவறான நடவடிக்கைகளால் நீர் என்னை வந்தடைவது குறைந்துகொண்டு வருகிறது. பருவகாலத்திற்குரிய மழையை சரியான நேரத்தில் என்னால் தரமுடியாதுள்ளது. காலம் தவறி கொட்டித் தீர்ந்துவிடுகிறது. இதனால் அழிவேயன்றி பயனில்லை. என்ன செய்வது? அவசரத்திற்கு உதவ முடியாதுள்ளதே.” எனக் கவலைப்பட்டது ஆகாயம்.
இச் செய்தியை கடத்திச் சென்று தீப்பொறியிடம் கூறிய காற்றும் களைப்புடன் அசையத் தொடங்கியது.
தீப் பொறியும், தன்னால் முடிந்தது இவ்வளவுதான் என்று காற்றின் வேகத்தினால் அருகில் உள்ளவற்றை பற்றிக்கொள்ளத் தொடங்கியது.
*****