குவியல் 1 எண்ணம் 5
ஆகாயம்

பஞ்ச பூதங்களுள் ஒன்று ஆகாயம். எல்லையே இல்லாமல் பரந்து விரிந்திருக்கிறது ஆகாயம். அதில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத்தான் உயிர்களுக்குத் தேவையான வளிமண்டலம் உள்ளது.
சூரியன், சந்திரனும் நட்சத்திரங்களும் ஓடித்திரியும் பல வடிவ மேகங்களும் ஆகாயத்திற்கு அழகு சேர்க்கின்றன.
ஆகாயம் மழையைப் பொழிந்து பூமித்தாயை பசுமையாக்குவதுடன் புவியில் வாழும் உயிர்களுக்கு குளிர்மையைத் தந்து உணவு கிடைக்க வழி செய்கிறது.
நாடு விட்டு நாடு செல்வதற்கும் உள்நாட்டில் துரிதமாக பயணம் செய்வதற்கும் ஆகாய மார்க்கம் உதவுகிறது.
பூமிக்கு வரக்கூடாத, கெடுதல் விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சுக்களை தடுப்பதற்கு பூமியைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக ஆகாயத்தில் ஓசோன் படலம் அமைந்துள்ளது. பூமியின் காலநிலை மாற்றங்கள் இயற்கையாக ஓசோன் படையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் இயற்கையாகவே மிகச் சிறிய அளவில் ஓசோன் படை தேய்வதும் சரியாவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஓசோன் படை தேய்வை மனிதனது பல்வேறு நடவடிக்கைள் துரிதப்படுத்துகின்றன.
உள்நாட்டில் இரு சமூகங்களுக்கிடையே / நாடுகளுக்கிடையே உருவாகும் போர்ச் சூழலின் போது பயன்படுத்தும் போர்க் கருவிகள், ஏவுகணைகள், குண்டு வெடிப்புகள், போர் வானூர்திகள் வெளிவிடும் இரசாயன பதார்த்தங்கள்;
வீட்டுக்கொரு வாகனம் என்றில்லாமல் ஆளுக்கொரு வாகனம் என்று வைத்திருப்பதுடன் நடந்து செல்லக்கூடிய தூரத்திற்கும் வாகனங்களை பயன்படுத்துவதால் தேவைக்கதிகமாக ஓடித்திரியும் வாகனங்கள் வெளிவிடும் புகை;
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயன வாயுக்கள்;
பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற கழிவுப் பொருட்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் நச்சுப் புகை;
பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசு வகைகள், மத்தாப்புக்கள்;
இவை யாவும் சுற்றுச் சூழலை மாசடையச் செய்வதுடன் ஆகாயத்தையடைந்து ஓசோன் படையின் தேய்வையும் துரிதப்படுத்தி துளைகள் உண்டாக வழிவகுக்கின்றன. இதனால் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைவது மனிதர்களுக்கு பலவித நோய்கள் உண்டாவதற்குரிய காரணிகளுள் ஒன்றாகிறது. அத்துடன் பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, ஓசோன் படைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை நிறுத்தி மாற்று வழிகளை பின்பற்றி பூமியை பாதுகாக்க வேண்டியது உலக மக்களின் கடமையாகும்.
எப்போது மனிதன்,
யுத்தம் உண்டாவதை தவிர்த்து பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் மூலம் தீர்வு காண்கிறானோ;
போக்குவரத்து வாகனங்களை குறைக்க முயற்சி செய்கிறானோ;
பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கிறானோ;
தொழிற்சாலைகளிலிருந்து கேடு விளைவிக்கும் இரசாயன பதார்த்தங்கள் வெளியேறுவதை தடுத்து மாற்று நடவடிக்கைகள் எடுக்கிறானோ;
அன்றே பூமியில் வாழும் உயிர்களினது மட்டுமல்லாது பூமியினதும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
உதாரணக் கதை
அந்தக் கிராமத்து பாடசாலையின் அதிபர் கதிரேசன் நேர்மையானவர், அன்பானவர், பண்புமிக்கவர். அதேநேரம் தேவையான நேரத்தில் கண்டிப்பாக இருப்பதற்கும் தவறுவதில்லை. சுற்றுச்சூழலைப்பற்றி மிகவும் அக்கறை உடையவர். பாடசாலை வளாகத்தைச் சுற்றி தேவையான மரங்கள், செடி, கொடிகள் நட்டு சிறு பூந்தோட்டத்தையும் அமைத்து அவற்றை பராமரிப்பதற்கும் ஒழுங்கு செய்துள்ளார். பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் குருவிகள், பட்டாம்பூச்சிகள், அணில்கள் என பலவித பிராணிகளும் உலா வந்து அந்த சூழலையே அழகாக்கிக் கொண்டிருக்கின்றன.
சில நாட்களாக கதிரேசனின் மனதில் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வானவேடிக்கைகள், வெடி வகைகள், மத்தாப்புக்கள் என்பவற்றின் பாவனையை இயலுமானவரை கட்டுப்படுத்துவதே அவரது எண்ணம். இவற்றினால் தீ விபத்துக்கள் ஏற்படுவதுடன், இவை வெளிவிடும் புகை சூழலை மட்டுமன்று சிறிது சிறிதாக ஆகாயத்தையும் சென்றடைந்து மாசடையச் செய்கிறது. “சிறு துளி பெருவெள்ளம்” என்ற முதுமொழி யாவரும் அறிந்ததே. அதனால் தனது எண்ணத்தை நிறைவேற்ற தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தார்.
சித்திரை வருடப்பிறப்பிற்க்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. அவரது எண்ணத்தை செயலாற்ற இதுதான் தக்க தருணம் எனத் தீர்மானித்தார். வெடி பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த சிறுவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் சரி எனவும் அதற்குரிய இடம் பாடசாலை எனவும் முடிவுசெய்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் பத்து நிமிட நேரத்தை ஒதுக்கி, வெடிபொருட்களினால் ஏற்படும் விபத்துக்களையும் பின் விளைவுகளையும் பற்றி உரையாற்றுமாறு ஆசிரியர்களை பணித்தார். தினமும் சுழற்சி முறையில் எல்லா ஆசிரியர்களும் பங்குபற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந் நிகழ்வில் உற்சாகமாக பங்குபற்றிய ஆசிரியர்கள், வெடிபொருட்களினால் ஏற்படும் தீ விபத்துக்கள் பற்றியும் அவை வெளிவிடும் புகையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும். ஆகாயத்தில் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் பற்றியும், அதனால் உள்நுழையும் கதிர் வீச்சுக்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். இப்படியாக தீமையையே விளைவிக்கும் வெடிபொருட்களுக்கு செலவழித்து பணத்தை கரியாக்காமல் அந்தப் பணத்தை நல்ல வழிகளில் செலவழிக்கலாமே என்றும் ஆலோசனை வழங்கினர்.
“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்ற முதுமொழிக்கமைய, தினமும் இக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க மாணவர்கள் சிந்திக்கத் தொடங்கினர். இதுபற்றி வீடுகளிலும் கதைத்ததால் பெற்றோரும் ஆர்வத்துடன் இது பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.
புத்தாண்டும் நெருங்க நெருங்க கிட்டத்தட்ட முக்கால்வாசி வீடுகளில் மனமாற்றம் ஏற்படத்தொடங்கியது.
இனிமேல் அநியாயமாக பணத்தை வெடிபொருட்களுக்கு செலவழிக்காது,
கூடுதலாக பலகாரங்கள் செய்து ஏழைகளுக்கு கொடுப்போம், பென்சில், பேனா, கொப்பி போன்ற கல்வி உபகரணங்களை வாங்கி வசதியற்ற மாணவர்களுக்கு கொடுக்கலாம், பாடசாலை கட்டணம் கட்ட முடியாது தவிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு உதவலாம், என பலவாறு சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தத் தகவல்கள் காற்றுவாக்கில் கடைக்காரர்களையும் சென்றடைய, விற்பனை அதிகம் நடைபெறாதென உணர்ந்து வெடி பொருட்களின் கொள்வனவை வெகுவாகக் குறைத்துக் கொண்டனர்.
அந்த வருடம் அக் கிராம மக்கள் புத்தாண்டை மாசற்ற புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தனர். இம் மனமாற்றத்திற்கு காரணமான அதிபரும் ஆசிரியர்களும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர்.
பக்கத்துக் கிராமங்களுக்கு இக் கிராமம் முன்னோடியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
*****