குவியல் 2
மானுடன் சிறப்பாக வாழ்வதற்கும் பிறவிப் பயனை அடைவதற்கும் உடல், உள ஆரோக்கியம் தேவை. மன ஆரோக்கியத்திற்கு நீதி நூல்கள் வழிகாட்டுகின்றன. பாடசாலைகளில் சிறிய வகுப்பிலிருந்தே நீதி நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீதி நூல்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் பல மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நன்னெறிகள் கடத்தப்படுகின்றன. இவற்றை அறிந்துகொள்வதோடு நிறுத்தாமல் செயலிலும் கடைப்பிடித்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்கலாம்.
நீதி நூல்கள் கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்வதன் மூலம், நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நற் பிரஜைகளை உருவாக்குவோம்.
அற நெறிகளைக் கூறும் ஔவையார் அருளிய ஆத்திசூடியிலிருந்து ஐந்து அடிகளை தலைப்புக்களாகக் கொண்டு எண்ணங்கள் ஐந்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
குவியல் 2 எண்ணம் 1
அறம் செய விரும்பு

கடவுள் என யாவரும் குறிப்பிட்டு வெவ்வேறு வழிமுறைகளில் வணங்குவது ஒரு மாபெரும் சக்தியையே. எம்முள்ளே இறை சக்தி இருக்கிறது. அச் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறப்பாக வாழலாம்.
சரியான செயல்களைச் செய்வதும் சரியான பாதையில் நடப்பதும் தர்மம் என சொல்லப்படுகிறது.
இங்கு, நாம் ஈட்டும் செல்வங்கள் தொடர்பான தர்மத்தைப் பார்ப்போம். இந்து தர்ம சாஸ்திரத்தில், ஒரு மனிதன் தான் ஈட்டும் வருமானத்தில் 25% தான தர்மத்தின் பொருட்டு செலவழிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இப் பூவுலகில் பிறந்திருக்கும் மானுடர் யாவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே பிறந்திருக்கின்றோம். ஒவ்வொரு மானுடரும் இப் பூவுலகில் வாழ்வதற்கு உரிய காலமும் அவர்கள் பயன்படுத்துவதற்கான செல்வமும் அவரவர் நோக்கங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டே பிறவி எடுக்கின்றார்கள். பிறந்த நோக்கங்களை நிறைவேற்றாமல் இறக்கும் மானுடரும், புதிய நோக்கங்களுக்காகவும் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டிருக்கின்றன.
நாம் சிறந்த முறையில் வாழ்வதற்குத் தேவையான சகலதும் எம்மைச் சுற்றி இருக்கின்றன. அவற்றை உரிய முறையில் தேவைக்கேற்ப பயன்படுத்துவதே முறையாகும். அளவுக்கு அதிகமாக சேகரித்து சேர்த்து வைக்கும் யாவும் எமக்கும் பிறருக்கும் பயன்படாமல் அழிந்துபோய்விடும். எமது தேவைக்கு மேலதிகமாக நாம் வைத்திருக்கும் சகலதும் பிற உயிர்களுக்குரியது. இதை மனதில் நிறுத்தி எமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
உடல், உள ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் வாழ முயற்சியும் நேர்மையான உழைப்பும் தேவை. பிறரை ஏமாற்றி, கொடுமைப்படுத்தி, சூழ்ச்சி செய்து சம்பாதிக்கும் எதுவுமே எமக்கு சுவர மாட்டாது. அப்படி வரும் செல்வம், ஏற்கெனவே எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் எடுத்துச் சென்றுவிடும். எமது முயற்சியும் உழைப்பும் ஈட்டித் தரும் செல்வம் போதாதென்றால் கடும் உழைப்பும் விடா முயற்சியும் தேவையே அன்றி குறுக்கு வழிகளைப்பற்றி சிந்திப்பது தீய பலன்களையே தரும்.
ஆடம்பரத்திற்காகவும் பேராசைகொண்டும் குடும்பத்தைக் கவனிக்காது ஓடி ஓடி உழைத்து பரம்பரைக்கு சொத்து சேர்ப்பதும் நிம்மதியைத் தரமாட்டாது. அச் சொத்துக்களை அழிப்பதற்கென்றே குடும்பத்தில் ஒருவர் பிறவியெடுப்பார்.
முன்பே கூறியது போல அவரவர்க்கு அளந்ததுதான் நிற்கும். மேலதிகமான அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அழிந்துபோய்விடும். களவு போதல், தொலைதல், ஏமாறுதல், நோய்கள் உண்டாகி மருத்துவத்திற்கு செலவாதல், அநாவசிய செலவுகள் ஏற்படல் போன்ற வழிகளில் அழிந்து போவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
எமது தேவைக்கு மேலதிகமாக செல்வம் இருந்தால் அவற்றை நல்ல வழிகளில் செலவு செய்யலாம். தான தர்மம் செய்யலாம். நலிந்தவர்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம், கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற வழிகளில் செலவு செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப வறியவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி விருப்பத்தோடு செய்யும் உதவி பெறுபவர்களுக்கு மட்டுமல்லாது கொடுப்பவர்களுக்கும் மன நிறைவைக் கொடுக்கும்.
“இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் கிடைக்கும்” என்ற கூற்றுப்படி விருப்பத்தோடு தான தர்மங்கள் செய்யும்போது, நேர்மையான உழைப்பும் முயற்சியும் செல்வத்தை குறையவிடாமல் தந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாது, நாம் செய்யும் தான தர்மங்களின் பலன் சரியான தருணத்தில் ஏதோ ஒரு வழியில் எமக்கு கிடைக்கும் என்பது உறுதி.
உண்மையான நிலையான இன்பத்தைப் பெற்று சுகமாக வாழ வழி கூறும் நீதி நூல்களில் ஒன்றாகிய ஆத்திசூடியில் ஔவையார் அறத்தின் அவசியத்தை பின்வருமாறு கூறுகிறார்.
ஆத்தி சூடி – “அறம் செய விரும்பு”
கவிஞர் பத்மதேவன் அவர்களின் விளக்கவுரை – தர்ம காரியங்களைச் செய்ய ஆசை கொள்வாயாக.
அறத்தினால் பெறும் பயன்தனை திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
குறள் – “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.”
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க. அந்த அறம் நாம் அழியும்போது, தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.
விருப்பத்தோடு தர்மங்கள் பல செய்து அதன் பயனாக நல் வாழ்க்கையைப் பெறுவோம்.
உதாரணக் கதை
நாதன், மாலதி தம்பதியினருக்கு ஒரே மகன் குமரன். பத்து வயது, ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் கெட்டிக்கார பையன். மிகவும் இரக்க குணமும் நேர்மையும் உடைய நாதன் காய், கறித் தோட்டம் வைத்து வியாபாரம் செய்யும் கமக்காரன். மனைவி மட்டுமல்லாது மகன் குமரனும் தன்னாலான உதவிகளை தோட்டத்தில் செய்வான். தோட்டத்தில் விளையும் காய், கனிகளில் வீட்டுத் தேவைக்கு எடுப்பதுடன் அக்கம் பக்கம் இருக்கும் வறியவருக்கும் கொடுத்துதவுவது வழக்கம். சந்தையிலும், கஷ்டப்படுபவருக்கு பேரம் பேசாது தனக்கும் நட்டம் வராமல் பார்த்துக் கொடுத்துவிடுவான். அவனது மனம் போல பூமா தேவியும் அவனுக்கு அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். மனைவிக்கும் மகனுக்கும் நாதனுடைய இரக்க குணம் தொற்றிக் கொள்ள அவர்களது வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்வாகவும் சென்றுகொண்டிருந்தது.
ஒரு நாள் எதிர்பாராத விதமாக குமரனுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிட்டது. அதன் தாக்கம் குமரனை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. வைத்தியரும், ஒரு கிழமையாவது வைத்தியசாலையில் அனுமதித்தால் தான் குணமடைய முடியும் என்று கூறிவிட்டார். நாதனும் மனைவியும், தோட்டமும் வைத்தியசாலையுமாக மாறி மாறி அலைந்துகொண்டிருந்தனர். குமரனுக்கோ புலமைப் பரிசில் பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில், குமரனுடன் படிக்கும் சக மாணவர்களும், நாதனுக்கு சந்தையில் பழக்கப்பட்டவர்களும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் நிலைமை அறிந்து நாதன் குடும்பத்திற்கு ஆறுதலாக தங்கள் உடல் ரீதியிலான உதவிகளை வழங்கியதுடன், குமரன் விரைவில் குணமடைய அவரவர் வழிகளில் மனமுருகி இறைவனை பிரார்த்தித்தனர்.
நாதன் குடும்பத்தினர் செய்த தர்மங்களுக்கு பலனாக அனைவரது வேண்டுதலும் நிறைவேறியது. குமரன் விரைவில் குணமடைந்து இதோ பரீட்சைக்கு தயாராகி சென்றுகொண்டிருக்கின்றான்.
விருப்பத்துடன் செய்யும் தர்மம் நற் பலனைக் கொடுக்கும்.
*****