தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
July 13, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு2 எ5

குவியல் 2                                                                                                                     எண்ணம் 5

சேரிடம் அறிந்து சேர்

மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் தேவ குணங்களும் அசுர குணங்களும் உள்ளன. பொய், களவு, சூது, பொறாமை, கோபம், பேராசை, காமம், அகங்காரம், ஆணவம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கேலி செய்தல், குறை கூறுதல், கோள் சொல்லுதல், கெட்ட வார்த்தை பிரயோகம் போன்ற தீய குணங்களை அடக்கி செயலிழக்கச் செய்து, நேர்மை, வாய்மை, பொறுமை, அன்பு, பாசம், கனிவு, ஒழுக்கம், பக்தி, முயற்சி, ஈகை, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்தல் போன்ற நல்ல குணங்களை மேலோங்கச் செய்யும் சக்தி எம்மிடம் மட்டுமே உள்ளது. அச் சக்தியை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் எமது வாழ்வு மகிழ்ச்சியான பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை. அடுத்தவர்கள் ஆலோசனை, புத்தி கூறலாம். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மாறுவது எம்மால் மட்டுமே முடியும்.

நாம் யார் யாருடன் சேர்ந்து பழகுகிறோமோ அவர்களுடைய குணம் படிப்படியாக எம்மையும் தொற்றிக்கொள்கிறது. அதனால் எம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்ல குணங்களை உடையவர்களாக இருப்பது அவசியம். அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை எமக்கே உள்ளது. அதில் கூடிய கவனம் செலுத்துவோமேயானால் எம் வாழ்க்கை நல்வழியில் சென்று மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.

எல்லாத் தீய குணங்களுக்கும் ஆரம்பமாக இருப்பது பொய். சொல்லும் பொய்யானது படிப்படியாக தீய எண்ணங்களை அழைத்து வந்துவிடும். சொன்ன ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்களை சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் வாழ்க்கை சீரழிந்து ஒரு போலியான, நிம்மதியற்ற வாழ்க்கை முறைக்கு தள்ளப்படுவோம்.

பொய் சொல்ல மாட்டோம் என்று உறுதி எடுத்து அதைக் கடைப்பிடித்து வாழும் போது  மற்ற தீய பழக்கங்கள் மெது மெதுவாக புதைந்து அழிந்துவிடும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஔவையார் அருளிய ஆத்திசூடி செய்யுளின் படியும், திருவள்ளுவர் அருளிய குறளின் படியும், ஒழுகி நற்பயன்களைப் பெற்று நற் பிரஜையாக வாழ்வோமாக.

ஆத்திசூடி

“சேரிடம் அறிந்து சேர்.”

கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – சேரத் தகுதியான இடத்தை ஆராய்ந்து அறிந்து சேர வேண்டும். (இடம் என்பது நண்பர்கள், சமூக இயக்கங்கள், கட்சிகள் போன்றவற்றையெல்லாம் குறிக்கும்).

குறள்​

“பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை

எல்லா அறமும் தரும்.”

கலைஞர் உரை – பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

உதாரணக் கதை

அகிலன், உமா தம்பதியினருக்கு ஒரே மகன் ஆதி. ஆரம்பக் கல்வி பயின்றுகொண்டிருக்கும் பையன், பெற்றோர் சொல் தட்டாத கெட்டிக்கார சுட்டிப் பையன். அவனது சேர்க்கை சரியில்லாததால் சில நாட்களாக பொய் சொல்ல ஆரம்பித்து விட்டான். பாடசாலையில் குளிர்களி (ice cream) வாங்கிச் சாப்பிடும் ஆசையில் பொய் சொல்ல ஆரம்பித்தான்.

அவனுடன் படிக்கும் இரு சிறுவர்கள் வாங்கிச் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தபோது, “காசு தந்தால் வாங்கித் தருகிறோம்” என்றவர்களிடம், “என்னிடம் காசில்லை, வீட்டிலும் இதற்கெல்லாம் காசு தரமாட்டார்கள்” என்றான்.

“எங்களுக்கும் அப்படித்தான், ஆசிரியர் பாடத் தேவைக்கு கேட்கும் காசை சிறிது கூட்டிக் கேட்டுத்தான் அதில் இதை வாங்குகிறோம். நாளை உலக வரைபடம் வாங்குவதற்கு 20 ரூபாய் கொண்டுவரும்படி ஆசிரியர் கேட்டிருக்கின்றார். அதை 50 ரூபாய் என்று கூறி வாங்கினால் மிகுதிக் காசில் குளிர்களி வாங்கலாம்” என்று இலவச ஆலோசனை வழங்கி ஆதியை பொய் சொல்லப் பழக்கிவிட்டார்கள்.

அடிக்கடி இப்படியான சந்தர்ப்பம் வரமாட்டாது. ஆனால் குளிர்களி சாப்பிடும் ஆசை அதிகரித்தது. இதனால் அன்று, தந்தை மேசை மேல் வைத்திருந்த காசில் 50 ரூபாயை மெதுவாக எடுத்துவிட்டான். அதை தற்செயலாக கண்ட தாய் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ஆதி அறியாமல் அக் காசை அவனிடமிருந்து எடுத்தவர், அவன் பாடசாலை சென்றதும் கணவனிடம் இச் சம்பவத்தைக் கூறி அழத் தொடங்கிவிட்டார். அதிர்ந்த அகிலனும் “கவலைப்படாதே, இதுதான் ஆரம்பமாக இருக்கவேண்டும். எதற்காக இப்படி செய்தான் என்பதை முதலில் அறிந்து, அதற்கேற்ப ஆதியுடன் கதைத்து அவனை திருத்திவிடலாம்.” என்றார் நம்பிக்கையுடன்.

அதன்படி விசாரித்து நடந்ததை அறிந்துகொண்டார்.

அன்று சனிக் கிழமை, விடுதலை நாள். மாலை நேரம் மூவரும் கதைத்து விளையாடி பொழுதை போக்கிக் கொண்டிருந்த நேரம்,

“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரை, பூங்கா, கடைத்தொகுதி என செல்வது வழக்கம் தானே. இனிமேல், அன்று, எம் மூவருக்கும் பிடித்த ஏதாவது சிற்றுண்டிகள் வாங்கி வீட்டில் வைத்து சாப்பிடுவோம். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள்.” என்றார்.

ஆதியும் உடனே குளிர்களி எனவும், உமா தனக்கு கேக் என்றார். அகிலனும், உறைப்பாக அந்த நேரம் எது கிடைக்கிறதோ அதையும் மூவருக்கும் வாங்குவோம், என்று முடித்தார்.

உடனே திடீரென், “ஆதி! உன் நண்பர்கள் எல்லாம் எப்படி? நல்லவர்களா? நல்ல பழக்கவழக்கமுள்ள நண்பர்களை பெறுபவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்ற எமது முன்னோரின் வாக்கின்படி நடந்தால் எல்லோரும் புகழும்படி நல்லவர்களாக நாம் வாழலாம். பொய், களவு போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களுடன் சேராதே. அந்தப் பழக்கம் உன்னிடமும் தொற்றிக்கொள்ளும். அது பிற்காலத்தில் உன் வாழ்க்கையையே அழித்துவிடும். தெருவோரத்தில் எத்தனை  பிச்சைக்காரர்களைக் காண்கிறோம்.  தீய பழக்கங்கள் உள்ளவர்கள் இறுதியில் அங்குதான் நிற்பார்கள். எனவே உனது நண்பர்கள் கெட்டபழக்கவழக்கங்கள் உள்ளவர்களென அறிந்தால் மெதுவாக அவர்களை விட்டு விலகிவிடு. படிப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவதற்கு அதுவே சிறந்தது” என்றவர், “சரி நேரமாகிவிட்டது. சாப்பிடுவோமா?” என்று அறிவுரையை முடித்துக் கொண்டார்.

தான் செய்த தவறுகளை உணர ஆரம்பித்தான் ஆதி. ஐம்பது ரூபாயை அவர்கள் அறியாமல் தான் எடுத்ததை கண்டுவிட்டார்கள் என்பது  தந்தையின் அன்றைய நடவடிக்கையிலும் அறிவுரையிலும் புரிந்தது. எவ்வளவு பெரிய பிழையை செய்துவிட்டேன் என்று மிகவும் கவலையடைந்தான்.

இனிமேல் இது போன்ற தவறுகளை செய்யக் கூடாதென முடிவெடுத்துவிட்டான்.

தக்க சமயத்தில் காப்பாற்றி நல்வழி காட்டிய பெற்றோருக்கு மனதுக்குள் நன்றி கூறினான்.

பிள்ளைகளை அவதானித்து அவர்களுக்கு நல்வழி காட்டுவது பெற்றோரின் கடமையாகும்.

ஆதி கடைப்பிடித்த வாய்மையும் நேர்மையும் அவனுக்கு நற்குணங்களை அள்ளித் தந்தது.

இதோ ஆதியின் படிப்பு செவ்வனே நிறைவேறி கல்வித் திணைக்களத்தில் ஓர் உயர் அதிகாரியாகிவிட்டான்.

பாடசாலைகளில் மாணவர்களின் மனதில் நல் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அடிக்கடி கருத்தரங்குகளை நடாத்துவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொண்டு மக்களின் மனதில் இடம்பிடித்துக்கொண்டான்.

“உன் நண்பன் யார் என்று சொல்

நீ யாரென்று சொல்கிறேன்”

(சான்றோர் வாக்கு)

*****​

Posted in எண்ணக்குவியல்கள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 131
பார்த்துக்கொண்டேயிருப்பேன் »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved