குவியல் 3 எண்ணம் 5
நாக்கு

ஐம்பொறிகளுள் ஒன்று நா என்றும் அழைக்கப்படும் நாக்கு.
வாய்க்குள் பற்கள் சூழவர அமைந்திருக்கும் நாக்கானது உணவு உண்பதற்கும், நீராகாரம் அருந்துவதற்கும், பேசுவதற்கும் அத்தியாவசியமானதாகும்.
சுவை அரும்புகளைக் கொண்ட நாக்கானது ஈரப்பதமானதுடன் எல்லாப் பக்கங்களிலும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. உணவை பற்கள் அரைப்பதற்கு பதமாக புரட்டிக்கொடுப்பது மட்டுமன்றி அரைத்த உணவை உணவுக்குழாய்குள் தள்ளுவதும் நாக்கின் வேலை. உணவு கெட்டிப்பதமாக இருந்தால் எச்சிலை உருவாக்கி உணவை இலகுவாக்குகிறது நாக்கு. தசை நார்களாலான நாக்கில் எலும்புகள் இல்லை. அதனாலேயே நாக்கை நீட்டி, சுழட்டி, வளைக்க முடிகிறது.
நாம் உண்ணும் உணவின் சுவையை உணரும் திறன் நாக்கிற்கு மட்டுமே உள்ளது. எமக்கு பிடித்த உணவைப் பற்றி கதைத்தாலோ அல்லது பார்த்தாலோ நாவில் எச்சில் ஊறுவது யாவரும் அறிந்ததே. எமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறுகிறது என்றும் அறியப்படுகிறது.
நாம் பேசும் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாக இருப்பது நாக்கின் சுத்தத்தில் தங்கியுள்ளது.
உணவு உண்டபின் வாயை நன்றாகக் கொப்பளிக்கும்போது நாக்கும் சுத்தமடைகிறது. காலையும் மாலையும் பல் துலக்கும்போது நாக்கை வழிப்பதும் முக்கியமான செயலாகும்.
அளவுக்கதிகமான சூடுள்ள உணவையோ பானத்தையோ அருந்துவது நாக்கை பாதிக்கும். உடம்பில் சூடு அதிகரிக்கும்போது நாக்கில் கொப்பளங்கள் வருவதும், அவசர அவசரமாக உணவு உண்ணும்போது நாக்கு கடிபடுவதும் உண்டு. அதனால் ஏற்படும் புண்கள் விரைவில் மாறிவிடும். நாக்கில் ஏற்படும் காயங்கள் மாறாமல் அதிக நாட்கள் இழுபட்டால் காலம் தாழ்த்தாமல் வைத்தியரை அணுக வேண்டும். கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் உருவாவதற்கு சாத்தியமுண்டு.
ஒருவரின் ஆரோக்கியத்தையும் நோயின் அறிகுறியையும் நாக்கின் நிறத்தையும் தோற்றத்தையும் பார்த்து வைத்தியர் அறிந்துகொள்வார்.
நாக்கை குறிப்பிட்டு பலவிதமாக பேசுவர். சிறந்த பேச்சாளரை நாவன்மை மிக்கவர் என்பர். ஒருவரின் பேச்சினால் தீங்கு விளைந்தால் அவரின் நாக்கில் சனி என்பர். அளவுக்கு அதிகமாகப் பேசுபவருக்கு நாவடக்கம் வேண்டும் என்பர். ஒருவர் கூறியது பலித்துவிட்டால் கரு நாக்கு என்பர். மற்றவரின் மனம் நோகப் பேசினால் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார் என்பர். அத்துமீறிப் பேசினால் நாக்கு நீளுகிறது என்பர். சுகயீனம் காரணமாக சுவையை உணரமுடியாது போயிருந்தால்/தொடர்ந்து சில நாட்கள் உணவு சரியில்லை என்றால் நாக்கு செத்துவிட்டது என்பர்.
நாம் பேசும் வார்த்தைகள் சக்தி மிக்கவை. துன்பத்தில் இருப்பவருக்கு கூறும் ஆறுதல் வார்த்தைகள் அவரின் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் சக்தி வாய்ந்தவை. கோபமாக இருக்கும் போது சிந்திக்காது வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். அவை மற்றவரின் மனதை புண்படுத்தலாம். பேசியபின் யோசிப்பதில் எவ்வித பயனும் இல்லை. நாம் பேசும் வார்த்தைகள் கேட்பவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்களைத் தூண்டுபவையாக இருக்கவேண்டும். அதுவே எம்மையும் நல்வழியில் அழைத்துச் செல்லும்.
தூது செல்பவருக்கு முக்கியமானது அவர்களது நாவிலிருந்து வரும் சொற்கள் என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கையில் நாவடக்கம் எவ்வளவு முக்கியமானது என்பதை கீழே குறிப்பிட்டிருக்கும் திருவள்ளுவர் அருளிய இரு குறள்கள் மூலம் நாம் உணர்ந்து அதன்வழி நடப்போம்.
குறள் – “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு”
கலைஞர் அவர்களின் விளக்கவுரை – ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.
குறள் – “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”
கலைஞர் அவர்களின் விளக்கவுரை – நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும். ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
உதாரணக்கதை
வழக்கம்போல் காலைக்கடன்களை முடித்து காலை உணவு உண்டபின் தினசரி பத்திரிகையுடன் வெளிவாசலில் உள்ள கதிரையில் அமர்ந்துவிடுவார் சிவமூர்த்தி. அரச பதவியிலிருந்து போன மாதம்தான் ஓயுவு பெற்றார். அக்கம்பக்க வீடுகளில் இருப்பவர்கள் எல்லோரும் தெரிந்தவர்களே. அவர்கள், தங்கள் அலுவல் நிமித்தம் அவ்வழியே போய்கொண்டும் வந்துகொண்டும் இருப்பர். மதிய உணவுக்கு செல்லும்வரை புதினம் பார்ப்பதும், பத்திரிகை வாசிப்பதும், போவோர் வருவோருடன் கதைப்பதும்தான் அவர் வேலை.
சிவமூர்த்தியின் கதைகள் மற்றவரின் மனதை நோகச் செய்வதாக இருப்பதை அவதானித்த அவரது மனைவி, சந்திரா மிகவும் கவலையடைந்தார். அவருடன் மகிழ்வாக ஓரிரு கதைகள் கதைப்பவர்கள் இப்போது அவரை கண்டும் காணாதமாதிரி விரைந்து கடந்து செல்கின்றனர். ஏன் இந்த மாற்றம் என்று புரியவில்லை. மகன்கள் இந்திரனும் மித்திரனும் வெளியிடங்களில் தொழில் புரிவதால் சனி, ஞாயிறு விடுமுறைகளுக்குத்தான் வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் வரும்போது இது பற்றி கதைக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
விடுமுறையும் வந்தது, பிள்ளைகளும் வந்துவிட்டார்கள். சிவமூர்த்தியும் வெளிவாசலுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு கேட்காவண்ணம் சமையலறைக்கு இருவரையும் அழைத்துச் சென்ற சந்திரா,
“இந்திரா! உங்கள் அப்பா மற்றவரின் மனம் நோக கதைப்பதை நான் ஒருநாளும் கண்டதில்லை. ஆனால் இப்போ சில நாட்களாக அது நடக்கிறது. அவருக்கு தெரிந்தவர்களுள் ஒருவரை பார்த்து, என்னடா இப்படி மெலிந்துவிட்டாய். ஏதாவது வியாதி பிடித்துவிட்டதா. என்று கேட்கிறார். அவரும் பதறியடித்து, அப்படி இல்லையே. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று சொல்ல உடனே உங்கள் அப்பா, எதற்கும் மருத்துவரை போய் பார்த்து பரிசோதனை செய்வது நல்லது என்கிறார். இன்னொருவரைப் பார்த்து, உங்கள் மகள் கணவனுடன் வராமல் ஏன் தனியே வந்திருக்கிறாள். சண்டைபிடித்து கோவித்துக் கொண்டு வந்துவிட்டாளா அல்லது கணவன் துரத்திவிட்டானா, என்றெல்லாம் கேட்கிறார். அவரும் பதறியடித்து, அப்படி ஒன்றுமில்லை, அவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களில் கொஞ்சம் கொடுத்துப் போக வந்திருக்கிறாள், இப்போ கிளம்பப்போகிறாள், என்றபடி அவசர அவசரமாகச் சென்றுவிட்டார். எப்படி இதை நிறுத்துவது என்று தெரியவில்லை. நானும் சாடை மாடையாக சொல்லிப் பார்த்துவிட்டேன். திருந்துகிற பாடில்லை.” எனக் கொட்டித் தீர்த்துவிட்டார்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மித்திரன்,
“அம்மா! கவலையே வேண்டாம். இதை நிறுத்த ஒரு வழி இருக்கிறது. அண்ணா! இன்று இரவு எல்லோரும் இருந்து கதைக்கும்போது நான் சொல்வதற்கு நீயும் ஒத்து ஊதினால் காணும். தான் விடும் பிழையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்வார் பாருங்கள்.” என்றான்.
“அடுத்தவரின் மனம் நோக கதைக்காமல் இருந்தால் போதும். மற்றும்படி அவர் மிகவும் நல்லவர்.” என்று இழுத்தார் தாய்.
“மித்திரா! பார்த்தாயா, அப்பா மேல் அம்மாவுக்கு இருக்கும் காதலை. அவர் ரொம்ப நல்லவராமே.”
சந்திரா வெட்கப்பட, பிள்ளைகள் இருவரும் சத்தம்போடாமல் சிரித்தனர்.
அன்று இரவு உணவு உண்டபின் நால்வரும் அமர்ந்து புதினங்கள் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மித்திரன்,
“அப்பா! நீங்கள் ஓய்வுபெற்று ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஏன் இன்னும் உங்களுக்கு பிரியாவிடை வைக்கவில்லை? வேலையில் ஏதாவது பிழைவிட்டிருக்கிறீர்களா? அல்லது ஈடுபாடில்லாமல் ஏனோ தானோ என்று வேலைக்குச் சென்று வந்தீர்களா? அல்லது அரட்டை அடித்து பொழுதைக் கழித்தீர்களா? எப்படா ஓய்வில் செல்வீர்கள் என்று காத்திருந்து, போனால் போதும் என்று சந்தோஷமாக உங்களை துரத்தாத குறையாக அனுப்பி வைத்தமாதிரித்தான் இருக்கிறது.” என்றான்.
மித்திரனின் கேள்விகளில் மூவரும் வாயடைத்துப் போயினர். சிவமூர்த்தியால் தாங்க முடியவில்லை. அவர் மனம் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது.
“மித்திரா! என்னைப்பற்றி உனக்குத் தெரியாததா? ஏன் இப்படி மனம் புண்படும்படி கதைக்கிறாய்?”
“அப்பா! இப்படியெல்லாம் என்னை ஒருவர் கேட்டார். எனக்கும் தாங்கமுடியவில்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, என்னுடைய அப்பா மிகவும் நேர்மையானவர், அவர் ஓய்வுபெறுவதில் அவருடன் வேலை செய்த அனைவருமே கவலைப்பட்டனர், இப்பவும் அடிக்கடி கைபேசி மூலம் அவர் நலத்தை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கற்பனை பண்ணி எங்கள் மனதை புண்படுத்தாதீர்கள், இவையெல்லாம் என் அப்பாவின் காதில் விழுந்தால் அவர் மனம் என்ன பாடுபடும். தயவுசெய்து இப்படியெல்லாம் பேசாதீர்கள். விபரம் தெரியவேண்டுமென்றால் ஏன் என்று கேளுங்கள். பதிலை நாங்கள் சொல்வோம், என்று கூறிவிட்டேன். அவரும் தான் விட்ட பிழையை உணர்ந்துவிட்டார்.” என்றான் மித்திரன்.
சந்திராவுக்கும் இந்திரனுக்கும் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணம் விளங்கி அமைதி காத்தனர்.
தானும் இப்படித்தானே பலரின் மனம் நோகக் கதைத்திருக்கிறேன் என்பதை கணநேரத்தில் புரிந்துகொண்டார் சிவமூர்த்தி. “நாக்கு ஒரு கொடிய மிருகம் அதை எப்போதும் கட்டியே வை” என்று சும்மாவா சொன்னார்கள். சரியான தருணத்தில் தன்னைக் காத்த கடவுளுக்கு நன்றி கூறியபடி, இனிமேல் இந்த நாவைக் கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டும் என முடிவெடுத்தவர்,
“அடுத்த மாதம் பிரியாவிடை நிகழ்வு வைப்பதற்கு எனக்கு வசதியான திகதியை கேட்டிருக்கிறார்கள், பார்த்துச் சொல்ல வேண்டும். சரி சரி நேரமாகிவிட்டது எல்லோரும் படுக்கைக்குச் செல்லுங்கள்.” என்று கூறியபடி எழுந்தார்.
சிவமூர்த்தியின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை அவதானித்த மூவரும் இனி நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுந்தனர்.
*****