குவியல் 4
முகவுரை
மிக முக்கியமான பயனுள்ள கருத்துக்களை பாமர மக்களும் புரியும் வண்ணம் ஒரு வரியில் புதைத்து வைத்திருக்கின்றார்கள் எமது முன்னோர்கள். அவையே முதுமொழிகள் என்றும் அழைக்கப்படும் பழமொழிகள் ஆகும். அவர்களின் அறிவும் புலமையும் எம்மை வியக்கவைக்கின்றன. இன்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் அறிவுரையோ புத்திமதியோ கூறும்போது பழமொழிகளை உபயோகப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். அவையே அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.
முன்னோர்களின் அனுபவக்குறிப்புக்களான பழமொழிகளில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கின்றேன்.
குவியல் 4 எண்ணம் 1
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

எமது உள்ளத்தில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்துவிடும் எமது முகம். உள்ளத்தை யாராலும் பார்க்க முடியாது. அனால் அதைக் காட்டும் கண்ணாடியாக முகம் தொழிற்படுகின்றது. எமது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாம் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என்பதை அப்பட்டமாக கூறிவிடும்.
பிரச்சனைகளும் கவலைகளும் இல்லாது வாழ்பவர்களின் முகம் மிகவும் இளமையான தோற்றத்துடன் பொழிவாகக் காணப்படும்.
பிரச்சனைகளுடன் கவலைகளை சுமந்து கொண்டிருப்பவர்களது முகம் வயதுக்கு மீறிய முதுமையானதாக காட்சியளிக்கும்.
இறைபக்தியோடு தவவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களது முகத்தில் சாந்தமும் பிரகாசமும் குடியிருக்கும்.
போலிச் சாமியார்களின் முகம் பிரகாசத்தை இழந்திருக்கும்.
கள்ளம் கபடமில்லாதவர்களின் முகம் நிர்மலமாக இருக்கும்.
சூது, வாது, பொறாமை, ஏளனம், பழிவாங்குதல் போன்ற தீய எண்ணங்கள் மனதில் துளிர்விடும்போதே அவர்களது முகம் காட்டிக்கொடுத்துவிடும்.
இவற்றையெல்லாம் விளக்கும் வண்ணம் எமது முன்னோர்கள் ஒரே வரியில் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ எனக் கூறி எம்மை வியக்க வைத்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். உலகம் தீய நடவடிக்கைகளால் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எமக்கு தீங்கு நினைப்போரை அவர்களின் முகத்திலிருந்தே கண்டுபிடித்து அதற்கேற்றவாறு நடப்பதற்கு வழிவகுத்திருக்கின்றார்கள். அதேசமயம் எமது முகம் அழகாகவும் செந்தழிப்பாகவும் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
‘நாற்பது வயதிற்கு மேல் ஒருவனது முக அழகிற்கு அவனே காரணம்’ என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதையும் அதனால் உருவாகும் கவலைகளையும் துன்பங்களையும் தடுக்க முடியாது. அதை எதிர்கொள்ளும் துணிவும் பக்குவமும் இருந்துவிட்டால் அந்த காலகட்டத்தை எளிதாகக் கடந்து சென்றுவிடலாம். என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணமும் விடாமுயற்சியும் கடக்க உதவும் துடுப்புக்களாகும். துன்பங்களும் கவலைகளும் நிரந்தரமானவை அல்ல. அதனால் உள்ளத்தை கவலைகளால் நிரப்பாமல் இறைபக்தியால் நிரப்பி நல்ல எண்ணங்களை மேலோங்கச் செய்து தூய்மையாக வைத்திருப்போமேயானால் எமது முகம் மட்டுமல்ல வாழ்க்கையும் அழகாகி வெற்றிநடைபோடும் என்பதில் ஐயமில்லை.
உதாரணக்கதை
“மாலதி! மணி 12.30 ஆகிவிட்டது. சாப்பிட வா. சாப்பிட்டபின் வேலையைத் தொடரலாம்.”
உமாவும் மீனாவும் மதியபோசனத்திற்காக அலுவலக சிற்றுண்டிச் சாலைக்குச் செல்ல தயாராகி மாலதியை அழைக்க அவள் வேலை செய்யும் பிரிவுக்கு வந்திருந்தனர்.
“நீங்கள் சென்று தொடங்குங்கள். நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்களுடன் வந்து சேர்கிறேன்.”
மாலதியின் பதிலில் தயங்கிய உமாவை மீனா அழைத்துச் சென்றாள்.
“உமா! மாலதியை கவனித்தாயா? அவளின் முகம் வாடி இருந்தது, எங்களைக் கண்டதும் சமாளித்துவிட்டாள்.”
“நான் கவனிக்கவில்லையே.”
“அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது போல் தெரிகிறது. எங்களிடம் சொல்லத் தயங்குகிறாள்.”
“அவளைப் பார்த்தால் வழமைபோல் சந்தோஷமாக இருப்பதுபோல் தான் தெரிகிறது.”
“இல்லை உமா, நன்றாக கவனித்தாயேயானால் அவளின் சந்தோஷம் உள்ளத்திலிருந்து வரவில்லை. நடிக்கிறாள் என்பது துல்லியமாகத் தெரியும்.”
“அப்படியா? என்ன பிரச்சனையாக இருக்கும்? நிச்சயமாக பணப்பிரச்சனையாக இருக்காது. வேறு என்னவாக இருக்கும்?” எனும்போதே மாலதி வருவதைக் கண்டனர்.
“உமா! இப்போது ஒன்றும் இதுபற்றிக் கேட்காதே. நான் அவளிடம் கதைக்கிறேன், நீ அவளின் முகத்திலிருந்து ஏதாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்.”
“சரி, சரி.” என்றாள் உமா.
“இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லையா? நீங்கள் தொடங்கியிருக்கலாம்தானே. நான் வருகிறேன் என்று சொன்னேன் அல்லவா.”
“எப்போதும் ஒன்றாகத்தானே சாப்பிட ஆரம்பிப்போம். அதனால் காத்திருந்தோம்.” என்றாள் மீனா.
“ஏன் மாலதி! எப்போதும் செய்யும் வேலையை நேரத்திற்கு முடித்துவிடுவாயே. எங்களுக்கு முன்பாகவே வந்துவிடுவாய். இன்று என்ன நடந்தது?” மீனா கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டாள். உமா, மாலதியின் முக மாற்றங்களை துல்லியமாக கவனித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் மாலதியால் சமாளிக்க முடியவில்லை. சாதாரணமாக இருப்பதாக அவளால் தொடர்ந்து காட்டிக்கொள்ள முடியவில்லை.
“போதும் மாலதி. உனது சந்தோஷ தருணங்களை எங்களுடன் பகிர்ந்து மகிழ முடிந்தால் உனது துயரத்தை ஏன் எங்களுடன் பகிர முடியவில்லை. எங்களால் ஏதாவது ஆலோசனை கூற முடியும் அல்லது உதவ முடியும் என்ற நம்பிக்கை இல்லையா?”.
“ஐயோ அப்படி இல்லை மீனா. பெரிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் சரியானபின் சொல்லலாம் என்றிருந்தேன்.” என்று இழுத்தாள்.
“மன்னித்துவிடு மாலதி, உனது அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்துவிட்டோம் என்றால் இதை விட்டுவிடுவோம். உனக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் கேட்டோம்.”
“அப்படி நான் எதுவும் நினைக்கவில்லை. இனி என்ன, பிரச்சனை சந்தைக்கு வந்துவிட்டது. உங்களது ஆலோசனைகள் எப்படி எனக்கு உதவப்போகின்றன என்று அலசி ஆராய்வோம்.” அவளை அறியாமலே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மாலதி. தனது துயர தருணத்தில் பங்குகொள்ள தனது சிநேகிதிகள் தயாராக இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்து தனது துயரத்தை பகிரத் தயாரானாள்.
“எப்படித் தெரிந்துகொண்டீர்கள்? நான் எதுவும் கூறவில்லையே?”
“எமது முதாதையர் சும்மாவா சொன்னார்கள், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று. உனது உள்ளத்தில் நிறைந்திருக்கும் துயரத்தை நீ என்னதான் அலங்காரம் செய்து மறைத்தாலும் அது போலியான மகிழ்ச்சி என்பதை முகம் காட்டிக்கொடுத்துவிட்டது.” என உமா கூறியதும் மூவரின் சிரிப்பொலியும் கலகலவென ஒலித்தது. அதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்திருந்தன.
*****