குவியல் 4 எண்ணம் 2
பேராசை பெருநட்டம்

வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு ஆசை இருக்கவேண்டும். ஆசை உந்துசக்தியாக செயற்படுகிறது. ஆசை எமது சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். எம்மால் இயலாததற்கு ஆசைப்படக்கூடாது. அது எம்மை தவறான பாதையில் அழைத்துச் சென்று அழிவைத் தந்துவிடும். அத்துடன் அளவுக்கு அதிகமாக பேராசைப்படவும் கூடாது. பேராசை என்பது எமது சக்திக்கும் வருமானத்திற்கும் அப்பாற்பட்டது. எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் அது அள்ளிச் சென்றுவிடும். ஆசைக்கு ஒரு எல்லை வகுத்தோமெனில் வாழ்க்கை சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
அநாவசிய ஆடம்பரப் பொருட்களும் துரித உணவு வகைகளும் வருமானத்திற்கு மீறிய செலவையும் நோய்களையுமே தரும். மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களில் ஆசைப்பட்டு நாங்களும் அப்படி வாங்கவேண்டும் என உபயோகமில்லாத பொருட்களுக்கு செலவழிப்பது வீணானது. அப்பொருள் எமக்குப் பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் அதை வாங்குவதில் தவறில்லை. அதேபோல துரித உணவு வகைகளுக்கும் ஆசைப்பட்டு மாதத்தில் ஒருமுறை என உண்ணலாம். பேராசைப்பட்டு அடிக்கடி உண்பதால் செலவுடன் நோயையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும்.
சிலர் பணத்தை சேமித்து வைக்காமல் கூடுதலாக பணம் கிடைக்கும் என பேராசைப்பட்டு அதிக வட்டிக்கு கொடுத்து ஏமாந்து போகிறார்கள். இதனால் பொருள் இழப்பு மட்டுமல்லாமல் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
சிலர் பதவிமோகத்தில் தவறான வழிகளை தெரிவுசெய்கிறார்கள். இது உடனடியாக நல்ல பலனைத் தந்தாலும் நாளடைவில் தோல்விகளை சந்தித்து பதவியிழக்க வேண்டிய சூழ்நிலை உருவாவது நிச்சயம்.
பேராசைகொள்வதால் நாம் பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அழிவையே சந்திக்க நேரிடும் என்பதை எம் முன்னோர்கள் ஒரு வரியில் நறுக்கென மனதில் பதியும் வண்ணம் ‘பேராசை பெருநட்டம்’ எனக் கூறியுள்ளார்கள். பேராசை அழிவையே தரும் என்பதை நன்கு உணர்ந்து ஆசைக்கு ஒரு எல்லை வகுத்து வாழ்வோமேயானால் எமது இலக்கின் சிகரத்தைத் தொட்டுவிடலாம்.
உதாரணக்கதை
“பங்குச் சந்தையில் சில நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி அதிகரித்துக்கொண்டு போகிறது. அப்படியான நிறுவனங்களின் பங்குகள் இன்னும் கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.” பாலன் தன் மனைவி குமுதாவிடம் கூற, உடனே குமுதாவும்,
“ஏற்கெனவே போதுமான பங்குகள் வாங்கி வைத்திருக்கின்றீர்கள். அது போதாதா? அவசரத்துக்கென இருக்கும் பணத்தை எடுத்துவிட்டால் தேவைப்படும்போது என்ன செய்வது?”
“பங்குகளின் பெறுமதி ஏறிக்கொண்டு போகிறது. தேவைப்படும்போது கொஞ்சத்தை விற்றுவிடலாம். இலாபமேயன்றி நஷ்டம் வராது.”
“என்னவோ போங்கள். இது சரியெனத் தோன்றவில்லை. நான் சொன்னால் கேட்கவா போகிறீர்கள். யோசித்துச் செய்யுங்கள்.” எனக் கூறிய குமுதா மனதிற்குள் ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டாள்.
வீட்டுச் செலவுக்கு தரும் பணத்திலும் தனது சம்பளப்பணத்திலும் சிறிதளவை எடுத்து வேறாக ஒரு சேமிப்பை ஆரம்பிப்பதற்கு அன்றே வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடிவுசெய்துவிட்டாள்.
சில மாதங்கள் சென்றன.
குடும்பங்களில் கஷ்டங்கள் வருவதும் விலகுவதும் இயல்பே. சில ஊர்களுமே இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களினாலோ பாதிக்கப்பட்டு துன்பமான சூழ்நிலை உருவாவதும் அதை கடந்து வருவதும் உண்டு. ஆனால் நாட்டை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கி எடுத்து மக்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி அமைத்துவிட்டது கோவிட் தொற்றுநோய்.
மக்கள் வீடுகளில் முடங்கி உயிரிழப்புக்களையும் வருமான இழப்புக்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். போக்குவரத்து இல்லாததால் சில இடங்களில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும், சில இடங்களில் வீண் விரயமும் ஏற்பட்டு மக்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது கோவிட். பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் சரிந்து பரிமாற்றங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
பாலனின் முகத்தில் ஈயாடவில்லை. குமுதாவின் சொல்லைக் கேட்காமல் பேராசைப்பட்டது எவ்வளவு தவறு என்பதை நினைத்து நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருந்தான். அவசரத்தேவைக்கு பணத்தை எடுக்க முடியாது. எந்தநேரத்திலும் குமுதா பணத்தேவையைக் கூறலாம். என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் குமுதாவோ பணத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமல் வீட்டுவேலைகளைப் பார்ப்பதும் கணவனின் தேவைகளை முகம் சுழிக்காமல் கவனிப்பதும் தங்களது மூன்று வயது மகனுடன் விளையாடுவதுமாக பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தாள். கணவனின் தவிப்பு அவளுக்கு புரியாமல் இல்லை. இனிமேல் எந்த விஷயத்திலும் பேராசை படக்கூடாது என்ற புரிதல் வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் போகட்டும். அதன்பிறகு தனது சேமிப்பைப்பற்றிக் கூறலாம் என்ற எண்ணத்துடன் கணவனை கண்காணித்த வண்ணம் குமுதா வலம் வந்துகொண்டிருக்கிறாள்.
*****