குவியல் 5 எண்ணம் 3

கெடுவது செய்யின் விடுவது கருமம்
பூவுலகில் மனிதன் வாழ்வதற்கு உழைப்பு அவசியம். தனக்கு அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும். அவரவர் அறிவுக்கேற்ப, திறமைக்கேற்ப, விருப்பமான கல்வி, தொழிற்கல்வி கற்று வருமானம் ஈட்டுவதற்கு தயாராகிறார்கள்.
உழைப்பதற்கு எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்கின்றன. விவசாயம், மருத்துவம், பொறியியல், ஆசிரியர், வியாபாரம், போக்குவரத்து, நீதித்துறை, பாதுகாப்புத்துறை, அலுவலக வேலைகள், கூலிவேலைகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். அவற்றில் பிறருக்கு தீங்கு விளைவிக்காத வழிகளில் தொழில்புரிவது அவசியம். பலர் சுயநலமாக தங்கள் நன்மையையும் பயனையும் மட்டுமே கருத்திற்கொண்டு பணிபுரிகிறார்கள்.
பொருட்களில் கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை, பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் நிறுவுதல், போன்ற பல நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் செய்கிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகள் நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தாலும் காலப்போக்கில் அவர்களுக்கே தீய பலன்களைத் தந்துவிடும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்னும் முதுமொழி யாவரும் அறிந்ததே.
நாம் செய்யும் வேலையில் ஈடுபாடும் விருப்பமும் கவனமும் இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால் அந்த தொழில் புரியக்கூடாது. வருமானத்திற்காக கவலையீனமாக செய்யும் சில தொழில்கள், தொடர்புடையவர்களை கடுமையாக பாதிக்கும். மருந்துகளை, மருத்துவ அறிக்கைகளை மாற்றிக் கொடுத்தல், அலுவலகங்களில் பிழையான தரவுகளைக் கொடுத்தல், பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் தவறிழைத்தல், வாகனங்களை ஒழுங்காக பராமரிக்காமல் பாவித்தல் (புகை கக்குதல், தடுப்பக்கருவி (brake), சமிக்ஞை விளக்கு (signal light) போன்றவை ஒழுங்காக வேலை செய்யாமை) என கூறிக்கொண்டே போகலாம்.
நாம் செய்யும் செயல் தீங்கு விளைவிக்கும் என்பது தெரிந்துவிட்டால் அச்செயலை நிறுத்திவிடவேண்டும் என்ற பொருள்பட கொன்றைவேந்தனில் ஔவையார் பின்வருமாறு கூறியுள்ளார்.
கொன்றை வேந்தன் – “கெடுவது செய்யின் விடுவது கருமம்”
கவிஞர் பத்மதேவன் அவர்களின் விளக்கவுரை – செய்யும் செயலானது கெடுதலை விளைவிக்குமானால் அது விட்டு விடுவதற்குரியதாம்.
ஒவ்வொருவரும் இதை மனதிற்கொண்டு செய்யும் செயல்களின் பின்விளைவுகளை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பணிகளை மேற்கொள்ளும்போது வீடும் நாடும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடும் என்பதில் ஐயமில்லை.
உதாரணக்கதை
“கண்ணா, என்ன செய்கிறாய்? எத்தனை தடவைகள் விளங்கப்படுத்துவது? விரைவாகச் செய். வீட்டுப் பாடம் செய்ய எவ்வளவு நேரம் செல்கிறது? அங்குமிங்கும் பார்க்காமல் பாடத்தில் கவனத்தை செலுத்து.”
தொண்டை கிழிய கத்தி முடிய மாலதி, கண்ணனின் அன்னை, மீண்டும் தனது கைபேசியில் மூழ்கி விட்டாள்.
வேலைக்குச் செல்லும் மாலதி மாலை வீடு திரும்பியதும் தேநீர் அருந்திவிட்டு ஒரே மகன் கண்ணனின் வீட்டுப்பாடம் செய்ய உதவிய பின் தான் இரவு உணவைப் பற்றிச் சிந்திப்பாள். படிப்பிக்கும் நேரம்தான் சிறிது ஓய்வு கிடைத்து கைபேசி பார்ப்பது வழக்கம்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் கெட்டிக்கார சிறுவன் கண்ணன். ஏனோ வீட்டுப்பாடம் செய்யும் நேரம் மந்த நிலையில் இருப்பான். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வீட்டுப்பாடம் செய்து முடிப்பான். கெட்டிக்காரனாக இருக்கின்றான், ஆனால் வீட்டுப்பாடம் செய்ய ஏன் கஷ்டப்படுகின்றான் என்று தெரியவில்லை என கணவன் கோபியிடம் எத்தனையோ தடவைகள் முறைப்பாடு செய்துவிட்டாள். வேலை முடிந்து வெளி வேலைகள் பார்த்து வர நேரம் செல்வதால் அவனால் இதை கவனிக்க முடியவில்லை.
அன்று மழை பெய்துகொண்டிருந்ததால் விரைவாக வீடு திரும்பிவிட்டான் கோபி. மாலதி, கண்ணனுக்கு பாடங்களை விளங்கப்படுத்திக்கொண்டிருப்பதை அவதானித்தபடி தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் கோபி.
படிப்பித்தபின், “சரி, இனி வீட்டுப்பாடங்களை செய்.” என்ற மாலதி வழமைபோல கைபேசியில் மூழ்கிவிட்டாள்.
வீட்டுப் பாடம் செய்துகொண்டிருந்த கண்ணன் இடையிடையே அருகிலிருந்த மாலதியின் கையிலிருந்த கைபேசியை கவனிப்பதை பார்த்த கோபிக்கு கண்ணனின் மந்தநிலை ஏன் என்று புரிந்துவிட்டது.
கண்ணனின் முன்னிலையில் ஏதும் பேசாதிருந்தவன், அன்று இரவு கண்ணன் நித்திரையான பின் மாலதியிடம்,
“கண்ணனின் கவனக்குறைவு எதனால் என கண்டுபிடித்துவிட்டேன்.” என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மாலதி.
“ஆம் மாலதி. நீ கைபேசியை பார்க்கும் நேரமெல்லாம் அவனது கவனம் முழுவதும் பாடத்தில் இல்லை, உனது கைபேசியில்தான் இருக்கிறது. அவன் சிறு பிள்ளைதானே. அதில் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் எட்டி எட்டி பார்க்கிறான். அது உனக்குத் தெரியவில்லை. இதுதான் அவனது கவனக்குறைவுக்குக் காரணம்.”
“அப்படியா! நான் அதை கவனிக்கவில்லை.” மாலதிக்கு தன் தவறு புரிய ஆரம்பித்தது.
“அத்துடன் இந்த வயதிலேயே கைபேசியை பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டால் பின்பு அதை கையாள்வதற்கும் முயற்சி செய்து பிடிவாதம் பிடிக்கப்பார்ப்பான். இதனால் படிப்பு மட்டும் அல்ல கண்களும் பாதிப்படையும். சிறு வயதிலேயே கைபேசியில் ஆரம்பித்து மடிக்கணணி, கணணி என தொடர்ந்தால் அதற்கு அடிமையாகிவிடுவான்.”
“ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான்.”
“ஒரு விஷயம் கெடுதலை செய்கிறது என்பது தெரிந்துவிட்டால் அதை நாம் விட்டுவிடுவது நல்லதுதானே?”
“அதுதான் நல்லது.”
“அதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், என் செல்ல மாலுக்குட்டி, கண்ணுக்குட்டி படித்து வீட்டுப்பாடம் செய்து முடியும் வரை கைபேசியை தொலைவில் வைத்துவிடுவாளாம். கண்ணுக்குட்டியும் விரைவில் படித்து முடித்துவிட்டு விளையாட சென்றுவிடுவானாம். அந்த நேரம் மாலுக்குட்டி கைபேசியை பார்ப்பாளாம். எப்படி இருக்கிறது இந்தக் கதை?” என்று விளையாட்டாக பிரச்சனைக்கு தீர்வு சொன்னான் கோபி.
தன் தவறை உணர்ந்த மாலதியும் விளையாட்டாகவே. “அட, இது நல்ல கதைதான். மாலுக்குட்டி கைபேசி பார்க்கும் நேரம் கோபிச் செல்லம் இரவு உணவு சமைப்பாராம். இது எப்படி?” என்று சிரித்தவளை அணைத்தபடி “நான் சமைப்பதை நீங்கள் உண்பீர்கள் என்றால் இதுவும் நல்ல கதைதான்.” என்றான் கோபி நிம்மதியுடன்.
பெற்றோர் குழந்தைகளை அவதானிப்பது அவசியம். அதே நேரம் குழந்தைகளும் பெற்றோரை அவதானிக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
*****