குவியல் 5 எண்ணம் 4

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
ஒரு நாட்டில் வாழும் மக்களை ஏழை, மத்தியதர, பணக்கார வர்க்கத்தினர் என பிரித்தறியலாம். இந்த மூன்று வர்க்கத்தினருள்ளும் படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப உழைக்கும் வழி அமைந்திருக்கும்.
படித்தவர்களில் சிலர் வேலை வாய்ப்பின்றி ஏழைகளாகவே இருக்கிறார்கள். அதற்கான காரணங்களில் ஊழலும் லஞ்சமும் அடங்கும். படிக்காதவர்களில் பலர் வியாபாரம் செய்து அதன் நுணுக்கங்களை அனுபவம் மூலம் அறிந்து பணக்காரர்களாக இருக்கிறார்கள். பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் எண்ணம் இல்லாதவர்கள், ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து கரை சேர்த்தால் போதும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களும், கடன் இல்லாமல் இருந்தால் போதும் என்று நினைப்புடன் இருப்பவர்களும் மத்தியதர வர்க்கத்தினராக இருக்கிறார்கள்.
ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை பொருட்களின் விலை ஒன்றே.
இலவச கல்வி;
இலவச மருத்துவம்;
கிராமந்தோறும் மருத்துவச்சிகளை நியமித்து வீடுதோறும் சென்று அங்குள்ள கர்ப்பிணிப் பெண்களையும் பிறந்த குழந்தைகளையும் (அவர்கள் பாடசாலைக்கு செல்லும் வயது வரும்வரையிலான காலப்பகுதியில்) அவதானித்து பராமரிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதுடன் அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துவகைகள், சத்துமா போன்றவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்;
விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் விதைகள் போன்றவற்றை நியாயமான விலையில் வழங்குதல்;
என பலவிதங்களிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உதவுகிறது.
அத்துடன் வறியவர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை செய்கிறது.
குறிப்பிட்ட வருமானத்திற்குக் கீழ் பெறுபவர்களுக்கு மாதமொருமுறை குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்குதல்;
விதவைகளுக்கு சுயதொழில் தொடர்பாக உதவுதல்;
வருமானம் எதுவுமின்றி தனியே இருக்கும் முதியவர்களுக்கு மாதமொருமுறை குறிப்பிட்ட அளவு பணம் வழங்குதல்
போன்றவையாகும்.
மேலும்,
பிச்சை எடுப்பவர்களை ஒன்று திரட்டி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்துக் கொடுத்தல்;
பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளிலும், கடைகளிலும் நின்று உழைக்கும் சிறுவர்களை இனம் கண்டு கல்வி அறிவைப் புகட்ட கட்டாயக் கல்வியை அமுல்படுத்தல்;
கட்டணம் கட்டாது மின்சாரத்தை களவாக பாவிக்கும் நபர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவதால் நிதி பற்றாக்குறை நீங்கி மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு வழிசமைத்தல்;
நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாதசாரிகளின் இடையூறற்ற போக்குவரத்திற்கு உதவுதல்;
குளங்களை மறுசீரமைத்து பராமரித்து நீர், மின்சார பற்றாக்குறையை தவிர்த்தல்;
ஆடம்பரப் பொருட்களுக்கு உயர் வரி நிர்ணயித்தல்;
சிகரெட், குடி வகைகள் போன்றவற்றின் வரியை உயர்த்துவதுடன் அவற்றின் பாவனையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்;
போன்றனவற்றையும் கருத்திற்கொண்டு மக்களின் நலனைப் பேணுவது அரசின் முக்கிய கடமையாகும்.
இவை மட்டுமல்லாது லஞ்சம், ஊழல் என்பவற்றை காணுமிடத்து தொடர்பானவர்களுக்கு அதி உயர் தண்டனை வழங்கி இந்த எண்ணம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது நாட்டை வறுமையற்ற நாடாக உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
ஒரு அரசனின் முக்கிய கடமை என்ன என்பதை கொன்றைவேந்தனில் ஔவையார் பின்வருமாறு கூறுகிறார்.
கொன்றைவேந்தன் – “கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி”
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – மன்னவன் அறிந்திருக்கவேண்டியது நாட்டு மக்களுக்கு உற்ற கணத்தில் உதவி செய்வதே.
உதாரணக்கதை
அந்தக் கிராமத்து மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். அவர்கள் பாடுபட்டு உழைப்பதும், இயற்கை அனர்த்தத்தினால் அவற்றைத் தொலைப்பதும் அங்கு தொடர்கதையாக நடந்து வருகிறது. அந்தக் கிராமத்து அரச உத்தியோகத்தரும் தகுந்த நேரத்தில் நட்டஈட்டை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுத்துவிடுவார். அழிவின் ஒரு பகுதியாகவே அது இருக்கும். அழிவை தடுக்க, பாதுகாப்பாக இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிந்திக்கக்கூட நேரமில்லாமல் வேலையிலேயே முழுக்கவனத்துடன் இருக்கப் பழகி விட்டார்கள்.
அன்று பார்த்திபன் அந்தக் கிராமத்து அரச உத்தியோத்தராக மாற்றலாகி வந்து பதவியேற்றார். முன்பு கடமையாற்றிய கிராமத்து மக்களின் மரியாதையையும் அன்பையும் சம்பாதித்திருந்தவரின் முக்கிய குறிக்கோள் அவர் பொறுப்பேற்கும் கிராமத்து மக்களின் முக்கிய தேவைகளை தாமதிக்காது நிறைவேறுவதாகும். அந்தக் கிராமத்திற்கு வருமுன்பே அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் நன்கு அறிந்திருந்தார். அன்று ஊர்ப் பெரியவர்கள் ஐவர் வந்து பார்த்திபனை வரவேற்று தங்களை அறிமுகம் செய்தனர். அவர்களிடம் தன்னைப்பற்றி கூறிய பார்த்திபன் தான் தொடங்கவேண்டிய வேலையை ஆரம்பிப்பதற்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு இதுதான் தக்க சமயம் என நினைத்தவர்,
“ஐயா, இந்த ஊர் மக்களின் விவசாயம் எப்படி இருக்கிறது? விதை, உரம், எரிபொருள் எல்லாம் ஒழுங்காகக் கிடைக்கின்றதா?”
“ஆம் தம்பி. நீங்கள் வருமுன் இங்கு கடமையாற்றிய கருணாகரன் தம்பி எல்லாம் சரிவர கிடைக்க ஒழுங்கு செய்து தந்திருக்கிறார். அதனால் பிரச்சனை இல்லாமல் நடக்கிறது. ஆனால்…” என இழுத்தவரைப் பார்த்து,
“தயங்காமல் சொல்லுங்கள் ஐயா. உங்கள் குறைகளை நீக்குவதற்க்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.”
“மழைக்காலத்தில்தான் தம்பி அழிவுகளும் நோய்களும் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறோம். அதை எப்படி நிறுத்த முடியும்? ஏதோ எங்களுக்கு பழகிவிட்டது. சமாளித்துக் கொண்டு வாழ்கிறோம். மற்றும்படி ஒரு பிரச்சனையும் இல்லை.”
“மழைக்காலத்தை நல்லபடியாக கடந்து செல்ல என்னால் ஆன நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்கிறேன். அதற்கு முதலில் நீங்கள் மக்களிடம் இருந்து சில தகவல்களைப் பெற்றுத் தரவேண்டும்.”
“நிச்சயமாகத் தம்பி. என்ன தகவல்கள் வேண்டும் என்று கூறுங்கள்.”
“எனது உதவியாளரிடம் எழுதுவதற்கு புத்தகம் ஒன்றைக் கொடுத்து எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறேன். அதில் அவர்கள் தங்கள் வீட்டு விலாசத்துடன் குடும்பத் தலைவரின் பெயரையும் எழுதி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் எழுதித் தரும்படி கூறுங்கள். அவற்றை வைத்து நான் இந்தக் கிராமத்திற்கு என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். செய்வீர்களா?”
“உங்கள் உதவியாளர் இந்தக் கிராமத்துப் பையன்தானே. எல்லோருக்கும் அவரைத் தெரியும். தயங்காமல் விபரங்கள் தருவார்கள். நீங்கள் முன்பு கடமையாற்றிய கிராமத்தில் எப்படி பாடுபட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இங்கும் வந்த முதல் நாளே எங்களைப்பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள். மிகவும் நன்றி தம்பி.”
கண்கள் கலங்க கை கூப்பி விடைபெற்றுச் சென்றனர் அந்தப் பெரியவர்கள்.
அடுத்த இரு கிழமைகளில் விபரங்கள் வந்து சேர்ந்துவிட்டன. இன்னல் வந்தபின் உதவுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தவழி என்பதை நன்கு உணர்ந்த பார்த்திபன் தனது கடமைகளை விரைந்து செய்யத் தொடங்கிவிட்டார்.
மழைக் காலம் தொடங்குவதற்கு முன்
குளத்தையும் வாய்க்கால்களையும் மறுசீரமைத்தல்
மழைநீர் தேங்காமல் வழிந்தோட வழிசெய்தல்
வீடுகளில் கூரைகளை திருத்தல்
வெள்ளம் வீட்டுக்குள் உட்புகாதிருக்க அணைகள் ஏற்படுத்தல்
கிணறுகளில் சேறு இல்லாமல் சுத்தமாக்குதல்
பெரிய பயன்தரு மரங்களுக்கு அதர் வெட்டிவிடல்
கலந்துரையாடல் மூலம் மக்களை சந்தித்து தொற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்
அவசரத்திற்குத் தேவையான உலர் உணவுகளை களஞ்சியப்படுத்தி வைத்திருத்தலை ஊக்கப்படுத்தல்
போன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.
அதுமட்டுமல்லாது கிராமத்து அடிப்படை வைத்தியசாலையில் தேவையான மருத்துவ பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியதுடன் பாடசாலையிலும் அவசரத்திற்கு மக்கள் வந்து தங்குவதற்குரிய ஏற்பாட்டையும் செய்திருந்தார். அத்துடன் அரசிடமிருந்து உலர் உணவு வகைகளை முற்கூட்டியே தேவையான அளவு பெற்று களஞ்சியப்படுத்திவிட்டார்.
மக்களும் உற்சாகத்துடன் தங்களுக்குரிய வேலைகளில் ஈடுபட்டு மழைக்காலத்தை மகிழ்வோடு வரவேற்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே அரச உத்தியோகத்தரின் முதல் கடமை என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் பார்த்திபன்.
*****