குவியல் 5 எண்ணம் 5

தோழனோடும் ஏழமை பேசேல்
எக்காலத்திலும் எம் வாழ்க்கையை உயர்த்தும் காரணிகளுள் நேர்மறை எண்ணங்களும் ஒன்றாகும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வறுமை எம்மைப் பீடித்தாலும் மனம் தளராமல், எல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்திருத்தல் வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நினைப்புடன் முயற்சியைக் கைவிடாது பாடுபட வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சலாகாது. முயற்சிகள் தொடரவேண்டும். முயலும் வழிகளை மாற்றலாம். நேர்வழியாக இருந்துவிட்டால் தாமதமானாலும் நிரந்தரமான வெற்றி நிச்சயம்.
வாழ்க்கை வட்டத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயல்பு. இன்பத்தை அனுபவிக்கும்போது துன்பத்தையும் எதிர்கொள்ளும் துணிவு இருத்தல் வேண்டும். அதற்காக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் இனி என்ன துன்பம் துரத்திக்கொண்டு வரப்போகிறதோ என்ற பயத்துடன் இருப்பது அர்த்தமற்றது. அது வரும்போது வரட்டும், சற்று கவனமாக இருந்துவிட்டால் சுலபமாக அந்தக் காலத்தையும் கடந்துவிடலாம்.
நாம் மிகவும் நெருக்கமாகப் பழகுவது நண்பர்களுடன். அவர்களிடம் ஒளிவு மறைவின்றி சகல விஷயங்களையும் பகிர்ந்து மகிழ்வோம், ஆறுதல் அடைவோம். அப்படியான நண்பர்களிடம் கூட ஏழமையை பேசக்கூடாது என்று ஔவையார் கூறுகிறார்.
கொன்றைவேந்தன் – “தோழனோடும் ஏழமை பேசேல்”
கவிஞர் பத்மதேவன் அவர்களின் விளக்கவுரை – உன் நண்பனிடாதில் கூட உன் தரித்திர நிலையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொள்ளாதே.
ஒருவருடைய வறுமைநிலையை அறிந்துவிட்டால் சந்தோஷப்படுபவர்களும் இருக்கிறார்கள், பரிதாபப்படுபவர்களும் இருக்கிறார்கள். சில இடங்களில் மதிப்பையும் மரியாதையையும் இழக்க நேரிடும். ஏதாவது உதவி கேட்டாலும் என விலகிச் செல்வோரும் இருக்கிறார்கள். பணத்தேவைக்காக ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகப்பார்வையில் அகப்பட்டு கூனிக் குறுக வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
வறுமை என்பது நிரந்தரமானதல்ல. விடாமுயற்சியும் அயராத உழைப்பும் வறுமையை போக்கிவிடும். ஆனால் இழந்த மானத்தையும் மரியாதையையும் மீட்டெடுப்பது மிகவும் கடினமாகும். அதனால் ஏழ்மை நிலை வந்துவிட்டால் மற்றவர்களுடன் அதைப் பகிராது துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் சிந்தித்து செயலாற்றி ஏழ்மையை துரத்துவோம். தன்மானத்துடன் வாழ்வோம்.
உதாரணக்கதை
“என்ன லதா, அவசரமாக அழைத்தாய். மாலைவரை பொறுக்க முடியாதவாறு அப்படி என்ன அவசரம்?” என்று கூறியபடி அந்த சிற்றுண்டிச் சாலை இருக்கையில் அமர்ந்தான் லதாவின் காதலன் கிருபா.
“ஏதாவது தப்பாக நடந்துவிடக்கூடாதே என்றுதான் அவசரமாக அழைத்தேன்” என்றபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் லாதா.
“எனக்கு விளங்கவில்லை. நீ எதைப்பற்றிக் கூறுகிறாய்?.”
“ஒருவருக்குமே தெரியாத ஒரு விஷயம், எனக்கு இன்றுதான் தெரியும். அதைப்பற்றிக் கதைக்கத்தான் வந்திருக்கிறேன்.”
“சரி, சரி, விரைவாகச் சொல். அலுவலகத்தில் எனக்கு வேலை இருக்கிறது.”
“சீலன் உமாவிடம் தனது காதலைச் சொல்லிவிட்டானா?.”
“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?.”
“சொல்கிறேன். முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்.”
“இல்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான்.”
“அப்பாடி, தப்பிவிட்டான்.”
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?.”
“இன்று காலையில்தான் உமா, அவளது தந்தையின் வியாபாரம் பெரும் நஷ்டத்தில் இருக்கிறது என்றும் கடன்சுமையில் தந்தை தவிக்கின்றார் என்றும் மிகவும் கவலையுடன் சொன்னாள். யாரையோ நம்பி ஏமாந்துவிட்டாராம். தம்பியும் தங்கையும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது உமாவின் வருமானம் தான் அவர்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது. எப்போதுதான் இந்த நிலை மாறும் என்று தெரியவில்லை என புலம்பிக்கொண்டிருந்தாள்.”
“அதற்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?” எரிச்சலுடன் வினவினான் கிருபா.
“தெரிந்தும் ஏன் சொல்லவில்லை? வீணாக கடன்சுமையுடன் இருக்கும் குடும்பத்துள் நண்பன் சென்றுவிட்டானே என்று கவலைப்படக்கூடாது என்றுதான் இதை முன்னேற்பாடாக சொல்வதற்கு வரச் சொன்னேன்.”
ஔவைப் பிராட்டியார் அருளிய கொன்றை வேந்தன், “தோழனோடும் ஏழமை பேசேல்” கிருபாவின் மனதில் வந்துபோனது. எவ்வளவு உண்மையான வரிகள் என வியந்தவன் குரலில் சினம் சிறிது தலை தூக்க,
“உமா உன்னுடைய உயிர்த்தோழி என்று அடிக்கடி சொல்வாயே. அவளுக்கு உதவுவதை விடுத்து இப்படி செய்கிறாயே. எனக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை.”
“எனக்கும் இது பிடிக்கவில்லைத்தான். அவள் எனது உயிர்த்தோழிதான். ஆனால் நாளைக்கு என்மீது குறைவரக்கூடாது என்றுதான் சொல்கிறேன். வேறு ஒருவருடனும் இதைப் பற்றி கதைக்கமாட்டேன். வந்த வேலை முடிந்துவிட்டது. நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன்.” என்று விடைபெற்றாள் லதா.
இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்பது இவளுக்குப் புரியவில்லையா. இடையிடையே தோல்விகளையும் சந்திக்க நேரிடலாம். உமாவின் தந்தை மிகவும் நல்லவர் என்பதுடன் விடாமுயற்சி உடையவர். நிச்சயம் இந்தக் கஷ்டம் அடுத்தவருக்கு தெரியுமுன் மீண்டு வந்துவிடுவார். அவசரப்பட்டு உமா வாயை விட்டுவிட்டாளே, என வேதனையுடன் எழும்பியவன் முடிவெடுத்துவிட்டான். சீலனுடன் இதுபற்றி பேசப்போவதில்லை என தீர்மானித்துவிட்டான்.
சீலன் மிகவும் பொறுப்பானவன், வசதியானவன். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவன் அல்ல. சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்பவன். இதை ஒரு சவாலாக ஏற்று நிச்சயமாக உமாவின் தந்தைக்கு உதவியாக இருப்பான். என்றெல்லாம் நினைத்துப் பார்த்தவன், உமாவிடம் சீலன் காதலை விரைவில் சொல்வதற்கு வழியேற்படுத்த வேண்டும் என்ற முடிவுடனும் உற்சாகத்துடனும் அலுவலகம் நோக்கி விரைந்தான் கிருபா என்னும் கிருபாகரன்.
*****