குவியல் 6
முகவுரை
எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம்.
இப்பகுதியில் கல்வி, செல்வம், வீரம் என்பன தனித்தனியே எமது வாழ்க்கையில் என்னென்ன பங்கினை வகிக்கின்றன என்பதனைப் பார்ப்போம். குவியல் 6 இல் மூன்று எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன்.
குவியல் 6 எண்ணம் 1
கல்வி

ஏற்கெனவே குவியல் 2 இல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்துள்ளோம். இங்கு கல்வி எப்படியெல்லாம் எமக்கு உதவுகிறது என்பதனைப் பார்ப்போம்.
கல்வி எம்மை நல்லவனாக்குகிறது
கல்வி எம்மை உயர்த்துகிறது
கல்வி எம்மை வழிநடத்துகிறது
கல்வி எம்மை இலக்கை நோக்கி நகர்த்துகிறது
கல்வி எம்மை மதிப்புக்குரியவராக்குகிறது
மொத்தத்தில் கல்வி எம்மை வாழவைக்கிறது
இப்படியே கல்வியின் சிறப்பைக் கூறிக்கொண்டே போகலாம்.
இவ்வுலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது. எப்பாடுபட்டாவது கல்வி அறிவைப் பெற்றுவிட்டால் எல்லாச் சிறப்பக்களும் எம்மைத் தேடி வரும். கல்வி அறிவைப் பெறத் தவறிய பெற்றோர்க்கு அதன் அவசியமும் அருமை பெருமைகளும் நன்றாக விளங்கியிருக்கும். எனவே படிப்பறிவில்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு ஏறாது என அலட்சியமாக இருக்காது பிள்ளைகளை படிக்க வைக்க முயற்சி செய்யவேண்டும். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தைக் கொடுக்கவேண்டியது பெற்றோரின் கடமை என்ற உணர்வுடன் முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை.
கல்வியின் சிறப்பை ஔவைப்பிராட்டியார் மூதுரையில் பின்வருமாறு கூறுகிறார்.
மூதுரை – மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇட மெல்லாம் சிறப்பு.
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – நாட்டை ஆளுகின்ற அரசன், குற்றமறக் கற்றவன் ஆகிய இவ்விருவரில் யார் அதிகச் சிறப்புடையோர் என ஆராய்ந்து பார்த்தால், அரசனைவிடக் கற்றவனே அதிகச் சிறப்புடையவனாகிறான். (எப்படியெனில்) அரசனுக்குத் தான் ஆளுகின்ற நாட்டில் அல்லாமல் வேற்று நாட்டில் மதிப்பு இல்லை; ஆனால் கற்றவர்களுக்கு அவர்கள் சென்ற சென்ற இடங்களிலெல்லாம் (அவை எந்தத் தேசத்தைச் சேர்ந்தவையாயிருப்பினும்) மதிப்புக் கிட்டுகிறது.
மாசு – குற்றம். சீர்தூக்கல் – ஆராய்தல்.
கல்வியை சரியான முறையிலும் மாணவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ணம் சுவாரஸ்யமாகவும் போதிக்கவேண்டியது ஆசிரியரின் கடமையாகும். நல்லொழுக்கமும் நல்ல பழக்கவழக்கங்களும் கல்வியினூடாக மாணவர்களை சென்றடையச் செய்வதும் ஆசிரியரின் முக்கிய கடமையாகும். அத்தகைய அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குருவிற்கு மரியாதை செலுத்துவதும் மதிப்பளிப்பதும் ஒவ்வொரு மாணாக்கரினதும் பெற்றோரினதும் கடமையாகும்.
கற்ற கல்வியை தொலைக்க முடியாது. யாராலும் திருடவும் முடியாது. அழிவற்ற செல்வம் கல்வி. இதை திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
குறள் – கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கலைஞர் அவர்களின் விளக்கவுரை – கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கல்வியின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் இன்னுமொரு குறளில் பின்வருமாறு கூறுகிறார்.
குறள் – எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
கலைஞர் அவர்களின் விளக்கவுரை – எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக்கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
கல்வி பதவியைத் தந்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டித்தந்து வளமாக வாழ வழிசமைக்கிறது.
ஏமாற்று உலகில் நேர்மையான உழைப்பிற்கு வழிகாட்டுகிறது. அதனைப் பாதுகாப்பதற்கும் புத்திசாலித்தனத்தை தருகிறது.
கல்வி அறிவு நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கிறது. இன்னல்களிலிருந்து பாதுகாப்பாக தப்பிக்கும் வழிகளை ஆராய வைக்கிறது.
கல்வி அறிவு நாட்டுக்கு ஒரு நல்ல பிரஜையை உருவாக்குகிறது.
உதாரணக்கதை
அருகிலிருக்கும் பெரிய தோட்டம் ஒன்றில் கூலிவேலை செய்பவன் பாலன். மனைவி சுடர், தங்களுக்குத் தேவையான காய்கறிகளுக்கு பஞ்சமில்லாமல் சிறிய வீட்டுத்தோட்டம் ஒன்றை உருவாக்கி பராமரிக்கும் பெண். கணவனது வருமானத்திற்குள் பார்த்துப் பார்த்து செலவு செய்பவள். இருவரும் படிப்பை சரிவர தொடரவில்லை. இவர்களுக்கு ஒரே மகன் சுதன். நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் கெட்டிக்காரப் பையன். சிலசமயங்களில் பெற்றோரிடையே ஏற்படும் வாக்குவாதங்களை பார்த்து ஆச்சரியப்படுவான். ஏனென்றால் பெரும்பாலும் ஒருவர் மற்றொருவரின் நன்மைக்காகத்தான் வாக்குவாதம் செய்வார்கள். இருவரும் ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் அன்பும் அக்கறையுமே அதில் கலந்திருக்கும்.
நன்றாகப் படித்து பெற்றோரை மகிழ்வாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என மனதுள் நினைத்துக்கொள்வான் சுதன்.
அன்று நித்திரைக்குச் செல்லும்போது அன்றிரவு நடந்த வாக்குவாதத்தை நினைத்து சுதனுக்கு மகிழ்ச்சியாகவும் சிறு வருத்தமாகவும் இருந்தது.
அன்றிரவு உணவு உண்ணும்போது,
“என்ன சுடர் உனது தட்டில் ஒன்று குறைகிறது.”
“இன்று எனக்கு சாப்பிட மனமில்லாமல் இருக்கிறது. அத்துடன் பசியுமில்லை.” என இழுத்தாள் சுடர்.
“அப்பா! இரண்டு முட்டைகள்தான் இருந்து எனக்கும் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள்.”
“சுடர்! இருப்பதை இருவரும் பங்கிட்டு சாப்பிடவேண்டும் என்று உனக்கு எத்தனை முறை கூறுவது. நானும் சுதனும் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதுமா? எங்களைக் கவனிக்க நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா?” கூறிக்கொண்டே தனக்கு வைத்ததில் பாதியை மனைவியின் தட்டில் வைத்தான் பாலன்.
நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இரண்டு நாட்களாக சுடருக்கு உடம்பு முடியவில்லை. நடுங்கிக் கொண்டு காய்ச்சல் வரும். காய்ச்சலுக்குரிய மாத்திரை போட்டபின் நின்றுவிடும். பிறகு மறுபடியும் வரும். இருநாட்களாக கை மருந்தாக கசாயம் வைத்துக் குடித்து கணவனுக்கும் மகனுக்கும் தெரியாமல் சமாளித்துக் கொண்டிருந்தாள். மூன்றுநாள் காய்ச்சல் சரியாகிவிடும் என மனதை தேற்றிக்கொண்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
பாலன் காலையில் வீட்டுத்தோட்டத்தை மேற்பார்வை செய்துவிட்டு வேலைக்குச் சென்று இரவு திரும்புவதால் இதை கவனிக்கவில்லை. ஆனால் சுதன் கவனித்துவிட்டான்.
“அம்மா! மிகவும் சோர்வாக காணப்படுகிறீர்கள். என்ன செய்கிறது?”
“அது மூன்று நாள் காய்ச்சல். மாத்திரை போட்டு கசாயமும் குடிக்கின்றேன். சரியாகிவிடும். உனக்கு பாடசாலைக்கு நேரமாகிறது, விரைவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பு.”
“உங்கள் குரல் நடுங்குகிற மாதிரி இருக்கிறது. உடம்பும் நடுங்குகிறதா? அலட்சியமாக இருக்காதீர்கள் அம்மா. மழைக்காலத்தில் நுளம்பினால் டெங்கு, மலேரியா நோய்கள் பரவுகிறது. வீட்டையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பாடசாலையில் எங்களுக்கு படிப்பித்திருக்கிறார்கள். அந்நோய்களுக்கான அறிகுறிகளையும் கூறி, அப்படியிருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லும்படியும் கூறியிருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் அதற்கான அறிகுறிகள் மாதிரித்தான் தெரிகிறது.”
“நாளை மாறாவிட்டால் வைத்தியசாலைக்கு செல்வோம்.” என சுடர் தயங்கினாள்.
“அம்மா, உடனடியாக சிகிச்சை எடுத்தால் வீட்டிலிருந்தே விரைவில் குணப்படுத்திவிடலாம். நாட்பட்டால் வைத்தியசாலையில் அனுமதித்துவிடுவார்கள். நோய் குணமாவதற்கும் நாட்கள் செல்லும். வீட்டுத்தோட்டத்தில் நிற்கும் அப்பாவுக்கு நான் சென்று சொல்கிறேன். நீங்கள் தயாராகுங்கள். நான் பாடசாலைக்கு செல்கிறேன் நீங்கள் இருவரும் வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.” கூறியபடி தந்தையை நாடிச் சென்றான் சுதன்.
விடயத்தை தந்தையிடம் கூறியவன்,
“அப்பா, வீட்டைச் சுற்றி சுத்தமாக இருந்தாலும் வைத்தியசாலையிலிருந்து வந்ததும் உடனடியாக நீர் தேங்கி நிற்கக்கூடியவாறு ஏதாவது பொருட்களோ குழிகளோ பள்ளங்களோ இருந்தால் அவற்றை கவனித்து சீர் செய்து அகற்றிவிடுங்கள். நீர் தேங்கி நிற்கும் இடங்களில்தான் நுளம்புகள் முட்டை இட்டு பெருகுகின்றன. இதைப்பற்றி ஆசிரியர் எங்களுக்கு கூறியிருக்கிறார். இன்று ஒருநாள் வேலைக்குச் செல்லாமல் இவற்றைச் செய்யுங்கள் அப்பா. பாடசாலையிலிருந்து வந்ததும் நானும் உங்களுக்கு உதவுகிறேன்.”
சுதனின் வார்த்தைகள் பாலனுக்கு சிறிது பயத்தை உண்டாக்கிவிட்டன. அது சுடருக்கும் தொற்றிவிட இருவரும் வைத்தியசாலைக்குச் செல்லத் தயாராகினர்.
சிறு வகுப்பிலிருந்தே கல்வி தரும் பயனை எண்ணி வியந்தபடி வைத்தியசாலையை நோக்கி இருவரும் செல்கின்றனர்.
*****