குவியல் 7 எண்ணம் 3
சுயநலம்

சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் ஆகும். ஒருவரது சுயநலம் மற்றவர்களைப் பாதிக்கும் வண்ணம் இருப்பது மிகவும் தவறாகும். பெருமைக்காகவும் புகழுக்காகவும் சேவை செய்பவர்களும் சுயநலவாதிகளே.
தனது நலனுக்காக, முன்னேற்றதிற்காக சிந்திப்பது இயல்பு. ஆனால் அதற்காக அடுத்தவரின் வளர்ச்சியை தடுப்பதற்கும் அவரை வீழ்த்துவதற்கும் முயற்சி செய்வது தவறாகும். அச் செயல்களால் கிடைக்கும் வெற்றி தற்காலிகமே.
தன்னால் செய்யக்கூடிய தனது வேலைகளையும் அடுத்தவரைக்கொண்டு செய்விப்பது சுயநலம் மட்டுமல்ல அவர்களின் நேரத்தை திருடுவதுமாகும்.
சில பொருட்கள் விலையேறப் போகின்றது என்று அறிந்தவுடன் அவற்றை பெரிய அளவில் வாங்கி பதுக்கி வைப்பதும் சுயநலமே. இதனால் கஷ்டப்படுவது ஏழை மக்களே.
சுயநலமாக வாழ்பவருக்கு அதன் காரணமாக அவசர உதவி தேவைப்படும்போது அது கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புண்டு.
ஒருவரின் கஷ்டங்களையும் துன்பங்களையும் பார்த்து, அவருக்கு உதவ முடியாத நிலையில் இருந்தாலும் அவை எல்லாம் நீங்கிவிடவேண்டும் என மனதார நினைப்பதும் பிரார்த்தனை செய்வதும் பொதுநலமாகும். உணவை பகிர்ந்து உண்ணுவது, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து விட்டுக்கொடுத்து நடப்பது, எமக்குத் தெரிந்தவற்றை தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது, மற்றவர்களின் முன்னேற்றத்திற்கும் ஆலோசனை கூறுவது, உதவி தேவைப்படுவோருக்கு பிரதிபலன் பாராது எம்மால் இயன்ற உதவி செய்வது, யாவற்றையும் பொதுநலமாக சிந்திப்பது, பொது சேவைகளில் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்ற சுயநலமில்லாத நற்செயல்களும் நல்லெண்ணங்களும் அடுத்தவரை மகிழ்விப்பது மட்டுமல்லாது எமக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதுடன் எமது வாழ்வையும் சிறப்பாக்கும்.
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளில் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.
“சுயநலம் இல்லா அனைத்தும், நல்லொழுக்கம். சிறிது கலந்துவிட்டாலும் தீயொழுக்கமாகி விடும்.”
சுவாமி விவேகானந்தரின் மற்றுமொரு பொன்மொழி பின்வருமாறு கூறுகிறது.
“எல்லாப் பெருக்கமும் வாழ்வு.
எல்லாச் சுருக்கமும் சாவு.
அன்பு என்பது பெருக்கம்.
சுயநலம் என்பது சுருக்கம்.
எனவே அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.”
சுயநலத்தோடு வாழ்பவர் அடுத்தவரின் வாழ்வை அழிப்பது மட்டுமன்றி தன்னுடைய வாழ்வையும் அழித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை மனதிற்கொண்டு பொதுநலத்தோடு வாழ்வோம்.
உதாரணக்கதை
ராமுவும் சோமுவும் உற்ற நண்பர்கள். இருவரும் ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து படித்தவர்கள். இருவரும் திருடமணமாகி அதே ஊரில் வசிக்கின்றார்கள். ராமுவுக்கு ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள். மூத்தவனுக்கு நான்கு வயது. இளையவளுக்கு ஒரு வயது. சோமுவுக்கு ஒரு பெண் குழந்தை. இரண்டு வயதாகிறது. இரு குடும்பங்களும் நன்றாகப் பழகினாலும், சோமுவின் மனைவி சுயநலமிக்கவள் என்பது மற்ற மூவருக்கும் நன்றாகத் தெரியும். சோமுவும் எவ்வளவோ அறிவுரைகள் கூறியும் அவளை மாற்ற முடியவில்லை. தானாகப் பட்டுத் திருந்தட்டும் என்று விட்டுவிட்டான்.
பொதுவாக எரிபொருள், அரிசி, மா, சீனி, பருப்பு, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறப்போகிறது என்பது முன்கூட்டியே தெரியவந்துவிட்டால் கடைக்காரர்கள் அப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் விற்றுவிட்டு மிகுதியை கூடுதல் விலைக்கு விற்று இலாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் பதுக்கி வைத்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்காவது பணத்தை மிச்சம் பிடிக்கலாமே என்ற நோக்கத்துடன் மக்களும் ஓடி ஓடி அப்பொருட்களை கூடுதலாக வாங்கி வைத்துவிடுவார்கள். விலையேற்றம் நடைபெறும்வரை அப்பொருள் கடைகளில் கிடைக்காது. இது மாதக்கணக்கிலும் நீடிக்கும். இந்நிகழ்வு வழமையாக நடப்பதுதான்.
அதேபோல அன்று பால்மா விலையேறப்போகிறது என்ற செய்தி ஊரெல்லாம் பரவ, வழமைபோல எல்லோரும் கடைகளுக்கு படையெடுத்துவிட்டார்கள். அதற்கு ராமுவும் சோமுவும் விதிவிலக்கல்ல. அம்முறை ராமுவுக்கு ஒரு பெட்டி பால்மாதான் கிடைத்தது. சோமுவுக்கோ ஆறு பெட்டிகள் கிடைத்துவிட்டன.
“கீதா, ராமுவுக்கு ஒரு பெட்டி பால்மாதான் கிடைத்திருக்கிறது. நாம் வாங்கியதில் இரண்டை அவர்களுக்கு கொடுப்போம். இனி எப்போதுதான் பால்மா கடைகளுக்கு வருமோ தெரியவில்லை. அவர்களுக்கு இரு பிள்ளைகள். அத்துடன் இரண்டாவதற்கு ஒருவயது. சிறு குழந்தை. மிகவும் கஷ்டப்படப் போகின்றான்.” சோமு தன் மனைவி கீதாவிடம் கவலையுடன் கூறினான்.
“முடியாது. எங்களிடம் இருப்பதே எத்தனை நாட்களுக்கு வருமோ தெரியவில்லை என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அப்படிக் கொடுத்தால் எமது குழந்தை பட்டினி கிடக்க வேண்டி வரலாம். ஒரு பெட்டி என்றாலும் நான் தரமாட்டேன்.” முடிவாகக் கூறிவிட்டாள் கீதா.
அவளிடம் கேட்பது கல்லில் நார் உரித்த மாதிரித்தான் இருக்கும் என எண்ணியவன் வேறு தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என விட்டுவிட்டான்.
ராமுவின் அதிஷ்டம், ஒரே மாதத்தில் விலையேற்றத்துடன் பால்மா பெட்டிகள் கடைகளுக்கு வந்துவிட்டன.
சோமுவின் மனைவி கீதா மிகவும் சிக்கனமாக பாவித்ததால் இன்னும் நான்கு பெட்டிகள் அவர்களிடம் இருந்தன. பணத்தை மிச்சம் பிடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் இருந்தாள்.
அன்று பால்மா தீர்ந்துவிட்டதால் ஒரு பெட்டியை திறந்து எடுத்து பால் கரைத்தபோது திரைந்துவிட்டது. பாத்திரத்தை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லையோ என நினைத்தவள். வேறு பாத்திரத்தில் கரைத்தாள். அதுவும் திரைந்துவிட்டது. யோசனையுடன் கணவனிடம் கூறினாள்.
“எங்கே பெட்டியைக் கொண்டுவா பார்க்கலாம்.” பார்த்தவனுக்கு பால்மா காலாவதியானது தெரிந்தது. மிகுதி பெட்டிகளையும் கேட்டு வாங்கி பார்த்ததில் ஒன்றைத் தவிர மிகுதி மூன்றும் காலாவதியாகிவிட்டது.
திகைத்து வாயடைத்து நின்றாள் கீதா. கோபத்தின் உச்சிக்கு சென்றான் சோமு.
“இந்த மூன்று பெட்டிகளையும் குப்பையில் கொட்டிவிடு. மண்ணுக்கு உரமாகவாவது போகட்டும். இரு பெட்டிகளை ராமுக்கு கொடுக்கலாம் என எத்தனைமுறை உன்னிடம் கெஞ்சினேன். அப்படிக் கொடுத்திருந்தால். ராமுவின் குடும்பம் சந்தோஷப்பட்டிருக்கும். பால்மாவும் வீணாகப் போயிருக்காது. எமக்கும் நஷ்டம் வராமல் இருந்திருக்கும்.”
கீதாவால் பேச முடியவில்லை. தனது சுயநலம் எவ்வளவு பெரிய நஷ்டத்தை தனக்கு தந்திருக்கிறது என்பதை உணர்ந்தாள்.
“இது உனக்கு ஒரு நல்ல படிப்பினை. இனிமேலாவது திருந்தப்பார். பொதுநலமாக சிந்திக்கப் பழகு. அப்போதுதான் எமக்கும் நல்லது நடக்கும்.”
சுயநலம் எனது பிறவிக்குணமா? இதை என்னால் மாற்ற முடியுமா? என மிகவும் கவலைப்பட்டவள், ஏன் முடியாது? முடியாதது என்று எதுவுமில்லை. நான் மாறவேண்டும் என்று நினைத்துவிட்டால் அது என்னால் முடியும். நிச்சயமாக முடியும்.
நம்பிக்கையுடன் எழுந்து வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் கீதா.
*****