இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் 08.05.1916 இல் பிறந்தவர் சின்மயானந்தா. இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, ஊடகவியல் துறையில் இணைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியல் பணிகளில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் எல்லா இளைஞர்களைப் போல மத அமைப்புக்களையும் ஸ்தாபனங்களையும் வெளிப்படையாகவே எதிர்த்துப் போராடியவர், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடினார். பல சுதந்திர போராட்ட குழுக்களுடன் இணைந்து செயற்பட்டவர் சிறைச்சாலைக்கும் செல்ல நேரிட்டது. இமயமலைப் பகுதியில் இருந்த சுவாமிகள் போலியானவர்கள் என்று நம்பியவர் அவர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி சிவானந்தரின் ஆச்சிரமத்தை நோக்கி புறப்பட்டார். சுவாமி சிவானந்தரின் தெய்வீகத் தன்மை, அன்பு மற்றும் வேதாந்த போதனைகள் பாலகிருஷ்ணனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது.அவருக்கு இந்துசமய ஆன்மீகத் துறையில் ஆர்வம் அதிகரித்தது. பாலகிருஷ்ண மேனன் 1949 ஆம் ஆண்டு சிவராத்திரி நாளன்று சுவாமி சிவானந்தரினால் சந்நியாச தீட்சை பெற்று சுவாமி சிம்மயானந்தா என்ற பெயரையும் பெற்றார்.
இமய மலையில் சுவாமி தபோவன மகாராஜ் இடம் எட்டு ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்றவர், அவரின் ஆசியுடன் உலகெங்கும் வேதாந்தத்தைப் பரப்ப இமய மலையிலிருந்து புறப்பட்டார்.
இந்து தர்மத்தை பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் உலகெங்கும் பல ஆசிரமங்களையும் மையங்களையும் மட்டுமன்றி பல பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் உருவாக்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சின்மயா அமைப்பை உருவாக்கினார்.
சுவாமி சின்மயானந்தா 03.08.1993 அன்று கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார்.
இவர் ஆரம்பித்த சின்மய மிஷன் நிறுவனம் உலகெங்கிலும் 350 மையங்களில் இயங்குகிறது. இவ் அமைப்பு இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது.
*****