தந்தையுமானவள்
“அம்மா……………”
அழைத்துக்கொண்டு வந்த குமரன் திகைத்து நின்றுவிட்டான்.
அம்மா இல்லை என்பது அவன் மனதில் இன்னும் பதியவில்லை.
ஓடோடி வந்து கட்டி அணைத்துக்கொண்டாள் உமா.
மன்னித்துவிடு அக்கா, இனிமேல் இப்படி அழைப்பதை தவிர்க்க முயற்சி செய்கிறேன்…, என்றபடி தேம்பினான் குமரன்.
அப்படி சொல்லாதே குமரா! இனிமேல் இந்த அக்காதான் உனக்கு அம்மாவும். அம்மா இருக்கும்போது எப்படி உன்னை பார்த்து பராமரித்து உனக்கு துணையாக இருந்தாரோ அதே மாதிரி நானும் உன்னை கவனிப்பேன்டா. அழாதே, சாமியுடன் இருக்கும் அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ அழுவதைப் பார்த்தால் தாங்க மாட்டார். அம்மாவை கவலைப்பட வைக்கலாமா. அழாதே குமரா…, தனது துக்கத்தை விழுங்கியபடி, அம்மாவின் மறைவுக்குப் பின் அன்றுதான் பாடசாலை சென்று வந்த தம்பியை தேற்றினாள் அக்கா உமா.
படி ஏறும்போது தடுக்கி விழுந்தவர் பின்னந்தலை அடிபட விழுந்து மயக்க நிலையில் ஒரு நாள் முழுதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து, மறுநாள் குடும்பத்தை அலையவிடாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார் அமுதா.
சிவராமன் அமுதா தம்பதியருக்கு உமா, குமரன் இரு பிள்ளைகள்.
கணணி தொழில்நுட்ப பிரிவில் கல்வி முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள் இருபது வயதாகும் உமா.
அடுத்த வருடம் உயர்தர வகுப்புக்கு செல்வதற்கான பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறான் பதின்னான்கு வயதாகும் குமரன்.
அரச பணியில் தந்தை சிவராமன்.
வீட்டுப் பணியில் தாய் அமுதா.
அழகிய சிறு குடும்பம்.
யார் கண் பட்டதோ, பாதி வாழ்க்கையில் குடும்பத் தலைவியை இழந்து தவிக்கிறது குடும்பம்.
தாயின் இறுதிக் கிரியைகள் முடிந்து கிழமைகள் இரண்டு விரைந்தோடிவிட்டன. உறவினர்களும் அவரவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்கள்.
அலுவலகத்திலிருந்து அழைப்பு வரத் தொடங்கிவிட்டது. இன்னும் கவலையில் கரைந்துகொண்டிருந்தால் மீதி வாழ்க்கை என்னாவது. உமா விழித்துக்கொண்டாள்.
அம்மாவின் திடீர் மறைவை ஒருவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
தந்தை இன்றும் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இயந்திரத்தனமாக இருக்கிறார். அவரது மனநிலை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை மனதை அரிக்க, தம்பியை மட்டுமல்ல தந்தையையும் மிகவும் கவனமாக தேற்றி பழைய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று சிந்தித்தபடி வழமைபோல் அன்றும் தந்தையை நாடிச்சென்றாள்.
அப்பா, எங்களுக்கு துணையாயிருந்து வழிநடத்திச் செல்லவேண்டிய நீங்களே உடைந்துபோயிருந்தால் நாங்கள் என்ன செய்வது. எங்களுக்காகவாவது நீங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும். நீங்கள் இப்படி இருப்பதைப் பார்க்க பயமாக இருக்கிறது அப்பா, சிறு கேவலுடன் தந்தையின் கரங்களைப் பற்றினாள் உமா.
ஆச்சர்யப்படும் வகையில் தந்தையின் முகத்தில் அமைதி நிலவியது.
மகளே! அம்மா இல்லாமல், அவளுடைய ஆலோசனைகள் இல்லாமல் குடும்பத்தை எப்படி கொண்டு செல்வேன் என்ற கவலையில் இருந்த எனக்கு நம்பிக்கையை தந்து விட்டது நீ குமரனிடம் கூறிய வார்த்தைகள். உல்லாசமாக துள்ளித் திரிந்த எங்கள் செல்ல மகளா இப்படி பொறுப்பாக பேசியது என்று திகைத்து விட்டேன், சிவராமன் கண்கள் கலங்க மகளைப் பார்த்தார்.
அப்பா, எங்கள் இருவரையும் பொறுப்பானவர்களாக வளர்த்தது நீங்கள் இருவரும் தானே. தினமும் இரவில் உணவருந்தும் நேரம் நால்வரும் சேர்ந்திருந்து உல்லாசமாக கதைத்து விளையாடி மகிழ்ந்திருக்கிறோம். அந்த நேரங்களில் எல்லாம் எங்களுக்கு அறிவுரைகளையும் நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தந்திருக்கிறீர்கள்.
ஆனால் தம்பிக்கு இப்போதுதான் உங்கள் வழிகாட்டல் மிகமிக அவசியம் தேவை அப்பா. அவன் சரியான பாதையில் செல்ல நீங்கள் தான் துணையாயிருக்க வேண்டும். அவனுடன் கூடிய நேரத்தை செலவழிக்க வேண்டும். அவனுடைய வௌி நடவடிக்கைகளை மிகக் கவனமாக அவதானித்து, பாதை சிறிது மாறினாலும் அடிப்படையிலேயே அதை மாற்றி அமைக்க வேண்டும்.
தாய் தந்தையின் அன்புக்காக அவன் வௌியிடங்களை நாடிவிடக் கூடாது அப்பா. அம்மாவைப் போல் நான் அவனை வீட்டில் கவனித்துக் கொள்வேன். ஆனால் ஒரு தந்தையின் பாசத்தையும் வழிகாட்டலையும் நீங்கள் தான் கொடுக்கவேண்டும்,
மிகவும் மென்மையாக எடுத்துக் கூறினாள் உமா.
உன்னோடு கதைத்த இந்த நொடிகள் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறது. ஒரு சில நாட்கள் அவகாசம் கொடு உமா நான் மீண்டு வருவதற்கு. அதுவரை நீதான் உமா ஒரு தந்தையைப்போல தம்பியை வழிநடத்தவேண்டும். பிள்ளைகள் கெட்டழிந்துபோக ஒரு சிறு இடைவௌி போதும். அந்த இடைவௌியை நாம் குமரனுக்கு கொடுக்கக் கூடாது. எனது மனம் அமுதா இல்லாத வாழ்க்கையை ஏற்றுப் பழகும் வரை நீதான் தாயாக மட்டுமல்ல தந்தையுமாக குமரனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றிலிருந்து நான் ஆரம்பிக்கப் போகிறேன், அமுதா இல்லாத வாழ்க்கையை வாழப் பழகுவதற்கு. நீ குமரனிடம் சொன்னது போல் அமுதா பார்த்துக்கொண்டிருப்பாள். நம் செல்வங்கள் சீரழிந்துபோவதை அவள் விரும்பமாட்டாள். கெட்டது நடக்கவிடாமல் தெய்வத்தின் துணையுடன் நிச்சயம் நம்மை வழிநடத்துவாள். நாளையிலிருந்து நாம் இருவரும் அலுவலகம் செல்வோம், ஒருவழியாக கவலைகளிலிருந்து மீண்டு வர அடியெடுத்து வைத்தார் சிவராமன்.
துன்பக் கடலை விரைந்து கடந்துவரும் மனத்தைரியம் பெண்களைப் போல் ஆண்களுக்கில்லை போலும், நினைத்தபடி தந்தையின் முயற்சியில் நிம்மதியடைந்த உமா, சரி அப்பா விரைவாக குளித்துவிட்டு வாருங்கள் மூவரும் சேர்ந்து உணவருந்துவோம், என்றபடி திரும்ப,
இன்னொரு விஷயம் உமா, ஒரு வருடம் பூர்த்தியானதும் திருமண விடயம் கதைப்பதற்கு அப்பா வருவார் என்று நரேனிடம் சொல்லிவிடு, என்று சிறு புன்னகை பூத்தார் சிவராமன்.
திகைத்து விழித்தவள் விஷயம் புரிய கலங்கிய கண்களை துடைத்தபடி தம்பியை நாடிச் செல்கிறாள் உமா, தாயாக மட்டுமல்ல தந்தையுமாக.
***********************************************************