
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது.
ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
தமிழ்மொழி தொன்மையானதும் இனிமையானதும் ஆகும்.
இம்மொழி உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து என மொத்தம் 247 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
தோன்றி மறையும் மொழிகளிடையே தொன்மையில் தோன்றி வளர்ந்து இன்றும் சிறப்புடன் வாழ்கிறது தமிழ்மொழி.
இயல், இசை, நாடகம் என செழிப்புடன் வளர்ந்து வரும் தமிழைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கு பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்ச்சங்கங்கள் அமைத்து நடாத்திவருகின்றனர்.
“யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளதும்,
“தமிழுக்கும் அமுதென்று பேர்” என பாரதிதாசன் பாடியதும்,
தமிழ்மொழியின் சிறப்பை பறைசாற்றுகின்றன.
செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், முத்தமிழ், தெய்வத்தமிழ், கன்னித்தமிழ் என அதன் சிறப்புப் பெயர்களை கூறிக்கொண்டே போகலாம்.
தமிழ்மொழியானது எழுதவும் படிக்கவும் பேசவும் எளிதானது.
இதனாலேயே தமிழ், எளியதமிழ் எனவும் கூறப்படுகின்றது.
தமிழை பேசும்போது குறைவான காற்றே வெளியேறுகிறது.
இதனால் உடல் உறுப்புக்களின் தேய்மானம் மற்ற மொழிகளைவிட மிகவும் குறைவானது என மொழியியலர் கூறுகின்றனர்.
இறைவனுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீகவாதிகள் வரை கருதுகின்றனர்.
இறைவனை போற்றும்போது முத்தமிழாகவும் விளங்குகின்றான் என திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழி இன்றும் உயிர்ப்புடன் திகழ பழந்தமிழர் வாழ்வைக் கூறும் இலக்கியங்களும் முக்கிய காரணங்களாகும்.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை பேணிக் காப்பது எமது தலையாய கடமையாகும்.
தமிழ் எங்கள் உயிர் என்ற உணர்வுடன் வாழ்வோம்.
வாழ்க தமிழ். வாழ்க தமிழ் வளர்த்தோர்.
*****