தீபாவளி இந்து சமயத்தவர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாகும். இப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
தேவர்களின் அமைதியை அழித்து, இன்னல்கள் பல கொடுத்து, கொடுமைகள் செய்தான் நரகாசுரன் என்ற அசுரன். இதிலிருந்து மீள முடியாது தவித்த தேவர்கள் கிருஷ்ண பகவானை சரணடைந்தனர். தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். கிருஷ்ண பகவானும் நரகாசுரனை கொன்றழித்தார். இறக்கும் தருவாயில் கிருஷ்ண பகவானிடம் நரகாசுரன் ஒரு வரம் கேட்டான். தான் இறந்த இந்நாளை பூமியிலுள்ளவர்கள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று கூறினான். பகவானும் அந்த வரத்தை அருளினார்.
தீபங்கள் ஏற்றி ஆனந்தமாகக் கொண்டாடும் இந்நாளே தீபாவளி பண்டிகையாகும்.
தீபாவளி தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச்சென்று இறைவனை வழிபடுவர். அன்று பட்டாசுகள் கொழுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்வாக இருப்பர். வாழ்வில் சூழ்ந்துள்ள இருள் நீக்கி, பிரகாசமான ஒளிதரும் நன்னாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தரும் பண்டிகை இதுவாகும்.
தீபாவளியன்று பலகாரங்கள் செய்து உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் கொடுத்து உண்டு மகிழ்வர்.
அன்று விடுமுறை தினம் என்பதால் எல்லோரும் ஒன்று சேர்ந்து குடும்பத்துடன் சந்தோஷமாக அளவலாவி மகிழ்வர். இளைஞர் யுவதிகள் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பர். சிறுவர்கள் கூடி விளையாடி பொழுதைக் கழிப்பர். பிரிந்தவர் பகை மறந்து கூடி மகிழும் சந்தர்ப்பத்தை இத் தீபாவளி நன்னாள் தருகிறது.
புதிதாக திருமணமான தம்பதியினர் கொண்டாடும் முதல் தீபாவளியை தலைத்தீபாவளி என்று இரு குடும்பத்தினரும் சிறப்பாகக் கொண்டாடுவர். அன்று இரு குடும்பத்தினரும் மணமக்களுக்கு புத்தாடைகள் அன்பளிப்பாகக் கொடுத்து கைவிசேஷமும் தந்து விருந்தளித்து மகிழ்வர்.
இப்படியாக இனிதாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை மீண்டும் எப்போது வரும் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
*****