
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது.
பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகின்றது. நீர் உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்படுகின்றது. எனவே எமக்குக் கிடைக்கும் நல்ல நீரினை வீணாக்காது சிக்கனமாக உபயோகிப்பது மிக மிக அவசியமாகும்.
இன்றோ மனிதன் பல நவீன கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொகுசான வாழ்வு வாழப் பழகிவிட்டான். இதனால் இயற்கை மாசடைவதையும் மழை வீழ்ச்சி குறைவடைவதையும் அவன் பொருட்படுத்தவில்லை.
அநாவசியமாக மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், போன்ற செயல்களினால் மழைவீழ்ச்சி குறைவடைகின்றது. இதனால் உயிர்களது அடிப்படைத் தேவைகளுடன் பயிர்ச்செய்கையும் பாதிப்படைகின்றது. பூமி வறட்சியடைந்து வெப்பம் அதிகரிக்கின்றது. நீர்மின் உற்பத்தியும் குறைவடைகின்றது.
தொழிற்சாலைகளினதும் வீடுகளினதும் கழிவு நீர் மட்டுமல்லாது பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற கழிவுப்பொருட்களும் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் என்பனவற்றை மாசடையச் செய்கின்றன. இவ்வாறு மாசடையும் நீர் மனிதப் பயன்பாட்டிற்கு உதவாமல் போவதுடன் பல நோய்களுக்கும் காரணியாக அமைகின்றது.
மழை நீர் வடிந்து ஓடும் வாய்க்கால் வழிகளை அடைத்து கட்டிடங்கள் எழுப்புதல் போன்ற செயல்களினால் மழை நீர் விரயமாகின்றது.
வீடுகளிலும் நீர் பல வழிகளில் விரயமாகின்றது. வீடுகளில் விரயமாகும் நீரை எப்படித் தவிர்க்கலாம் எனப் பார்க்கும்போது,
நீர் கசிந்துகொண்டிக்கும் குழாய்களை உடனடியாகத் திருத்தவோ அல்லது மாற்றவோ வேண்டும். “சிறு துளி பெரு வெள்ளம்” என்பது யாவரும் அறிந்ததே. சிறிது சிறிதாக சிந்தும் நீரானது எம்மை அறியாமலே பெரிய அளவில் வீணாகின்றது.
துணிகளை துவைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக துவைக்காது, சேர்த்து ஒன்றாக துவைக்கும்போது குறைந்தளவு நீரில் துவைத்து முடிக்கலாம்.
அரிசி, காய் கறிகள் கழுவிய நீரை சேகரித்து மரம், செடி,கொடிகளுக்கு ஊற்றலாம்.
குளிக்கும் போதும், முகம் கை கால் கழுவும்போதும் குழாயை திறந்து விட்டபடி சவர்க்காரம் போடாது, குழாயை மூடிவிட்டு தேவையான நேரம் திறந்து பாவிக்க வேண்டும்.
சிறுவர்கள் குழாய்களை அநாவசியமாக திறந்து விளையாடினால் அதை அவதானித்து கண்டித்துத் தடுக்க வேண்டும்.
வீடுகளில் நீர் வீணாவதை தடுப்பதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் அடுத்த தலைமுறையினருக்கு தட்டுப்பாடில்லாமல் நீர் கிடைப்பதற்கு உதவ முடியும்.
நீரின் முக்கியத்துவத்தையும் அதைத் தரும் மழை மனித வாழ்வில் எப்படியாக பின்னிப் பிணைந்திருக்கின்றது என்பதையும் திருவள்ளுவர் அருளிய குறள் இவ்வாறு கூறுகிறது.
குறள் – “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.”
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது, அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
குளங்களையும் மழைநீர் வடிந்து ஓடும் வாய்க்கால்களையும் பாதைகளையும் காலத்திற்கு காலம் புரணமைத்து, மறுசீரமைத்து பராமரிப்பதன் மூலம் மழை நீர் விரயமாகாமல் சேமிக்க வேண்டும்.
மரங்களை வெட்டவேண்டிய அவசியம் ஏற்படின் பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது கட்டாயமாக செய்யவேண்டிய பணியாகும்.
பல கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், வீதி நாடகங்கள் போன்றவற்றை நடாத்தி நீர் மாசடைவதையும் விரயமாகுவதையும் தடுப்பதற்குரிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியமாகும்.
எமக்காக மட்டுமல்லாது வருங்கால சந்ததியினருக்காகவும் நீர் பாதுகாப்பு மிக மிக முக்கியமாகும்.
மரமின்றி மழையில்லை
மழையின்றி நீரில்லை
நீரின்றி உயிரில்லை
பூமித்தாய்க்குப் பச்சை சாத்தி
உலகத்தை வாழவைப்போம்.
*****