
“ஒருவன் தன்னைத்தானே
நான் யார் என்று
சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
அவனுக்குள்
ஆன்மிகம் ஆரம்பித்துவிடும்.
அவன்
அவர்கள் யார் என்று
சித்திக்க ஆரம்பிப்பதால்தான்
அவனுக்குள்
உலக துன்பங்கள்
உள்ளுக்குள் வர ஆரம்பிக்கின்றன.
இல்லாத ஒன்றில்
இருப்பது
இறைவன்
இருக்கும் ஒன்றிலும்
இருப்பது
இறைவன்.
எண்ணங்களை
உள்ளுக்குள் திருப்பிக் கொண்டால்
உங்களுக்கு நீங்கள்
அறிமுகமாகுவீர்கள்
உலகத்துக்கு திருப்பிக்கொண்டால்
உலக உழல்கள்
உங்களுக்கு அறிமுகமாகும்.
அவரவர்
கர்மக்கடன் கடமை
அதற்குள்ளேதான்
அத்தனை சூட்சுமமும்
அடங்கி உள்ளது.
எவன் தன் கடமைகளை
சரிவர செய்யவில்லையோ
கர்மம் கரைக்க எடுக்கப்பட்ட வாழ்வு
கர்மம் அதிகரித்து
தாழ்வாக மாறத்தொடங்கும்.
ஆன்மீகமோ
வாழ்வோ
எதுவானாலும்
அன்பை உணர்ந்து
அதற்கு செய்யும் பிரதி உபகாரமாக
செயல்களை செய்துவிட்டால்
கடவுளுக்கு அருகில்
கடவுளோடு கைகுலுக்கும் நிலை
நிச்சயம் அமையும்.
இதையெல்லாம்
நான் ஏன் உங்களுக்கு
சொல்லவேண்டும் என்கிறீர்களா
என் கடமை
என் எழுத்து அப்பிடி இருக்கிறது
வெளிச்சம் என்பது
வெளியே இல்லை
உள்ளுக்குள் இருக்கிறது.
கடமை என்பது
உள்ளுக்குள் இல்லை
வெளியே இருக்கிறது.
பயணித்த தூரத்தை
திரும்பிப் பார்க்காதீர்கள்
இனி பயணப்படும் தூரத்தையும்
எண்ணிக் கலங்காதீர்கள்
நடக்கத்தானே
கால்கள் இருக்கின்றன.
இன்றுள்ள உலகத்தின்
மொத்த நம்பிக்கை
நீ மட்டும் தான்.
அடுத்தவர் இல்லை.
இதையே இன்று
நாம் ஒவ்வொருவரும்
சிந்திப்போமானால்
உலகத்தில் அன்பு
உருண்டு விளையாடும்
பிறகென்ன
சொர்க்கம் நம் கையில்
சோதியும் நம் மெய்யில்
பூமியும் சுழல எங்களிடம்
அனுமதி கேட்கும்.”
*****