“படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல…..
படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல….
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை… கையில் ஒரு கறுப்பு குடை… காலில் இப்பவோ அப்பவோ என உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு….
சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்….
கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்…
பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு…
கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிங்க?….. உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்…
பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்… இந்த கருமத்தல(பாலிதீன்) வீடு குப்பையாச்சி… ஊரு குப்பையாச்சி… நாடு குப்பையாச்சி… இந்த உலகமே குப்பையாச்சி… மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது… எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது…
இலவசமா கிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த) சுலபமா இருக்கு… அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்…. அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பாவிச்சிட்டு இனி முடியாங்கும் போது தூக்கி குப்பைல போடு…. இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்…
பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்கம்?…(முணுமுணுத்து கொண்டே சென்றார்..)”