வண்ண வண்ண இதழ்கள் கொண்ட
புது மலரே புத்தாண்டே
புதுமைகள் பல கொண்டு
வருகவே வருகவே!
நாளொரு இதழ் விரித்து
நறுமணம் கமழவே
புவி முழுதும் மகிழ்வை அள்ளி
தருகவே தருகவே!
புது வாழ்க்கை புது முயற்சி
தொடங்கிடவே ஒரு சிலர்
விடியல்தனை அழைத்து நீயும்
வந்திடுவாய் எனப் பலர்
உனக்கான காத்திருப்பு
பூமியிலே ஏராளம்
வீறு நடை போட்டு இங்கு
வந்திடுவாய் புத்தாண்டே!
மனக்காயம் ஆற்றிவிடும்
மருந்தாவாய் நீயென
பகைமையை அழித்தொழிக்கும்
காலமகள் நீயென
புதிர்கள் பல அவிழ்க்க வரும்
காலதேவன் நீயென
தீய சக்தி யாவையுமே
எரித்திடுவாய் நீயென
பார்த்திருக்கும் மாந்தர்களின்
வாழ்க்கையும் மலர்ந்திட
தென்றலென தவழ்ந்து நீயும்
வந்திடுவாய் புத்தாண்டே!