பெண் இல்லாத வீடு பாலைவனத்திற்கு சமம். அது பாழடைந்ததாகவே தோற்றமளிக்கும். வீட்டில் ஒரு பெண் இருந்தாலே லக்ஷ்மிகரமும் கலகலப்பும் நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆண் வேலை தொடர்பாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே சென்று களைத்து வீடு திரும்பும்போது அவரை அரவணைத்து உணவு, தேநீர் கொடுப்பதற்கு வீட்டில் ஒரு பெண் நிச்சயமாகத் தேவை. அது தாய், சகோதரி, மனைவி அல்லது மகளாகக்கூட இருக்கலாம். பெண் வீட்டில் எல்லாவிதத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறாள்.
– வீட்டை ஒழுங்காக, சுத்தமாக வைத்திருப்பது
– சமையல் செய்வது
– உடைகளைத் துவைத்து சுத்தம் செய்வது
– குழந்தைகளை/மாமி, மாமா/பெற்றோர், இவர்களைப் பராமரிப்பது
– தேவையான நேரம் கணவனுக்கு ஆலோசனை வழங்குவது
– உறவினருடன் சுமுகமான உறவைப் பேணுவது
– தேவைப்படின் குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருப்பது
இவை எல்லாவற்றிற்கும் பெண் மிகவும் தேவையானவளாக இருக்கிறாள்.
குடும்பத்திற்கு பெண் முக்கியமானவளாக இருக்கின்றபோதும் அவளுக்கு வெளியே பாதுகாப்பு இல்லை. அவள் எத்தனையோ ஆபத்துக்களை எதிர்நோக்கவேண்டி இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் பயந்து வீட்டில் ஒளிந்து இருக்காமல் எதிர்நோக்கும் அத்தனை ஆபத்துக்களையும் தடைகளையும் தாண்டி துணிவுடன் கல்வியில் மட்டுமல்ல தொழிலிலும் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறாள். அவற்றைப் பார்க்கும்போது நானும் பெண்ணாக இருப்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
நான் இன்றுவரை வாழ்ந்த காலத்தில் ஒரு தாயாக இருப்பதில் இருக்கின்ற தன்னிறைவு வேறு எதிலுமே இருக்கவில்லை.
தாய் என்னும்போது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எனது பெற்றோர்க்கும் எனது கணவருக்கும் நான் தாயாக இருந்து எனது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்.
எனது சகோதரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒரு தாயைப்போல் ஆலோசனைகள் சொல்வேன்.
பிள்ளைகள், ஆண் /பெண் இருவருமே என்னிடம்தான் மனம்விட்டுப் பேசுவார்கள். தேவைகளைத் தயக்கமின்றிக் கேட்பார்கள். எனது கணவர் பிள்ளைகளுடன் நண்பர்களைப்போல் பழகுவார். தன்னிடம் தேவைகளை கேட்கவேண்டும் என்று அவருக்கு மிகவும் விருப்பம். அதை அடிக்கடி பிள்ளைகளிடம் சொல்வார். ஆனாலும் பிள்ளைகள் என்னிடம்தான் தங்கள் தேவைகளைச் சொல்வார்கள்.
இதிலிருந்து, பிள்ளைகளுக்கு தாய் எவ்வளவு முக்கியமாக இருக்கிறாள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
எனது தோழிகளும், என்னுடன் வேலை செய்பவர்களும் (வயது வேறுபாடின்றி) என்னை ஒரு தாயாகவே பார்க்கிறார்கள். அதற்கு காரணம்,
– தேவையான நேரம் ஆலோசனைகள் கூறுவது.
– வேலை நேரத்திலும் முகம் கோணாமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது (எனது வேலைக்கு இடையூறு ஏற்படாதவகையில்.)
– எதிர்பார்ப்பில்லாமல் (பிரதிபலன்) உதவி செய்வது.
– பண்புடனும் ஒழுக்கத்துடனும் பழகுவது.
– பொறாமை, அதிக ஆசை இல்லாமல் இருப்பது.
நான் கூடிய நாட்கள் விடுமுறையில் சென்றால், அம்மாவை பிரிந்திருப்பதைப்போல் உணர்ந்ததாகச் சொல்வார்கள்.
தாய் என்ற பதவி மிகவும் முக்கியமானதும் உணர்வுபூர்வமானதும் ஆகும். அந்த நிலையில் நான் இருப்பதில் மிகவும் திருப்தி அடைகிறேன்.