கோவிலிலிருந்து மனநிறைவுடன் வீடு திரும்பிய புவனா, தொலைபேசியில் மகளை அழைத்து,
“கௌதம் வீடு திரும்பும் நேரம் பார்த்து இந்த திருமண ஏற்பாட்டை கூறி வாழ்த்து சொல்லு. மிகுதியை நான் பார்த்துக்கொள்கிறேன்”
என்றவர் அன்று மாலை மகனின் வருகைக்காக பரபரப்புடன் காத்திருந்தார்.
—–
சீறிப் பாய்ந்து வந்த காரிலிருந்து இறங்கிய கௌதம், புயலென வீட்டினுள் நுழைந்தான்.
“அம்மா… அம்மா…”
அழைப்பினில் கோபம் ருத்ரதாண்டவம் ஆடியது.
எதிர்பார்த்திருந்த புவனா, மகனின் கோபாவேசத்தை சந்திப்பதற்கு தயாராக சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.
“ஏன் சத்தம் போடுகிறாய் கௌதம். காரை இவ்வளவு வேகமாக ஓட்டி வருகிறாய்… யார் மீது கோபம் உனக்கு.”
தாயை நேரிலே பார்த்ததும் ஒரு வித சோர்வு அவனை ஆட்கொண்டது.
“எல்லாம் உங்கள் மீது தான்.”
“அப்படி கோபம் வரும்படி நான் என்னடா செய்தேன். என் பிள்ளைகளுக்கு நான் எப்போதும் நல்லதைத்தான் செய்திருக்கிறேன். இனியும் அதைத்தான் செய்வேன்.”
புவனா அமைதியாக பதிலளித்தார்.
“அம்மா! நான், இப்போது எனக்கு கல்யாணம் பேசச் சொன்னேனா… என்னைக் கேட்காமலே என்னுடைய சம்மதம் இல்லாமலே கல்யாணம் பேசி, அதை முற்றாக்கியும் விட்டீர்களே… இது சரியா…”
“ஏன்டா, பெற்ற பிள்ளைக்கு ஒரு நல்லது பண்ணி வைக்கவேண்டும் என்று நான் முயற்சி செய்து முடிவெடுப்பது தப்பா”
“ஐயோ அம்மா, என்னுடைய மனநிலை தெரிந்தும் நீங்கள் இப்படிப் பண்ணலாமா…”
“இங்கே பார் கௌதம், நடந்ததை நினைத்துப் பார். உன்னுடைய தேர்வு தப்பாகி, என்னுடைய மருமகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை நீ எனக்கு தந்துவிட்டாய். ஒரு வருடம் தவணையும் கேட்டாய். இப்போ ஒரு வருடமும் முடிந்துவிட்டது.
இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்துவிடாதே. எல்லா துன்பங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. துன்பத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்த திருமணம் தான் ஒரே வழி.
என் காலம் முடியும்போது நீ ஒற்றையாக இருக்கக்கூடாது. நீ குடியும்…” வாக்கியத்தை முடிக்கு முன்,
“அம்மா…..” என்றலறினான் கௌதம்.
“டேய் டேய் டேய்… ஒரு வசனம் முழுமையாக முடியும் வரை கேளேண்டா… குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன்டா.”
கௌதமின் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டதா, இல்லை உண்மையாகவே பயந்துவிட்டானா…
பெருமூச்சுடன் கௌதமின் முகத்தை ஆராய்ந்தார் புவனா.
கௌதமுக்கு தலையை பிய்த்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது.
அவன் காதலித்த பிருந்தா சொத்தாசை பிடித்த பேய் என்று தெரியாமல் போய்விட்டது. அவனைவிட பெரிய பணக்காரனின் நட்பு கிடைத்ததும் கௌதமை விட்டு விலகிச் சென்றுவிட்டாள். இது தெரிந்த அக்கணமே அவளையும் அவள் எண்ணங்களையும் அருவருப்புடன் தன் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டான் கௌதம்.
காதலிக்க தகுதியில்லாத ஒருத்தியை காதலித்துவிட்டோமே என வெட்கப்பட்டு வேதனைப்பட்டவன், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற மன உளைச்சலையும் பெண்கள் மேல் ஏற்பட்ட சந்தேகத்தையும் இலகுவாக அவனால் களைய முடியவில்லை.
கௌதமுடைய கெஞ்சும் பார்வையை தாயால் தாங்க முடியவில்லை.
மகனை தன்னருகே அமர்த்தி, அவனுடைய இரு கரங்களையும் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு,
“தம்பி, இதில் பயப்படவோ யோசிக்கவோ எதுவுமே இல்லையடா. நான் பார்திருக்கும் பெண் உனக்கு ஒரு நல்ல தோழியாகவே இருப்பாள். உன்னுடைய மனம் சமாதானமும் சாந்தமும் அடையும் வரை காத்திருப்பாள். உன்னை தொந்தரவு செய்யமாட்டாள். உன்னுடைய தங்கை சந்தியாவுடன் படித்த அவளுடைய சிநேகிதி உமாவைத்தான் உனக்கு முடிச்சுப்போட்டு வைத்திருக்கிறேன். நீ அவளை பார்த்திருப்பாய்.”
நெற்றியை சுருக்கி யோசித்தான் கௌதம்.
அந்த இடைவெளியில் புகுந்து விளையாடினார் புவனா.
“தம்பி, உமாவிடமும் அவள் பெற்றோரிடமும் ஒளிவு மறைவில்லாமல் நடந்த எல்லாவற்றையும் முன்பே சந்தியா சொல்லிவிட்டாள்.
இன்று கோவிலில் வைத்து உமாவும் தனது பரிபூரண சம்மதத்தை சொல்லிவிட்டாள்.”
பேச்சை சிறிது நிறுத்தி, அவனுடைய முகத்தை ஆராய்ந்தவள்,
“டேய் கௌதம், உமாவுக்கு ஏற்கெனவே உன்மேல் ஒரு கண் இருந்திருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறதடா… உடனே சம்மதித்துவிட்டாள்.”
என்று ஆச்சரியப்பட்டவர், கௌதமின் கோபப் பார்வையை பார்த்ததும் தடுமாறிவிட்டார்.
“சரி… சரி… உடனே முருங்கமரம் ஏறிவிடாதே. சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன்டா.”
சமாளித்தவர்,
“மூன்று பெண்களைப் பெற்ற அந்த பெற்றோரும் மூத்த மகள் உமாவின் சம்மதத்தை கேட்டதும், எங்களுடைய குடும்பத்தில் சம்பந்தம் செய்ய கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சம்மதித்து விட்டார்கள்.”
ஒருவாறு சொல்லி முடித்துவிட்டார் புவனா.
ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்தவன், தாயின் உறுதுணையுடன் படித்து தொழிலில் வளர்ந்தவன், தந்தை விட்டுச்சென்ற செல்வத்தை பலமடங்குகளாக பெருக்கியவன் அவரின் விருப்பப்படி தங்கையின் திருமணத்தை நடாத்தி வைத்தவன், பொறுப்பானவன், தாயின் விருப்பத்தையும் சந்தோசத்தையும் மனதில் நிறுத்தி சம்மதித்துவிட்டான் திருமணத்திற்கு.
மனதிற்குள் இது சாத்தியமா, சரி வருமா என ஆயிரம் கேள்விகள் குடைய எழுந்து தனது அறைக்குள் சென்று படுக்கையில் சரிந்து கண்களை மூடிக்கொண்டான்.
அன்றைய மாலைப்பொழுது இக்கட்டான சூழலை உருவாக்கினாலும் நல்ல முடிவைத் தந்ததில் பெரு மகிழ்ச்சியடைந்த புவனா, நடந்தவைகளை மகளிடம் கூறி திருமண ஏற்பாடுகளை விரைவு படுத்த கைபேசியை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அன்று இரவு உணவின்போது சிறுது தெளிவடைந்திருந்த கௌதம் சாதாரணமாக காணப்பட்டான்.
தாயின் மனம் குளிர்ந்து முருகனுக்கு நன்றி கூறியது.
———-
நடப்பவை எல்லாம் உண்மைதானா என்று உமாவினால் நம்ப முடியவில்லை.
பணமிருக்கும் இடத்தில் பண்பும் அடக்கமும் காண்பது அரிது. அவற்றையெல்லாம் சந்தியாவிடம் கண்ட உமா அவளது உற்ற சிநேகிதியானாள்.
சந்தியாவை கல்லூரியில் விட்டுச் செல்வதற்காக வரும் கௌதமை பார்த்தவள், பின்பு அவர்கள் வீட்டுக்கு சந்தியாவுடன் செல்லவேண்டிய தேவைகள் வரும்போது சந்தித்த அவர்களது தாயார், அவரின் அன்பும் பண்பும் விருந்தோம்பலும் அவளை மிகவும் கவர்ந்துவிட்டன.
இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில்தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டும் எனவும் கௌதமைப் போல் ஒரு நல்லவன் தனது கணவனாக அமையவேண்டும் எனவும் மிகவும் விருப்பப்பட்டவள் இறைவனிடம் மனு கொடுத்து இரு வருடங்கள் ஓடி விட்டன.
இதோ இன்று அவள் உதாரணம் காட்டிய அதே குடும்பத்தில் கௌதமின் மனைவியாக வாழ்க்கைப்பட போகிறாள்.
கௌதம் மிகவும் பொறுப்புள்ளவன். காலம் அவனது காயங்களை ஆற்றி அவனை தன்னுடன் இணைத்துவிடும் என்ற முழு நம்பிக்கையுடன் மகிழ்ச்சியின் உச்சத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் கோவிலில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள்.
———-
சந்தியாவின் ஆலோசனைப்படி உமாவையும் அவளது பெற்றோரையும் கோவிலுக்கு அழைத்து, தாயும் மகளும் சந்தித்தனர்.
சுற்றி வளைக்காமல் நேரடியாகவே,
“கௌதமுக்கு நடந்தவைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவனது நல்ல காலம் அழிவிலிருந்து அவனது வாழ்க்கையை முருகன் காத்துவிட்டார். ஏமாற்றப்பட்டுவிட்ட மன உளைச்சலிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறான். இனியும் காலம் கடத்தாமல் அவனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்திருக்கிறோம்.
எங்களுக்கு நீங்கள் தூரத்து உறவு என்றாலும் நெருங்கி பழக்கமில்லை. சந்தியாவின் சிநேகிதத்தினால் உங்கள் குடும்பத்தையும் உமாவையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதுதான் உமாவை எங்கள் கௌதமுக்கு பெண் கேட்டு உங்கள் விருப்பத்தை அறிவதற்காக கோவிலில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.”
தயக்கத்துடன் வந்த நோக்கத்தை கூறி முடித்த புவனா,
“குடும்ப வாழ்க்கையில் ஈடுபட அவனுக்கு இன்னும் சில காலம் தேவைப்படும். அதுவரையில் நல்லதொரு தோழனாக, பொறுப்பாக கௌதம் உமாவை பார்த்துக்கொள்வான். அத்துடன் நாங்களும் உமாவிக்கு உறுதுணையாக இருப்போம்.”
உறுதியளித்தார்.
மூன்று பெண்களையும் எப்படி கரைசேர்ப்பது என்று திணறிக்கொண்டிருந்தவர்கள், இந்த வாய்ப்பை தவறவிடுவார்களா. நன்கு தெரிந்த குடும்பம், தூரத்து உறவு வேறு, குணசாலியான அழகான கம்பீரமான படித்த பையன், சொந்தத் தொழில். மறுப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே.
மனைவியின் முகத்தில் தெரிந்த திருப்தியை பார்த்த உமாவின் தந்தை,
“எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உமாவின் விருப்பம் தான் முக்கியம். அவள் யோசித்து முடிவு சொல்லட்டும்.”
உடனே உமா,
“அப்பா! உங்களுக்கும் அம்மாவுக்கும் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் தான். இதில் யோசிப்பதற்கு எதுவும் இல்லை.”
அங்கேயே அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
———
விருப்பங்கள் நிறைவேற வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்திக்கவேண்டும் என்பது நியதி. தோழி என்ற பதவியிலிருந்து மனைவி என்ற பதவியை நிச்சயம் அடைவேன் என்ற நம்பிக்கை உமாவின் மனதை நிறைத்துவிட்டது.
———-
முறைப்படி பெண்பார்க்கும் படலம்.
பேரழகி இல்லாவிட்டாலும் அழகிதான் உமா. நீண்ட கூந்தலும், அழகிய நீண்ட விழிகளும், கன்னத்தில் விழும் சிறிய குழியும் அவளது அழகுக்கு மெருகேற்றின.
அன்று இருவரும் மனம் விட்டு கதைத்தனர்.
“நடந்தவை எல்லாம் உனக்குத் தெரியும்தானே. என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருமணம் தான். ஆனால் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. அந்த மனநிலை வரும்வரை நிச்சயமாக உனக்கு ஒரு நல்ல தோழனாக இருப்பேன்.”
“கௌதம், நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உங்களையும் அத்தை, சந்தியா இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இணைய நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காலம் தான் உங்களுக்கு மருந்து. அது உங்கள் மனதை ஆற்றி மாற்றிவிடும். அதுவரை உங்களை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.”
இருவர் உள்ளங்களும் திருப்தியாலும் மகிழ்வாலும் நிறைந்தன.
———-
திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.
சமையல், தோட்டம், வீடு என மாமியாருடன் சேர்ந்து இரு வேலையாட்கள் உதவியுடன் உமாவின் பொழுது போய்க்கொண்டிருந்தது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறவினர் வீடு, கோவில், சினிமா, பூங்கா, கடற்கரை, கடைத்தெரு என கௌதம் அழைத்துச் செல்வான்.
புவனாவுக்கு சினிமா, கடைத்தெருவில் அக்கறையும் விருப்பமும் இல்லை என்பதால் அது தவிர மற்ற இடங்களுக்கு அவரையும் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை.
———
நாட்கள், வாரங்கள் மாதங்கள் என உருண்டோடின.
உமாவின் அருகாமை கௌதமின் இதயத்தில் மெதுமெதுவாக காதலை விதைத்தது. காதல் மலர்ந்து ஒவ்வொரு இதழாக விரிகையில் அவர்களது முதலாவது திருமணநாளை அண்மித்து காதலர் தினம் வந்தது.
புவனாவின் விருப்பப்படி அன்று காலை மூவரும் கோவிலுக்கு சென்று வந்தனர்.
அன்று உமாவுக்கு ஏதாவது பரிசு வாங்கிக்கொடுக்க விரும்பிய கௌதமுக்கு தயக்கமாக இருந்தது. சரி, திருமணநாள் வருகிறது தானே. அப்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைத்தவனை தனிமையில் அழைத்துச்சென்ற புவனா,
“கௌதம், இன்று உமாவை கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக்கொடுடா. காதலர் தினமான இன்று அவளுக்கு இந்த சந்தோசத்தையாவது கொடு.”
உள்ளூர சிரித்தவன்,
“சரி அம்மா, உங்கள் விருப்பம் எதுவோ அதுவே எனதும்.”
கேலியாக சொன்னவன் தாயை அணைத்து விடைபெற்றான்,
உமாவிடம் சென்று,
“மாலையில் ஆயத்தமாக இரு. கடைக்கு அழைத்துச் செல்கிறேன்.”
கூறிச் சென்றான் கௌதம்.
——–
ஏற்கெனவே கௌதம் பரிசளித்திருந்த பச்சைநிற சேலை அணிந்து, புவனா தொடுத்து வைத்திருந்த மல்லிகை மொட்டு சரத்தை கூந்தலில் சூடி, முத்து நகைகள் அணிந்து தேவதை போல் இருந்த உமாவை நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான் கௌதம்.
“உமா, இன்று உனக்கு ஏதாவது ஒரு நகை பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று சொல்.”
“என்னிடம் எல்லாமே இருக்கிறது கௌதம். அத்தையும் எத்தனையோ நகைகள் தந்திருக்கிறார்கள். உங்கள் அன்பு ஒன்றே எனக்கு போதும்.”
“அப்படியா…. அன்பை வைத்து என்ன செய்யப்போகிறாய்…”
“ஆ…. என்ன கேள்வி கேட்டுவிட்டீர்கள்… அன்பாலே என்னதான் செய்ய முடியாது. அன்பாலே எதையும் சாதிக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், அன்பாலே ஒரு காதல் மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறேன். அதற்குள் உங்களை குடி வைக்கப்போகிறேன். எப்படி…”
கூறி புன்னகைத்தாள் உமா.
“பரவாயில்லை நல்ல முயற்சி தான். முயற்சி திருவினையாக்க என் வாழ்த்துக்கள்.”
“நன்றி. ஆனால் அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை தோழரே!”
“பார்க்கலாம், பார்க்கலாம்…”
புன்சிரிப்புடன் கௌதம் மோதிரங்கள் இருக்கும் பகுதிக்குள் அழைத்துச் சென்றான்.
அதற்குள் கைபேசி அழைப்பு ஒன்று வர,
“ஒரு நிமிடம்… நீ பார்த்துக்கொண்டிரு.” என்ற கௌதம் சற்று நகர,
தீப்பிழம்புகள் கக்கிய வண்ணம் ஒரு சோடி விழிகள் உமாவை நோட்டம் விட்டன.
சற்றுத் தொலைவில் மறுபக்கம் திரும்பி நின்று கௌதம் கைபேசியில் கதைத்துக்கொண்டிருப்பதை பார்த்து மெதுவாக உமா அருகே வந்த அந்தப் பெண், விழிகளில் ஏளனம் தொனிக்க,
“நீ தான் அந்த தூரதிஷ்டசாலியோ…”
“புரியவில்லை. நீங்கள் யார்?”
“நான் யார் என்பதை கௌதமிடம் கேட்டுப்பார். அவன் இதயத்தில் குடியிருக்கும் தேவதை என்று சொல்வான்.”
அந்த வார்த்தைகள் கௌதமின் செவிகளில் தீப்பிழம்புகளை கொட்டின.
இதயத்தில் மூண்ட வெறுப்புடன் கைபேசி அழைப்பை முடித்தவனை, உமாவின் பதில் வார்த்தைகள் அசையவிடாமல் கவனிக்க வைத்தன.
“ஓஹோ…சொத்துக்கு ஆசைப்பட்டு காதலை அறுத்துக்கொண்டு ஓடிய பேரழகி நீ தானா. அட, உனக்கு நடந்தவை ஒன்றும் தெரியாது போல் இருக்கிறதே.
நீ ஓடியதை அறிந்த மறுநொடியே கௌதம் உன்னைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டாரே.”
அவளை மேலும் கீழும் ஆராய்ந்த உமா,
“உன்னைப் பார்த்தால் ஒரு சாதாரண அழகியாய்க்கூட தெரியவில்லையே. பேயைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. சொல்ல முடியாது, கௌதமுக்கும் அப்படித்தான் தெரியும் என்று நினைக்கிறேன். எதற்கும் நீ அவர் கண்களில் படாமல் கவனமாக இரு. தப்பித்தவறி அவர் கண்களில் நீ பட்டுவிட்டால் பேயைக் கண்டதுபோல் என்னை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்.”
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிருந்தா,
“ரொம்பத்தான் துள்ளுகிறாய். உன்னை ஒரு தோழியாகத்தான் அவன் நடாத்துகிறான் என்று எனக்குத் தெரியும். உன்னை ஒருநாளும் மனைவியாக அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
முழங்கினாள்.
“அடப்பாவமே, நாட்டு நடப்புகளை நீ அப்டேட் பண்ண மாட்டியா…”
யார் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்தாள் உமா,
“எங்கள் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. அவர் என்னை மனைவியாக ஏற்று எத்தனையோ மாதங்கள் சென்றுவிட்டன…”
நடக்காமலா போகப்போகிறது, மனதை தேற்றிக்கொண்டு,
“இன்று காதலர் தினம். பரிசு வாங்கித் தருவதற்காக என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறார். இதையெல்லாம் உனக்கு விளக்கிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.
உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இலவசமாக உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன், உன் கண்களை அங்கே இங்கே என்று அலைபாய விடாதே. அப்புறம் உன் கணவனைவிட பெரிய பணக்காரனின் நட்பு கிடைக்க அவனின் பின்னே ஓடிவிடப்போகிறாய். இப்படியே நீ ஓடிக்கொண்டிருந்தால் ஒரு நாள் நடுத்தெருவில் அநாதையாக நிற்கவேண்டி வரும். ஜாக்கிரதை.”
“ஏய்….” என்று கத்தியவளை பார்த்து,
“அடங்கடி…”
ஆட்காட்டி விரலை நீட்டி, விழிகளை உறுட்டி கூறியவள் பதிலுக்கு காத்திராமல் திரும்பி கௌதம் அருகே சென்று,
“கௌதம், நாம் வேறு கடைக்கு போகலாம். நான் நினைத்த மாதிரி டிசைன் இங்கில்லை போல் தெரிகிறது.”
அவனின் கரத்தை இறுகப் பிடித்துக்கொண்டாள்.
“கூல் டார்லிங்…”
உமாவை அணைத்தபடி வெளியேறிவிட்டான் கௌதம்.
கௌதமின் அணைப்பில் அமைதியடைந்தாள் உமா.
தான் சொல்ல நினைத்தவைகளை உமா சொல்லிவிட்டதால் பெரும் நிம்மதியும் அமைதியும் அடைந்த கௌதம் அந்த நொடியே உமா கட்டிக்கொண்டிருக்கும் காதல் மாளிகைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டான்.
———
உமாவுக்கு மோதிரம் வாங்கியபின் இருவரும் கடற்கரைக்கு சென்றனர்.
இருவரும் சற்று நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.
ஆதவன் கடலுடன் சங்கமிக்கும் மாலைப்பொழுது அழகாகக் காட்சியளித்தது.
பறவைகள் தங்கள் இணையுடன் கூடு திரும்பிக்கொண்டிருந்தன.
மல்லிகை மொட்டுக்கள் இதழ் விரித்து நறுமணம் பரப்பிக்கொண்டிருந்தன.
அந்த ரம்மியமான சூழலில்,
கௌதம், உமாவின் கரங்களை பற்றிக்கொண்டு,
“உமா, இன்னும் சில தினங்களில் எங்கள் திருமணநாள் வருகிறது. என் வாழ்க்கையில் நீ புகுந்த நாள். உன் நம்பிக்கை வீண்போகவில்லை. மெதுமெதுவாக நீ என் இதயத்துள் புகுந்துவிட்டாய். இதை நம் திருமணநாளில் உன்னிடம் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் இன்றைய காதலர் தினம் தான் சரியான தருணம் என்று முடிவு செய்து உன்னிடம் சொல்லிவிட்டேன்.
இருவரும் இதயத்தால் இணைந்துவிட்டோம். குடும்ப வாழ்விலும் இணைய உனது விருப்பத்தை அறிய விரும்புகிறேன்.”
வானத்திற்கு இணையாக உமாவின் கன்னங்களும் சிவந்தன.
நாணத்தில் நிலம் நோக்கின விழிகள்.
மெதுவாக அவன் மார்பினில் தலை சாய்த்து தனது விருப்பத்தை சொல்லாமல் சொல்லிவிட்டாள் உமா.
அவர்கள் வாழ்க்கையில் விடியலைத் தந்த அந்த அழகிய மாலைப் பொழுது, நிச்சயமாக அவர்கள் வாழ்வில் வந்த பொன்மாலை பொழுது.
*****