காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கருகிலுள்ள ஶ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் நான்காம் திகதி அசூரி கேசவ தீட்சிதர், காந்திமதி தம்பதியினருக்கு மகனாக இராமானுஜர் பிறந்தார்.
சிறு வயதிலேயே அறிவுத்திறன் மிக்க இவருக்கு எட்டு வயதில் உபநயனம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் தந்தையிடம் கல்வி பயின்றவர், தந்தை இறந்தபின் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர் என்கின்ற பண்டிதரிடம் வேதம், உபநிடதம் போன்றவற்றைக் கற்றார். பலமுறை இவ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யாதவப்பிரகாசர் கோபம் கொண்டு இராமானுஜரை கல்வியினின்று விலத்திவிட்டார்.
அதன் பிறகு இராமானுஜர் வீட்டிலிருந்தபடி தாமாகவே வேத பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
ஆச்சாரிய பரம்பரையில் வைணவ வழிமுறைகளில் மிகப்பெரிய குருவாக விளங்கிய ஆளவந்தார் (யமுனாச்சாரியார்) இராமானுஜரின் புலமை பற்றியும் நற்குணங்கள் பற்றியும் அறிந்ததோடு அவரது சீடர்கள் மூலமும் அறிந்த தகவல்களாலும் தனக்குப் பிறகு இராமானுஜரே வைணவ வழிமுறைக்கு தலைமைப் பொறுப்பேற்க வேண்டுமென்று விரும்பி அவரை ஶ்ரீரங்கத்திற்கு அழைத்துவர தனது சீடரை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் இராமானுஜர் ஶ்ரீரங்கம் போய்ச் சேருமுன்பே ஆளவந்தார் இறைவனடி சேர்ந்திருந்தார்.
ஆளவந்தாரின் மனக்குறைகளை தீர்க்கும் வண்ணம் இராமானுஜர், ஆளவந்தார் விரும்பியபடி,
- பிரம்ம சூத்திரத்திற்கு ஶ்ரீபாஷ்யம் என்ற உரையை எழுதினார்.
- விஷ்ணுபுராணம் இயற்றிய பராசர் மற்றும் பாகவதம் இயற்றிய வேத வியாசர் இவ்விருவரின் அழியாப் புகழுக்கு வழி சமைத்தார்.
- வேதத்தை தமிழில் பாசுரங்களாகத் தந்த நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றென்றும் வாழும்படி செய்தார்.
மனையாளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இல்லற வாழ்க்கையைத் துறந்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்ற இராமானுஜர், ஆளவந்தார் விரும்பியபடி ஶ்ரீரங்கம் சென்று வைணவ வழிமுறைக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகப் பொறுப்பும் அவருக்கு வர, கோயிலின் உடைமைகளை மீட்டெடுத்து சிறப்புற நிர்வாகம் செய்தார். ஶ்ரீவைணவ மட நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று நடாத்தினார். கோயிலுக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் கோயில் பூசைகளுக்குப் பயன்படுத்திய இராமானுஜர், பிச்சை பெற்று தனது வாழ்க்கையை நடாத்தினார்.
ஆளவந்தாரின் சீடர்களிடமிருந்து சில மந்திரங்களைக் கற்று தெரிந்துகொண்டார். ஆனால் உயர்ந்த மந்திரமொன்று ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் திருக்கோட்டியூர் நம்பி என்பவருக்கு மட்டுமே உபதேசித்திருந்ததை அறிந்தார். அந்த எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெறும் பொருட்டு திருக்கோட்டியூர் நம்பியை சென்று பார்த்தபோது, சிறிது காலத்திற்குப் பின் வரும்படி பணித்தார். இவ்வாறாக இராமானுஜர் 18 முறைகள் சென்ற போதிலும் இதே பதிலைத்தான் கூறி அனுப்பினார். ஒவ்வொரு முறையும் இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் செல்லும்போது, அவர், யார் வந்திருப்பது என்று கேட்பார். அதற்கு இவரும் ‘நான் இராமானுஜர் வந்திருக்கிறேன்’ என்று கூறுவார். 19வது முறை சென்றபோது அவரின் கேள்விக்கு ‘அடியேன் இராமானுஜர் வந்திருக்கிறேன்’ என்ற பதிலில் திருப்தியுற்று அவரை ஏற்றுக்கொண்டார்.
‘தகுதியில்லாதவர்களுக்கோ சாதாரணமானவர்களுக்கோ இந்த மந்திரத்தை உபதேசிக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை ஏற்று அந்த மந்திர உபதேசத்தை இராமானுஜர் பெற்றார். அதன் பின் அவர் தன் இருப்பிடம் நோக்கி செல்லும் வழியில் திருக்கோட்டியூர் நரசிம்மர் கோயிலில் ஒரு விழாவில் அதிகமான வைணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஒரே இடத்தில் அதிக வைணவர்களை பார்த்ததும் இராமானுஜர் கோயிலின் மதிலில் ஏறி யாவருக்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற சக்தி வாய்ந்த எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தார். இதனால் கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, குருவின் சொல்லுக்கு துரோகமிழைத்ததால் நரகம் புக நேரிடும் என்றார். அதற்கு இராமானுஜர், எல்லோரும் முக்தியடைய நானொருவன் நரகம் செல்வது பாக்கியமே என்று தனது கருணையை அறியச் செய்தார். இதனால் கோபம் தணிந்த திருக்கோட்டியூர் நம்பி, இராமானுஜரை ‘என் பெருமானாரே’ என்றபடி கட்டித்தழுவி மகிழ்ந்தார். இதனால் இராமானுஜருக்கு ‘எம்பெருமானார்’ என்ற பெயர் ஏற்பட்டது.
இராமானுஜர் சில சீடர்களுடன் தல யாத்திரை மேற்கொள்ளத் தொடங்கினார். கால்நடையாகவே சென்று வைஷ்ணவத்தை வளர்த்தார். பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை அறியச் செய்தார். தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே இரக்கம், பரிவு, கருணை முதலிய நற்குணங்களை சொரிந்தார். சாதி, மத பேதங்களை களைந்தெறிய மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள், கோயிலுக்குள் செல்வதற்கு போராடினார். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார்.
சரித்திரப் பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர் இராமானுஜர். மற்ற இருவர் ஆதிசங்கரர், மத்வர்.
இராமானுஜரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.
நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியார் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுஜர்.
இராமானுஜர், தனது 120 ஆவது வயதில் உயிர் நீத்தார்.
இறைவனைத் தொழும்போது “கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவர், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளி” என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்பது இராமானுஜர் இட்டுச் சென்ற கோட்பாடாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் ஶ்ரீஇராமானுஜர் சுவாமி திருக்கோயில் உள்ளது.
*****