ஓடி விளையாடு பாப்பா – கைபேசியோடு
முடங்கியிருத்தலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – என்றும்
தனிமையில் செல்லாதே பாப்பா
ஆண் பெண் பேதமொன்றும் பாரார் – நீ
குழந்தை என்றும் பாரார் பாப்பா
கேடு செய்ய பார்த்திருக்கும் கூட்டம் – உன்னை
துவம்சம் செய்யக் காத்திருக்கு பாப்பா
தாய் தந்தை உழைப்பு தேவை இன்று – அன்பைத்தேடி
பிறரை நாடிச் செல்லாதே பாப்பா
ஏமாற்ற காத்திருப்போர் அநேகர் – உன்னை
அழிவை நோக்கி இழுத்துச் செல்வர் பாப்பா
தீயோரை நீயும் கண்டுவிட்டால் – உடனே
தூர விலகிச் சென்றுவிடு பாப்பா
பாவச் செயல்கள் தன்னை எதிர்த்து – நீயும்
துணிவு கொண்டு போராடு பாப்பா
துரித உணவை தீண்டாதே பாப்பா – அது
அழைத்து வரும் தீராத நோய்கள்
மனையில் சமைத்த உணவு நன்று பாப்பா – அது
தந்துவிடும் ஆரோக்கிய வாழ்வு
பெற்றோர் பெரியோர் குருவை மதித்து – என்றும்
உறவுகளை பேண வேண்டும் பாப்பா
நல்ல நண்பர்களை தேர்ந்து எடு நீயும் – என்றும்
அளவோடு பழகிவிடு பாப்பா
உன் மகிழ்வுக்காக பாடுபடும் தாய் தந்தை – அவர்
சொல் கேட்டு நடந்துவிடு பாப்பா
பேராசை அழிவைத் தரும் நிச்சயம் – கிடைப்பதில்
திருப்தி அடைதல் மகிழ்வு தரும் சத்தியம்
யாவருக்கும் தேவை நல்ல கல்வி – அதை
தேடி நீயும் கற்றுவிடு பாப்பா
நல்லொழுக்கம் அறிந்துவிடு பாப்பா – நற்
பண்போடு வாழ்ந்துவிடு பாப்பா
கணணியினை பயன்படுத்து நீயும் – அன்னம்போல்
நல்லவற்றை பிரித்து எடு பாப்பா
நல்ல நூல்களை படித்தே நாள்தோறும் – பொது
அறிவை நன்றாய் வளர்த்துவிடு பாப்பா
உண்மையையே பேசிவிடு பாப்பா – என்றும்
நேர்மையாக வாழ்ந்துவிடு பாப்பா
வறுமைக்கு உதவி செய் பாப்பா – நீயும்
இயலாமை கண்டு இரக்கங்கொள் பாப்பா
பொன்போன்ற காலமது பாப்பா – அதை
வீணாக்கலாகாது பாப்பா
ஓய்ந்திருக்கும் நேரமது தன்னில் – நீ
சுற்றுச் சூழல் பேண வேண்டும் பாப்பா
இறை வணக்கம் வேண்டும் நம் வாழ்வில் – அது
துணையிருந்து காத்துவிடும் எம்மை
இயற்கை வளம் பேண வேண்டும் பாப்பா – நம்மை
வாழ வைக்கும் தெய்வமது பாப்பா