ஒரு ஊரில் வசித்து வந்த ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்து வந்தது. வருமானத்தில் திருப்தியின்மையும் பேராசையும் கொண்ட மனைவியால் கருத்து வேறுபாடும் முரண்பாடுகளும் அவர்கள் வாழ்வில் நிம்மதியை அழித்துக்கொண்டிருந்தது. அவ்வேளைகளில் ஔவை மூதாட்டியார் அருளிய பாடல்களில் இரண்டு கணவனின் நினைவில் வந்துகொண்டேயிருக்கும்.
இருந்து முகம் திருத்தி
ஈரொடு பேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.
என்ற பாடலும்
பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.
என்ற பாடலுமே அவை.
நாளாக நாளாக அமைதியின்மையாலும் நிம்மதியின்மையாலும் மிகவும் விரக்தியடைந்த கணவன் ஒரு நாள் கூறாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டான். இதனால் மனமுடைந்த மனைவி மிகவும் கஷ்டத்துடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகவும் சென்று வருடங்களையும் கடந்துவிட்டது. கணவன் வருவான் என்ற நம்பிக்கையும் குறைந்துகொண்டே வந்தது.
ஒரு நாள், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் அவளிடம் வந்து, பக்கத்து ஊரில் அவளது கணவனைச் சந்தித்ததாகவும், நாளை அவர் அவளைப் பார்க்க ஐஸ்வர்யங்களுடனும் செல்வங்களுடனும் வருவதாகவும் தகவல் சொல்லச் சொன்னதாகக் கூறிச் சென்றார்.
அவளுக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கணவன் தன்னிடம் வருகிறார் என்ற செய்தியைவிட அவருடன் வரும் ஐஸ்வர்யங்களும் செல்வங்களுமே அவள் கண் முன் வெவ்வேறு வடிவங்களில் ஆனந்தத் தாண்டவமாடிக்கொண்டிருந்தன.
மறுநாள் கற்பனையில் மிதந்தபடி தன் கணவனுக்காக விருந்து சமைத்து அவன் வருகைக்காக காத்திருந்தாள். சற்று நேரத்தில் யாரோ அழைத்ததுபோல் சத்தம் கேட்க வாசலுக்கு விரைந்து சென்று பார்த்தாள். அங்கே காவி உடையுடன் ஒரு சந்நியாசி நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடும் வண்ணம் இருந்தார். கணவனின் வருகைக்காக நல்ல மனநிலையில் காத்திருந்தவள் மிகவும் பணிவுடன், ஐயா, தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். அவரும் சிறு புன்னகையுடன், என்னைத் தெரியவில்லையா? நான்தான் உனது கணவன், என்றார். அவளும் மிகுந்த ஏமாற்றத்துடன் அவரைக் கூர்ந்து பார்த்து அடையாளம் கண்டுகொண்டாள். உங்களை நான் இந்தக் கோலத்தில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றபடி அவரின் தோற்றத்தில் ஏற்பட்ட மரியாதையுடன் உள்ளே வாருங்கள் என்றழைத்தாள். முதலில் உணவருந்துங்கள், உங்களுக்காக நான் விருந்து சமைத்துள்ளேன் என்று உணவு படைத்தாள். அவரும் திருப்தியுடன் பசியாறினார்.
சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. பொறுமை இழந்த அவள், உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்றாள். தாராளமாக கேட்கலாம் என்று அவர் சொன்னதும், தாங்கள் சொல்லியனுப்பியது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருக்கிறதே என்று கேட்டாள். அப்படி என்ன நடந்துவிட்டது? என்று வினவியவரிடம், ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு இப்படி சந்நியாசி கோலத்தில் வந்திருக்கிறீர்களே, என்று மிகவும் ஆதங்கத்துடன் வினவினாள்.
ஆமாம், அவை யாவும் என்னுடன் தான் இருக்கின்றன. உனக்குத்தான் அது புரியவில்லை, தெரியவில்லை. இந்த மாய உலகில் எது நிலையானது. எமது உயிர் மட்டுமே நிலையானது. அதை சுமந்திருக்கும் இந்த உடலும், உடல் அனுபவிக்கும் ஆடம்பரங்களும் சுகபோகங்களும் நிரந்தரமற்றவை. நிலையில்லா வாழ்க்கையில் எவற்றை நீ செல்வங்களாக நினைக்கின்றாயோ அவை நிரந்தரமற்றவை. அதாவது காசு, சொத்து, நகை எல்லாமே இன்று இருக்கும் நாளை போய்விடும். எம்முடனேயே இருந்து இறுதிவரை வரும் செல்வங்களைத்தான் நான் கொண்டுவந்திருக்கிறேன். அதை எல்லோருக்கும் கொடுத்து, வாழ்க்கை என்றால் என்ன, எப்படி வாழ வேண்டும் என்று அவர்களுக்கு புரியவைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
நான் இங்கிருந்து வெளியேறியபோது எங்கு செல்வது, என்ன செய்வது என்ற யோசனையுடன் ஒரு கோவிலைச் சென்றடைந்தேன். அன்று அங்கு ஒரு சாமியார் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். அவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூறியவற்றை கேட்கும் போது என்னுள் ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. இந்த உலகில் எது நிலையானது எது நிலையற்றது என்பதையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போன்ற ஆன்றோர் வாக்குகளின் அர்த்தங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டேன். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்யவேண்டியவற்றை தெரிந்துகொண்டேன். அப்போதே இங்கு வந்து உன்னுடன் அவற்றை பகிர்ந்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. அதைவிட இவை யாவும் எல்லா மக்களையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. அந்த சாமியாரிடம் இது பற்றி உரையாடியபோது, என்னுடன் நீ வந்தால் நாம் பெறவேண்டிய ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் எவை என்பதையும் அவற்றை எப்படிப் பெறலாம் என்பதையும் விளக்கமாகக் கூறி அதற்குரிய பயிற்சிகளையும் கற்றுத் தருகிறேன். அதன் பின் நீ மக்களுக்கு அவற்றை சொற்பொழிவுகள் மூலம் அறியத் தரலாம் என்றார். உடனேயே நான் அவருடன் சென்றுவிட்டேன்.
இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் அதற்கும் எமக்குமான தொடர்பு பற்றியும் எமக்கு இருக்கும் ஆற்றலைப் பற்றியும் நன்கு விளக்கினார். உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான தியானங்களையும் யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். இந்த உலகத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கினார். அறியாமை நீங்கி இன்று உடல், உள ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் திருப்தியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இன்று இந்த ஊர்க் கோவிலில் சொற்பொழிவு ஆற்றவுள்ளேன். அதில் நீ கலந்துகொண்டாயானால் உன்னுடைய மிகுதி வாழ்வை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் திருப்தியுடனும் வாழலாம் என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.
அவளோ வாயடைத்துப்போய் சிலையாகினாள்.
குறிப்பு: எனது மாமா ஒருவர் கூறிய குறிப்புகளிலிருந்து ஒரு குறிப்பில் எனது கற்பனை வடிவம்.
*****