வழமைபோல் கீர்த்தனா அலுவலகத்தில் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.
“கீர்த்தி! நானும் பார்த்துக்கொணடுதான் இருக்கிறேன் தினமும் நீ குழந்தையை கிணத்துக் கட்டில வைத்துவிட்டு வந்தமாதிரி பரபரப்பா இருக்கிறாய்….
உனக்கென்னம்மா குறை. கண்ணிறைந்த கணவன், அருமையான மாமனார் மாமியார், அழகான குழந்தை…”
“ஏய் பத்மா! உனக்கெங்கே தெரியப்போகிறது என்னுடைய கஷ்டம். எல்லாம் இருக்கு….. ஆனா இல்லை.”
“என்னடி, கஷ்டம் என்று நகைச்சுவையாக சொல்கிறாய்.”
“எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று அர்த்தம்….
உதவி செய்கிறேன் என்று என்னுடைய மாமியார் பண்ணும் கூத்து தாங்க முடியல. நல்ல மனதோட தான் செய்யிறாங்க. அது வினையா வந்து முடியுது…
ஒரு நாள், குழந்தை தூங்கிறான் தானே என்று, அவனோட அழுக்கு உடைகளை துவைத்துப் போட்டால் எனக்கு உதவியாக இருக்குமென்று போய் குளியலறையில் சவர்க்கார தண்ணில வழுக்கி விழுந்திட்டாங்க…
இன்னொரு நாள், குழந்தையுடைய துவைத்த உடைகள் காய போடும் மரத் தட்டியை வெளியே வைக்க வேண்டாம், காற்றுக்கு விழுந்தால் திரும்பவும் துணிகளை துவைக்க வேண்டும். அதனால் கூடத்தில் இருந்து காயட்டும் என்று சொல்லி வந்தேன். அனால் அன்று நல்ல வெயில், விரைவா காய்ந்துவிடும் என்று வெளில வைத்து, காற்றுக்கு விழுந்து, எனக்கு இருமடங்கு வேலை…
மற்றொரு நாள், குழந்தை தூங்குகிறான், இரவு சமையலுக்கு மரக்கறிகளை வெட்டி வைத்தால் எனக்கு உதவியாயிருக்குமென்று அவசர அவசரமாக வெட்டியதில் விரலை பெரிதாக வெட்டிவிட்டாங்க…
இப்பதான் குழந்தைக்கு எட்டு மாதம். நான்கு வயது முடியும்வரை எல்லோரையும் முருகன் தான் காப்பாற்ற வேண்டும்….”
“அப்புறம் வேலையை விடப்போகிறாயா என்ன?”
“இல்லடி, அப்புறம் அவனை சிறுவர் பாடசாலையில் சேர்த்துவிடலாம். கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கலாம்…
சரி சரி…. என் புலம்பல கேட்டது போதும். வேலையைப் பார்.”
கீர்த்தனாவின் கணவன் சரவணன் அரசாங்க நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி இரண்டு வருடங்கள். இவர்களுக்கு எட்டு மாத குழந்தை பிரணவன்.
திருமணத்தின் பின் வேலைக்குப் போக கீர்த்தனாவுக்கு துளியும் விருப்பமில்லை. வீட்டிலே இருந்து பொறுப்பாக எல்லோரையும் கவனித்து குடும்பம் நடத்தவே அவளுக்கு விருப்பம். கணவனின் வருமானம் நான்கு பேருக்கும் ஓரளவு வசதியாக வாழ போதும் என்றாலும் குழந்தை வந்ததும் செலவுகள் கூடும். மின், நீர் கட்டணங்களுக்கே பாதி பணம் செலவழிகிறது. எனவே வேலையை விட முடியவில்லை.
மாமனார் மாமியார் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பாசம் மிக்கவர்கள். ஆனால் மாமியாரின் உதவிகள் சிலசமயங்களில் வினையாக வந்து முடிகிறதே…
வேலைக்குப் போகுமுன் சமையல், உடைகளை தோய்த்தல், குழந்தையின் தேவைகளுக்கும் சகல ஆயத்தங்களையும் செய்து வைத்துவிடுவாள்.
————
தினமும் சரவணன் தான் பிந்தி வருவான். அன்றும் கீர்த்தனா வழமைபோல் அலுவலகத்திலிருந்து வந்து எல்லா வேலைகளையும் முடித்திருந்தபோது,
“அம்மா………….
அப்பா…………..
குட்டிக் கண்ணா…………..
கீத்துச் செல்லம்………”
வழமையாக பிரணவ் குட்டியை அழைத்துக்கொண்டு வரும் சரவணன், அன்று வீட்டிலுள்ள எல்லோரையும் ஏலம் விட்டுக்கொண்டு வர, பரபரப்பாக எல்லோரும் கூடத்தில் கூடினர்.
“பிரணவ் கண்ணா! நீ எங்களுக்குப் பிறந்து சந்தோஷத்தை மட்டுமல்ல அதிஷ்டத்தையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டாய் குட்டி…
குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நான் கற்பனை பண்ண முடியாத பதவி உயர்வு உன்னோட அப்பாக்கு கிடைத்திருக்கிறது கண்ணா…..”
“என்னங்க சொல்லுகிறீங்க….”
“ஆமா கீத்து…… நிறுவனத்தில் ஒரு இயக்குநர் பதவி விலகுகிறார். அவருக்கு வயதிருக்கிறது. ஆனால் அவருடைய ஒரே மகளுக்கு வெளிநாட்டில திருமணம் நிச்சயமாகி எல்லோருமே அங்கு போக வேண்டிய கட்டாயம். அந்தப் பதவிக்கு அடுத்து வரவேண்டியவர் சங்கர் தான். அவரும் ஒரு வருட சம்பளமில்லா விடுமுறையில இருக்கிறார். உடனடியாக வெற்றிடம் நிரப்பவேண்டிய காரணத்தால் அடுத்த தகுதியானவன் எனக்கு தந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஒருவர் ஓய்வில் செல்வதால், சங்கர் வந்து அந்த இடத்தை நிரப்பலாம். ஒருவருக்குமே மனக் கஷ்டம் இல்லை.
அதோடு வீடும் வாகன வசதியும் தருகிறாங்க. எல்லாம் நம்ம பிரணவ் செல்லத்தோட அதிஷ்டம் தான்.”
கீர்த்தனாவால் நம்பவே முடியவில்லை.
அப்போ நான் வேலையை விட்டுவிடலாம் போல இருக்கே…
சரவணன் என்ன சொல்வாரோ தெரியவில்லையே…
வருமானம் பெருக பெருக பணத்தாசை கூடும் என்று சொல்வார்கள்.
வேலைக்கு ஆட்களை வைக்கலாம் என்று சொல்வாரோ…
அவர்களை நம்ப முடியாதே…
முருகா! அதிஷ்டத்தை தந்த நீதான் நல்லவழியையும் காட்ட வேண்டும்.
கீர்த்தனாவின் மனம் புலம்பிக்கொண்டிருந்தது. கணவனின் பதவி உயர்வின் சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியவில்லை.
“கீர்த்து…… நான் ஒன்று சொல்வேன். அது என்னுடைய விருப்பமே அன்றி கட்டளை அல்ல. நீ தான் முடிவு எடுக்க வேண்டும். என்ன முடிவு நீ எடுத்தாலும் எனக்கு சம்மதமே.”
“என்னங்க இது….. உங்களுடைய விருப்பத்தை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். சொல்லுங்க…உங்களுடைய விருப்பம் தான் என்னுடையதும்.”
“இல்ல கீர்த்தனா, நீ என்ன நினைப்பாயோ தெரியாது. நீ படித்த படிப்பு வீண் போகுதென்று நினைத்தால் நான் சொல்வதை மறந்துவிடு…”
“சரி…. நீங்க முதல்ல சொல்லுங்க…”
“நீ உன்னுடைய வேலையை இராஜினாமா செய்தால் நல்லதென்று நினைக்கிறேன்…”
அடுத்த கணம் கீர்த்தனா கணவனை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்…
மனம் முருகனுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தது.
******************************************************************************