வாசித்தவற்றையும் கேட்டவற்றையும் கருத்திற்கொண்டு மனதில் தோன்றிய எண்ணங்களை ஒவ்வொன்றாக இங்கு பதிவு செய்கின்றேன். ஒவ்வொரு குவியலிலும் கிட்டத்தட்ட ஐந்து எண்ணங்கள் பதியப்படும். குவியல்களின் தலைப்புகளுக்கேற்ப எண்ணங்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு குட்டிக் கதை உதாரணமாக தந்திருக்கின்றேன். இப் பதிவுகள் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்துடன் விழிப்புணர்வையும் கொடுக்கும் என நம்புகின்றேன்.
கௌரிமோகன்.
08.05.2024.
குவியல் 1
குவியல் 1 இல் பஞ்சபூதங்கள் எப்படி எமக்கு துணையாக இருக்கின்றன எனவும் அவற்றினால் புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளையும் மற்றும் மனிதரின் செயல்கள் எவ்வாறு பஞ்சபூதங்களை பாதிப்படையச் செய்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.
பஞ்ச பூதங்களினாலான எமது உடலுடன் இணைந்து உயிர் வாழ்வதற்கு பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் துணை அத்தியாவசியமாகும். இவற்றில் எமக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று என்பவை தெளிவானவை. ஆகாயத்திற்கு விளக்கம் தேடும்போது, ஆன்மீக ரீதியில் அது ஒரு வெற்றிடம் என அறியப்படுகிறது. விஞ்ஞானத்தில் வெற்றிடம் என்ற சொல் காற்று இல்லாத/காற்று அகற்றப்பட்ட ஓர் இடமாகும். எம்மைப் பொறுத்தவரையில் அதாவது சாதாரண மக்களுக்கு காற்று, நீர்கொண்ட மேகங்கள், பரவும் தீ, புயலோடு அள்ளிச் செல்லும் மணல் இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதே ஆகாயம்.
பண்டைய காலத்தில் இந்துக்கள் இந்த பஞ்ச பூதங்களைத்தான் பயபக்தியுடன் கடவுளாக வணங்கி வந்தார்கள் என நம்பப்படுகிறது. அக்காலகட்டத்தில் மனிதனது நடவடிக்கைகள் இயற்கையை மாசடையச் செய்யாதிருந்தது. இயற்கையும் அவனுக்குத் தேவையானவற்றை வாரி வழங்கியது.
இன்றோ மனிதன் பல நவீன கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொகுசான வாழ்வு வாழ பழகிவிட்டான். புதிய பாவனைப் பொருட்களின் எதிர்மறையான பக்கவிளைவுகளால் இயற்கை மாசடைவதையும் மழை வீழ்ச்சி குறைவடைவதையும் அவன் பொருட்படுத்தவில்லை. புதிய கிருமிகளும் நோய்களும் மக்களை வாட்டத் தொடங்கிவிட்டன. இதிலிருந்து தப்பிக்க மக்கள் மனதில் விழிப்புணர்ச்சி ஏற்படும் வகையில் கருத்தரங்குகளையும் சொற்பொழிவுகளையும் நடாத்த வேண்டும். ஒரு சில மனிதர்களும் சில நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். அரசாங்கமும் பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டது. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை எரித்து நச்சுப்புகை பரப்புதல், வாகனங்களில் புகை கக்குதல், மழை நீர் வடிந்து ஓடும் வாய்க்கால் வழிகளை அடைத்து கட்டிடங்கள் எழுப்புதல் போன்ற செயல்களைப் புரிந்து இயற்கையை சீற்றம் கொள்ளச் செய்யாது அதனுடன் இணைந்து வாழ்ந்தால், இயற்கை எமக்கு துணையாக இருந்து இனிதே வாழ வழிசமைக்கும்.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன எவ்வாறு எமது வாழ்க்கையின் பகுதியாக அமைந்துள்ளன என்பதை தனித் தனியாக பார்ப்போம்.
குவியல் 1 எண்ணம் 1

நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்று நிலம். நிலத்தை பூமி என்றும் சொல்வர். நிலம் எனும்போது, மனிதனின் வாழ்விடங்களுடன், காடுகளும் பாலைவனங்களும் அடங்கும்.
பயிர்ச்செய்கைக்காக நிலத்தை வெட்டி, கொத்தி, உழுகிறோம். காலணிகளை அணிந்துகொண்டு மிதிக்கிறோம், நடக்கிறோம் குதிக்கிறோம். பெரிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமியின் ஆழத்தில் பாறாங்கல் வரை தோண்டி அத்திவாரங்கள் போடப்படுகின்றன. நாம் என்ன செய்தாலும் அதை பொறுமையுடன் தாங்கிக்கொள்வதால் நிலத்தை பூமாதேவி என்று தெய்வமாக உருவகித்து இந்துக்கள் வழிபடுகின்றனர். வீடோ அல்லது அலுவலக, தொழிற்சாலை கட்டிடங்களோ கட்டுமுன் அந்த நிலத்தில் பொறுமையின் சிகரமான பூமாதேவியை வணங்கி பூமிபூஜை செய்த பின்பே கட்டடவேலை ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
வேலை தேடுவதற்காக நகர்ப்புறம் சென்று அலைந்து பணத்தைக் கொட்டி ஏமாறும் இளைஞர்கள், கீழே குறிப்பிட்டிருக்கும் ஆத்திசூடியில் ஔவையார் கூறியிருப்பதைப் போல் பயிர்ச்செய்கைக்கு உதவாத களர் நிலத்தை பண்படுத்தி விளைச்சல் நிலமாக மாற்றுவதில் தங்கள் உழைப்பைக் கொட்டி காலத்திற்கேற்ற பயிர்ச்செய்கையில் ஈடுபட்டால் பலன் நிச்சயம்.
ஆத்திசூடி – “பூமி திருத்தி உண்.”
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – களர் நிலமாகக் கிடக்கும் பூமியைச் செப்பனிட்டுப் பயிர் செய்து உண்டு வாழ்க.
திருக்குறளில் திருவள்ளுவர், நிலத்தில் பாடுபட்டு பயிர்செய்து வாழ்பவரின் பெருமையை பின்வருமாறு கூறுகிறார்.
குறள் – “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
டாக்டர் மு. வரதராசனாரின் விளக்கவுரை – உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
இயற்கையின் சீற்றத்தினால் கடலினாலும் காற்றினாலும் நிலவளம் பாதிக்கப்படுகிறது. கடல் அலைகளின் வேகம் அதிகரிக்கும்போது கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. காற்றின் வேகம் கூடும்போது ஓரிடத்திலுருந்து இன்னோர் இடத்திற்கு மண் எடுத்துச்செல்லப்படுவதால் அவ்விடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண்ணின் வளம் குறைந்து தாவரங்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது.
மனிதனின் செயல்களினால் அனர்த்தங்களும் அழிவுகளும் விரைவுபடுத்தப்படுகின்றன. மனிதன் வாழ்வதற்கு நிலம் அத்தியாவசியமாகும். செல்வந்தர்கள் தேவைக்கு மேலதிகமாக நிலப்பகுதிகளை தங்கள் பரம்பரைக்குமென ஆக்கிரமிப்பதால் நிலப்பகுதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சிலரும், பேராசைகொண்டு பலரும், அதிகரிக்கும் சனத்தொகை காரணமாகவும் காடுகளை வெட்டி குடியிருப்புகளை அமைக்கிறார்கள். காடுகள், நாடுகளாக மாறும்போது காட்டு விலங்குகள் என்ன செய்யும்? அவை இயல்பாக குடியிருப்புக்களுள் நுழையும். அதன் காரணமாக காட்டு விலங்குகளின் அட்டகாசம் அதிகரிக்கிறது என்று புலம்புவதிலும் அதை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதிலும் அர்த்தம் இல்லை. அதே சமயம் மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால் மழை வீழ்ச்சி குறைவடைந்து வறட்சி நிலவுவதுடன் மண்ணரிப்பும் துரிதப்படுத்தப்படுகிறது. மரங்களை வெட்டுவதால் மண்ணினை தாங்கிப் பிடிக்கும் பிடிமானம் இல்லாது போகிறது. இதனால் இயற்கையாக ஏற்படும் மண்ணரிப்பு தூண்டிவிடப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதிகளில் கட்டுமானப் பணிக்காக பூமியைத் தோண்டுவதாலும், கற்களுக்காக மலைகளை உடைப்பதாலும், பார ஊர்திகளின் போக்குவரத்தினால் ஏற்படும் அதிர்வுகளினாலும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.
இன்னொரு பக்கம் தொழிலதிபர்கள், விளைச்சல் நிலங்களை மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி வாங்கி, சுற்றுச் சூழலை மாசாக்கும் தொழிற்சாலைகளைக் கட்டி எழுப்புகிறார்கள்.
நகர்ப்புறங்களில் மழைநீர் வடிந்தோடும் வாய்க்கால்களை அடைத்து அதற்குமேல் கட்டிடங்களை கட்டுகிறார்கள். அதனால் பெருமழை பெய்யும்போது மனைகளுள் மழைநீர் புகுந்து பேரழிவை உண்டாக்கும்போது மழையை திட்டித் தீர்க்கிறார்கள்.
நிலத்தை அந்தந்த இடத்திற்குரிய விதத்தில் பயன்படுத்தாமையினாலே பூமியில் இயற்கை அனர்த்தங்களான மண்சரிவு, மண்ணரிப்பு போன்றவை தூண்டப்பட்டு பேரழிவுகள் ஏற்படுகின்றன.
பொறுமைக்கும் எல்லையுண்டு. பிறக்கும் உயிர்களைத் தாங்கி நின்று அவை இறந்தபின்பு தன் உடம்பில் புதைத்துக்கொள்ளும் பூமாதேவியை சீற்றமுறச் செய்யும்போது அதன் விளைவாக பாரிய அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் வியர்வை சிந்தி பாடுபடும்போது அவள் எமக்கு தேவையானதை அள்ளி அள்ளித் தருவாள் என்பதில் ஐயமில்லை.
உதாரணக் கதை
அது ஒரு கிராமம். அங்கு பயிர்ச்செய்கை அமோகமாக நடக்கக் காரணம் கோடை காலங்களில் குளத்து நீரை திறந்துவிடுவார்கள். அது வாய்க்கால் வழியாக பயிர்ச் செய்கைக்குரிய காணிகளுக்குச் செல்லும். அதனால் அங்குள்ள மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
அத்துடன் அங்கு இயங்கும் சனசமூக நிலையமும் மக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுத்தும் ஆலோசனைகள் வழங்கியும் வருவதால் அக்கிராம மக்கள் நிம்மதியாகவும் வாழ முடிகிறது.
முழுக்க முழுக்க பொதுநல சேவையுடன் இயங்கும் அந்த சனசமூக நிலையத்தின் தலைவர், சிவராமனும் மற்ற உறுப்பினர்களும் தன்னலம் கருதாதும் நேரகாலம் பாராதும் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால் இச் சேவையை அவர்களது முக்கிய கடமைகளுள் ஒன்றாக செய்து வருகின்றனர். கிராமத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மக்களின் உடல உள ஆரோக்கியத்திற்கும் மாதமொருமுறை விழிப்புணர்வு கூட்டங்கள் நடாத்துவதில் தவறுவதில்லை.
இக்கிராமத்தில் வசித்துவந்த கார்த்திகேயனும் அவர் மனைவியும் அவர்களது ஒரே மகனின் வேலை காரணமாகவும் தங்களது உடல்நலம் காரணமாகவும் நகர்ப்பகுதியில் மகனுடன் வசிக்கச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு சொந்தமான பயிர்ச்செய்கைக்குரிய நிலப்பரப்பை அங்கிருந்த நான்கு குடும்பங்களுக்கு பிரித்து குத்தகைக்குக் கொடுத்துச் சென்றுவிட்டார்கள். அந்தக் குடும்பங்களும் ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக குத்தகைப் பணத்துடன் அந்நேரம் காணியில் விளைந்திருக்கும் தானியங்கள், காய், கனிகளையும் கொண்டுசென்று நேரடியாக் கொடுத்து வருவது வழக்கம்.
சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த அந்தக் குடும்பங்களின் வாழ்க்கையில் புயல் வீசுவதற்குரிய அறிகுறிகளை உணரக்கூடியதாக சில சம்பவங்கள் நடந்தன.
கார்த்திகேயனின் பேரன், வேலவன் துடிதுடிப்பு மிகுந்த இளைஞன். ஒரு நாள் கிராமத்திற்கு வந்து குத்தகைக்குக் கொடுத்திருந்த நிலப்பரப்பை சுற்றிப் பார்த்துச் சென்றான். இரு நாட்கள் கழித்து வேறு மூன்று இளைஞர்களுடன் வந்து அவர்களுக்கு இடத்தைச் சுற்றிக் காட்டி, “தாத்தாவுடன் கதைத்துவிட்டு ஒழுங்கு செய்யலாம். உங்கள் தேவைக்கேற்ற இடமும் சூழலும் இது. நிச்சயம் இதை நான் உங்களுக்குச் செய்து தருவேன்.” என்ற வேலவனின் வார்த்தைகளை அருகில் நின்றவர்கள் மூலம் கேட்டறிந்த அந்த நான்கு குடும்பத் தலைவர்களும் இடி விழுந்தது போல் அதிர்ந்து போயினர். வேலவன் அவர்களை சந்திக்கவுமில்லை, அவர்களுடன் கதைக்கவுமில்லை.
அந்த நால்வரும் உடனடியாக சனசமூக நிலையத் தலைவர் சிவராமனை சந்தித்து நடந்தவற்றைக் கூறி என்ன செய்யலாம் என்று பதட்டத்துடன் கேட்டனர். சிவராமனும் நிதானமாக,
“கார்த்திகேயன் ஐயாவைப் பற்றி இங்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். நிலத்தின் அருமையையும் அதன் முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்தவர். காணியை அவர் ஒருபோதும் தவறான நடவடிக்கைகளுக்காக நிச்சயம் கொடுக்கமாட்டார். அவர்களுக்கு இக் காணி ஒரு நல்ல நோக்கதிற்காக தேவைப்பட்டால் உங்கள் நால்வருடனும் கதைத்துத்தான் முடிவெடுப்பார். அந்த முடிவு நிச்சயம் உங்களை பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்வார். கவலையை விடுங்கள்.” மேலும் அவர், “உங்கள் திருப்திக்காக ஒன்று செய்வோம். நாளை என்னுடன் நீங்கள் நால்வரும் வாருங்கள். கார்த்திகேயன் ஐயாவை நேரில் சென்று பார்த்து விஷயத்தை கதைத்து தெளிவுபெறுவோம்.” என்று கூற அதற்கு அவர்களும் சம்மதித்தனர்.
மறுநாள் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நடந்த சம்பவங்களைக் கூறி, “ஐயா, என்ன? ஏது? என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட உங்கள் மூலம் விபரங்களை அறியலாம் என்றுதான் வந்தோம். திடீரென இவர்களிடமிருந்து காணியை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். இவர்களுடைய வாழ்வாதாரமே அந்த பூமிதான். இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர் விளைச்சல் தரும் பூமியை வாங்கி தொழிற்சாலைகளைக் கட்டி கிராமங்களை மாசடையச் செய்கிறார்கள். அந்தப் பயமும் எங்களுகிருக்கிறது ஐயா.” என்று சிவராமன் கூறினார்.
பொறுமையாக யாவற்றையும் கேட்டுக்கொண்ட கார்த்திகேயன், “வேலவன் இதுபற்றி என்னுடன் ஒன்றும் கதைக்கவில்லை. அவன் என்னுடைய பேரன். அவனுக்கு இந்தமாதிரி எண்ணங்கள் எல்லாம் இருக்காது. விளைச்சல் நிலங்கள் தெய்வத்திற்கு சமம். அவை உயிர்களுக்கு உணவு தரும் அன்னபூரணி என்ற எண்ணங்களுடனேயே வளர்ந்திருக்கிறான். என்றாலும் உங்கள் திருப்திக்காக அவனிடம் இதுபற்றி உங்கள் முன்னிலையிலேயே கேட்போம்.” என்றவர் உடனடியாக வேலவனை தொடர்புகொண்டு வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அடுத்த பத்து நிமிடங்களில் வேலவன் வந்துவிட்டான்.
தாத்தா கூறியவற்றை கேட்டவன்,
“எல்லோரும் என்னை மன்னியுங்கள். இந்த நிகழ்வு இவ்வளவு மன உளைசலை உங்களுக்குக் கொடுத்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது நண்பர்கள் மூவர் அவர்களது தொழில் சம்பந்தமாக விளைச்சல் நிலங்களைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்காக சில கிராமங்களுக்கு சென்று தகவல்கள் சேகரிக்கின்றார்கள். அது தொடர்பாகத்தான் நான் அவர்களை அங்கு அழைத்து வந்தேன். அவர்கள் உங்களை சந்திப்பதற்காகத்தான் தாத்தாவுடன் கதைத்து ஒழுங்கு செய்வதாகக் கூறினேன்.” என விளக்கமளித்தவன், மேலும்,
“பூமித்தாயின் மகத்துவங்களை நன்கு அறிந்திருக்கிறேன். இங்கு நகர்ப்பகுதியிலும் சிறிய இடத்தையும் வீணாக்காது சிறு வீட்டுத்தோட்டம் வைத்திருக்கிறோம். நீங்கள் கவலைப்படாதீர்கள். அந்த நிலத்தை யாருக்காவது கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயமாக அதில் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்குத்தான் கொடுக்கவேண்டும், நிலத்தின் அருமை தெரிந்து நடப்பவர்கள் அவர்கள், என்று தாத்தா அடிக்கடி கூறுவார்.” என்றான். கார்த்திகேயனும் சிறு புன்னகையுடன் தலையாட்டினார்.
கண்ணீர் மல்க, எழுந்து நின்று, நன்றி கூறி, நிம்மதிப் பெருமூச்சுடன் ஐவரும் கிராமத்தை நோக்கி பயணித்தனர்.
பூமித்தாய்க்கு பச்சை சாத்தி, பூவுலகை வாழவைப்போம்.
*****