குவியல் 1 எண்ணம் 2
நீர்

பஞ்சபூதங்களில் ஒன்று நீர்.
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் நமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகிறது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கிறது.
பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது நீர். எமது அடிப்படை தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகிறது. நீர் உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்படுகிறது. எனவே எமக்கு கிடைக்கும் நல்ல நீரினை வீணாக்காது சிக்கனமாக உபயோகிப்பது மிக மிக அவசியமாகும்.
ஒவ்வொருவரும் எப்படி நீர் வீணாவதை தவிர்க்கலாம் என பார்க்கும்போது,
நீர் கசிந்துகொண்டிக்கும் குழாய்களை உடனடியாக திருத்தவோ அல்லது மாற்றவோ வேண்டும். “சிறு துளி பெரு வௌளம்” என்பது யாவரும் அறிந்ததே. சிறிது சிறிதாக சிந்தும் நீரானது எம்மை அறியாமலே பெரிய அளவில் வீணாகிறது.
துணிகளை துவைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக துவைக்காது, சேர்த்து ஒன்றாக துவைக்கும்போது குறைந்தளவு நீரில் துவைத்து முடிக்கலாம்.
அரிசி, காய் கறிகள் கழுவிய நீரை சேகரித்து மரம், செடிகளுக்கு ஊற்றலாம்.
குளிக்கும் போது, முகம் கை கால் கழுவும்போது குழாயை திறந்து விட்டபடி சவர்க்காரம் போடாது, குழாயை மூடிவிட்டு தேவையான நேரம் திறந்து பாவிக்க வேண்டும்.
சிறுவர்கள் குழாய்களை அநாவசியமாக திறந்து விளையாடினால் அதை அவதானித்து கண்டித்து தடுக்க வேண்டும்.
இப்படியாக வீடுகளில் நீர் வீணாவதை தடுப்பதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் அடுத்த தலைமுறையினருக்கு தட்டுப்பாடில்லாமல் நீர் கிடைப்பதற்கு உதவ முடியும்.
நீரின் முக்கியத்துவத்தையும் அதைத் தரும் மழை மனித வாழ்வில் எப்படியாக பின்னிப் பிணைந்திருக்கின்றது என்பதையும் திருவள்ளுவர் அருளிய குறள் இவ்வாறு கூறுகிறது.
குறள் – “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.”
சாலமன் பாப்பையா அவர்களின் விளக்கவுரை – எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது, அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
உதாரணக் கதை
புதிதாக திருமணமான தம்பதியினர் பாலனும் சுதாவும். பாலன் கூலிவேலை செய்யும் தொழிலாளி. அவன் வேலை செய்யும் ஊருக்கு புதிதாக இருவரும் குடிவந்துள்ளனர். பாலன் மிகவும் பொறுப்பானவன். வயதுக்கேற்றவாறு சுதா ஓய்வு நேரங்களை புத்தகம் வாசிப்பதும் பாட்டுக் கேட்பதுமாக போக்கிக் கொண்டிருப்பாள். அவர்கள் இருக்கும் ஊரில் நான்கு வருடங்களுக்கு முன் கடும் கோடை வந்து மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதை அறிந்த பாலன், நீரை மிகவும் சிக்கனமாக பாவிக்க பழகும் படியும், மிகவும் மோசமான கோடை காலம் வரும் காலங்களில் அந்தப் பழக்கம் மிகவும் உதவும் என அடிக்கடி சுதாவுக்கு கூறுவான். கிணற்றில் நிறைய நீர் இருக்கிறது. அதை அனுபவிக்காமல் இப்போது முதற்கொண்டே ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று அலட்சியமாக நடப்பாள் சுதா. கடும் கோடை வரும்போது பார்ப்போம் என்பது அவளது எண்ணம்.
இதோ கோடை காலமும் வந்துவிட்டது. கிணற்று நீரும் மெது மெதுவாக வற்றத் தொடங்கிவிட்டது. மழை இன்று வரும் நாளை வரும் எனப் பார்த்துப் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.
அவர்கள் வீட்டிலிருந்து சுமார் 20 நிமிட நடை தூரத்திற்கப்பால் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதில் எக்காலத்திலும் நீர் வற்றாது. சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் கோடை காலத்தில் அங்குதான் நீர் எடுக்கச் செல்வார்கள்.
இப்போ, பாலன் சுதா தம்பதியினருக்கு அங்கு சென்று நீர் எடுத்துவரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தினமும் அதிகாலை 8 மணிக்கு முன் சென்றால்தான் பாலனை வேலைக்கு எடுப்பார்கள். பிந்தினால் அவனுக்கு அன்று வேலை இல்லை. வேலைக்குச் செல்லும் நாட்களுக்கு மட்டும்தான் சம்பளம் கிடைக்கும். அதற்கு பாலன் வீட்டிலிருந்து அதிகாலை 7 மணிக்கு முன் செல்ல வேண்டும். எனவே காலை வேளையில் பாலனால் நீர் எடுக்கச் செல்ல முடியாது. வேலை முடிந்து வந்தபின்தான் அவனால் முடியும். அதனால் பாலன் வேலைக்குச் சென்றபின் சுதா நீர் எடுத்துவரச் சென்றாள். இரு தடவைகள் எடுத்து வரவே மிகவும் களைத்துவிட்டாள். அதனால் நீரை மிகவும் சிக்கனமாக பாவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பழக்கமில்லாததால் நீர் விரயமாவதை குறைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். கணவன் கூறியதைப் போல் முன்பே இதை பழக்கத்தில் கொண்டுவந்திருந்தால் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திருக்காது என்பதை விரைவில் உணர்ந்துவிட்டாள். தான் விட்ட பிழையை விளங்கிக்கொண்டவள் இனிமேல் எக்காலத்திலும் நீரை சிக்கனமாகத்தான் பாவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள். மாலையில் பாலன் நீர் எடுத்துவந்து உதவினான். வீட்டில் நீர்ப் பஞ்சம் போய்விட்டது. சுதாவும் மிகவும் பொறுப்பான ஒரு மனைவியாக மாறிவிட்டாள்.
அதோ பாருங்கள், கணவன் மனைவி இருவரும் கோடை காலம் முடிந்ததும் தங்களுக்கு தேவையான அளவு சிறு வீட்டுத் தோட்டமும் கண்ணுக்கு விருந்தளிக்க சிறு பூந்தோட்டமும் ஆரம்பித்து கழிவு நீரை எவ்வாறு பயிர்களுக்கு பயன்படுத்துவது என திட்டமிடத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமல்லாது மற்ற செலவுகளிலும் சிக்கனத்தை கடைப்பிடித்து சிறு சேமிப்பு ஆரம்பிக்கவும் திட்டமிடுகிறார்கள்.
*****