குவியல் 1 எண்ணம் 3
நெருப்பு

பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு எனும் தீ.
மனித வாழ்வோடு நெருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் உயிரோடிருக்கின்றோம் என்பதை உணர்த்தும் காரணிகளில் ஒன்று சூடு. உடல் அசாதாரண நிலையில் இருக்கும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும். மனித உடலினுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை உணர்த்துகிறது.
நெருப்பினால் எமது தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அதேசமயம் எமது அலட்சியத்தினால் தீமைகளும் ஏற்படுகின்றன.
நெருப்பின் தேவைகளை பார்க்கும்போது,
உணவை சமைத்து உண்பதற்கு நெருப்பு பயன்படுகிறது.
குளிர் காலங்களில் உடலை சூடாக வைத்திருப்பதற்கு நெருப்பு உதவுகிறது.
இருட்டில் வெளிச்சத்தைத் தருகிறது.
தேவையற்ற குப்பை கூளங்களை எரித்து அகற்றுவதற்கு தேவை நெருப்பு. குப்பை கூளங்கள் எனும்போது, இட வசதி உள்ளவர்கள் இலைகள், சருகுகளை எரிக்காமல் அவற்றை சேகரித்து இயற்கை உரமாக பயன்படுத்துவது சிறந்த வழிமுறையாகும்.
குடிமனைக்குள் புகும் காட்டு விலங்குகளை துரத்துவதற்கு நெருப்பை உபயோகிக்கிறார்கள்.
நெருப்பினால் ஏற்படும் தீமைகளைப் பார்க்கும்போது,
காட்டு மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ உருவாகி காட்டுத் தீயாக பரவுகிறது. இதனால் அருகிலிருக்கும் குடியிருப்புக்கள் பாதிப்படைகின்றன. மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இது இயற்கையாக ஏற்படும் விபத்தாகும்.
பண்டிகை நாட்களில் கொழுத்தும் பட்டாசுகளினாலும் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன.
புகை பிடிப்பவர்கள் அலட்சியமாக அணைக்காது வீசும் தீக் குச்சிகள்,
மறதியாக அணைக்காதிருக்கும் காஸ் அடுப்புக்கள்,
காற்று பலமாக வீசும்போது குப்பைகள் எரிப்பது,
தீ இலகுவாக பற்றக்கூடிய பெற்றோல் போன்றவற்றிற்கு மிக அருகில் நெருப்பை பயன்படுத்துவது,
ஏற்றிய தீபங்களுக்கு மிக அருகில் நிற்கும்போது ஆடையில் தீ பற்றுவது,
போன்ற காரணிகளினால் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன.
நெருப்பு எமக்கு மிகவும் தேவையானதொன்றே. அதை நாம் அவதானமாக பயன்படுத்துவதன் மூலமும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமும் அழிவுகளிலிருந்து எம்மைக் காக்க முடியும்.
தீயோடு விளையாடாதீர்
தீயை அலட்சியம் செய்யாதீர்
இவை இரண்டும்
அழிவைக் கொண்டுவரும்.
உதாரணக் கதை
உமாவுக்கு வீட்டிற்குள் மட்டுமல்ல, வீட்டைச் சுற்றியும் சுத்தமாக இருக்கவேண்டும். அவளது இரண்டு வயது மீனா, சுட்டித்தனமாக ஓடி ஓடி விளையாடி போடும் குப்பைகளை அடிக்கடி அகற்றுவதும் அவளது முக்கிய வேலைகளில் ஒன்று. அதே போல் தினமும் வீட்டிற்கு வெளியே துப்பரவாக்கும் குப்பைகளையும் ஒரு இடத்தில் குவித்து எரிக்கக்கூடாத பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றவற்றை வேறாக்கி ஒரு பையில் போட்டு வைத்துவிடுவாள். அவற்றை துப்புரவு செய்யும் தொழிலாளிகள் மீள் சுழற்சிக்காக எடுத்துச் செல்வார்கள். மீதி குப்பைகளை அன்றைய தினமே மாலையில் எரித்து விடுவாள்.
அவளது கணவன் குமரனும் எத்தனையோ தடவைகள், “அவற்றை ஒரு குழியினுள் சேகரித்து உரமாக்கலாம். நான் ஒரு சிறிய ஆழமான கிடங்கு வெட்டித் தருகிறேன்.” என்று கூறிப் பார்த்துவிட்டான்.
“இந்த சிறிய இடத்தில் குப்பைகளை சேகரித்துக்கொண்டு அதனுடன் வசிப்பதா? முடியவே முடியாது. பூச்சி, பூரான் எல்லாம் அதற்குள் குடியிருந்து வீட்டிற்குள் வரப் பார்க்கும்.” என மறுத்துவிடுவாள்.
“உன்னைத் திருத்த முடியாது. ஆனால் நெருப்பினால் வரும் ஆபத்துக்கள் உனக்கு நன்கு தெரியும்தானே. காற்றில்லாத நேரம் எரிக்கும் வேலையைப் பார். எரிந்து முடிந்ததும் ஏதாவது தணல் இருந்தாலும் மறக்காமல் நீர் ஊற்றி அணைத்துவிடு.” என்பான்.
இவை அவர்களிடையே அடிக்கடி நடக்கும் உரையாடல்.
பல நாட்களாக இப்படியே நடந்துகொண்டிருந்தது.
அன்று அந்த விபரீதம் நடந்து உமாவின் மனநிலையை அப்படியே மாற்றிவிட்டது.
வழக்கம் போல அன்றும் மாலை குப்பைகளை எரித்து, முடிந்ததும் இடையிடையே செய்வது போல அன்றும் தணல் ஒன்றும் இல்லை என்பதைப் பார்த்து நீர் ஊற்றாமல் விட்டுவிட்டாள். நீர் ஊற்றினால் சாம்பல் எல்லாம் பறந்து தொல்லையாக இருக்கும் என்றுதான் நீர் ஊற்றுவதில்லை.
கணவன் வரும் நேரம், தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். செல்லக்குட்டி மீனாவும் உறக்கத்திலிருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. அப்போது திடீரென சுழற்காற்று ஏற்பட்டு புழுதி மேலெழுந்து செல்வதையும் இருட்டிக்கொண்டு வருவதையும் யன்னல் மூலம் பார்த்தவள், மழை வரப்போவதை உணர்ந்து யன்னல்களை மூடுவதற்காக பின்புறம் சென்றவள் விக்கித்து நின்றுவிட்டாள்.
எரியாமல் சிறு சுள்ளிகள் இருந்ததையும் அவற்றிலிருந்து தணல் பொறிகள் மேலெழுந்து பறந்துகொண்டிருந்ததையும் கண்டாள். யன்னல் சீலைகளிலும் ஒன்றிரண்டு பட்டுக்கொண்டிருந்தது. பொறிகள் மேலெழுந்து சிறிது தூரத்திலேயே அணைந்துவிட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இன்னும் சிறிது நேரம் சென்றிருந்தால் அந்தச் சுள்ளிகள் எரியத்தொடங்கிவிடும். காற்றடிக்கும் நேரம் அது பெரும் ஆபத்தாகிவிடும். நடுநடுங்கியவள் காற்றையும் புழுதியையும் பாராமல் வாளியில் நீர் எடுத்துச் சென்று ஊற்றி தணல்களை அணைத்தும் விட்டாள். விபரீதம் ஏதும் நடவாமல் தடுத்துவிட்டோம் என்ற நிம்மதியுடன் இனிமேல் இந்த ஆபத்தான வேலை வேண்டாம் என்றும் முடிவெடுத்துவிட்டாள். சில கணங்களுள் நடந்த இந்த நிகழ்வு அவளுக்கு திகிலை உண்டாக்கி விட்டது. பார்த்ததால் தடுக்க முடிந்தது. பாராமல் இருந்திருந்தால்….. நினைத்துப் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.
தனது உடம்பிலும் உடலிலும் சாம்பல் பரவியிருந்ததைப் பார்த்தவள், கணவன் வருமுன் குளித்து புத்துணர்வுடன் தயாராகிவிட்டாள்.
வீடு திரும்பி, “அட, இன்று என்ன அதிசயம். புது மலராக காட்சியளிக்கிறாய். மீனுக்குட்டி இன்னும் எழுந்திருக்கவில்லையோ? அவள் எழுந்திருந்தாள் உன்னை இந்தக் கோலத்தில் விட்டுவைத்திருக்க மாட்டாளே….” என்ற கணவனிடம்,
“பின் பக்கத்தில் குப்பைகளை போடுவதற்கு ஆழமான சிறு குழி ஒன்று வெட்டிவிடுங்கள்.” எனக் கூறி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவள்,
“அப்படியே பூச்சி, பூரான் ஒன்றும் வீட்டிற்குள் வராமலிருக்கவும் வழி செய்யுங்கள்.” என்றும் கூறி மிடுக்குடன் இரவு உணவு தயாரிப்பதற்காக சமையலறை நோக்கி செல்கிறாள்.
ஆச்சரியத்தில் திளைத்த குமரனும், வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறுமுன் குழியை வெட்டிவிடவேண்டும் என அவசர அவசரமாக தயாராகிறான்.
தீ தந்த பயம், நன்மையில் முடிந்தது.
*****