குவியல் 3
ஐம்பொறிகள்
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவை ஐம்பொறிகள் ஆகும். ஐம்பொறிகள் மூலம் பெறப்படும் உணர்வுகளாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்பவை ஐம்புலன்கள் எனக் கூறப்படுகிறது. ஐம்பொறிகளின் பயன்கள், அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்களை இங்கு பார்ப்போம்.
குவியல் 3 எண்ணம் 1
கண்

ஐம்புலன்களில் ஒன்று கண்.
பார்வையைக் கொடுக்கும் கண்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் எதனால் கண்கள் பாதிப்படைகின்றன என்பதனையும் அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
எமது நாளாந்த வேலைகளை திறம்படச் செய்வதற்கு கண்கள் அவசியம். இந்தக் கண்கள், வாசித்து, படித்து அறிவை வளர்த்து வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கின்றன.
நல்லவை தீயவற்றைப் பிரித்தறிந்து தீயவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றன.
எமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன.
போக்குவரத்திற்கும் அழகை ரசிப்பதற்கும் தேவைப்படுகின்றன.
சிலருடைய கண்கள் பேசும் திறன் கொண்டவை.
நவரசங்களான இன்பம், நகை, கருணை, ஆத்திரம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் என்ற உணர்ச்சிகளை முகத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்துபவை கண்கள்.
இந்து சமயத்தில் முழுமுதற் கடவுள் சிவபெருமான் மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண் உடையவன் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் நெற்றிக்கண் மூலம் அநீதிகளை எரித்து சாம்பலாக்கிவிடுவார் எனவும் ஆறுமுகன், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் மூலம் உதித்தவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
பின்வரும் குறள் மூலம் திருவள்ளுவர் காதலில் கண்ணின் முக்கியத்துவத்தினை அழகாகக் கூறியுள்ளார்.
குறள் – கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
பி.எஸ்.ஆச்சார்யா அவர்களின் விளக்கவுரை – காதலர்களின் கண்கள் ஒன்றையொன்று அன்போடு பார்த்துக் கொண்ட பிறகு அவர்கள் வாயால் பேசிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை.
இன்பத்திலும் துன்பத்திலும் கண்கள் நீரைச் சொரிந்து உணர்ச்சிகளை காட்டுகின்றன.
கோபத்தின் உச்சத்தில் கண்கள் சிவக்கும். கண் சிவந்தால் மண் சிவக்கும் என்பார்கள். மன்னராட்சிக் காலத்தில் அண்டைநாட்டு நடவடிக்கைகள் அரசனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி அவனது கண்கள் சிவந்தால் உடனே போர் மூண்டு மண்ணில் இரத்த ஆறு ஓடும் என்பதையே இப்பதம் குறிக்கின்றது.
முகத்திற்கு அழகைக் கொடுக்கும் கண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
முதுமை காரணமாக பார்வை குறைவது இயற்கையே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரும் பார்வை குறைபாட்டினை எதிர்நோக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைபேசி, மடிக்கணணி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியற் பொருட்களின் பாவனை அதிகரிப்பால் சிறு வயதிலேயே கண்கள் பாதிக்கப்படுகின்றன. தற்காலத்தில் கல்விப் பயிற்சிகளுக்காகவும் உத்தியோக தேவைகளுக்காகவும் கைபேசி, மடிக்கணணி, கணணி என்பவற்றை உபயோகப்படுத்தவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையே காரணமாகக்கொண்டு சிறுவர்கள் கல்விக்காக மட்டுமல்லாது விளையாட்டு தேவைகளுக்காகவும் அவற்றை பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகமாகிறது.
மிக அருகிலிருந்து தொலைக்காட்சி பார்த்தல் கண்களைப் பாதிக்கின்றது.
வெயிலில் நீண்ட நேரம் இருத்தல், இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் என்பவையும் கண்களைப் பாதிக்கும் காரணிகள் ஆகும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்கள் பாதிப்படையும் சாத்தியம் உள்ளது என அறியப்படுகிறது.
கண்களை எப்படி பாதுகாப்பது என்பதை பார்ப்போம்.
இலத்திரனியற் பொருட்களை நீண்ட நேரம் கையாள்வதை குறைத்தல். அதிக நேரம் உபயோகப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது கண்களுக்கு தேவையான பயிற்சியை அறிந்து இடையிடையே அதை மேற்கொள்ளல்;
சிறுவர்களைக் கண்காணித்தல்;
கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளல்;
சரியான நேரத்திற்கு நித்திரைக்குச் செல்லல்;
மது பாவனையையும் புகைப்பிடித்தலையும் கைவிடல்;
பிரயாணங்களின் போது விபத்துக்களை தவிர்ப்பதற்குரிய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்;
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறையேனும் கண் தொடர்பான வைத்திய ஆலோசனை பெறல்;
கண்களில் தூசு விழுந்தால் அது கண்ணீர் மூலம் உடனே வெளிவந்துவிடும். அப்படி அது வராமல் நீண்ட நேரம் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தால் நாம் அதை எடுக்க முயற்சி செய்யாது கண் வைத்தியரை அணுகுதல்;
போன்ற செயற்பாடுகளினால் எமது வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள வழிகாட்டியாக விளங்கும் கண்களை பாதுகாப்போம்.
உதாரணக்கதை
தீபாவளிக்கு ஆடைகள் வாங்க அந்த வணிக வளாகத்திற்கு வந்திருந்தான் சுதன் தன் மனைவி கீதா மற்றும் நான்கு வயது நிரம்பிய ஒரே மகன் கீதனுடன். கீதா தனக்கு தேவையானவற்றை பார்வையிட சுதனும் கீதனும் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கீதன் கைபேசியில் விளையாடிக்கொண்டிருக்க சுதன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அதை அவதானித்துக்கொண்டிருந்த பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர், “தம்பி, உங்களிடம் ஒரு விஷயம் கூற வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நீங்கள் என்ன நினைப்பீர்களோ என்று தயக்கமாக இருக்கிறது.” என்று மெல்ல இழுத்தார்.
“பரவாயில்லை, நீங்கள் கூறுங்கள்.” என்ற சுதனிடம்
“தம்பி, எனது நண்பனின் மகன் இப்படித்தான் சிறு வயதிலிருந்து கைபேசியை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். அவனது குறும்புத்தனம் தாங்கமுடியாததால் அவனை அமைதியாக இருக்கச் செய்வதற்காக கைபேசியை விளையாடக் கொடுத்திருக்கிறார்கள். அவன் வளர வளர கையேட்டு கணிப்பொறி (Notebook), மடிக்கணணி என மாறி அவற்றுடனேயே பொழுதைப் போக்கியிருக்கிறான். இப்போது அவனுக்கு பத்து வயது. கண்கள் அடிக்கடி கலங்குகின்றன என மருத்துவரை அணுகியபோது குறிப்பிட்ட காலத்திற்கு கண்ணாடி அணியவேண்டுமெனக் கூறிவிட்டார்கள். சிறு வயதில் அவனை தவறான பாதையில் செல்ல விட்டுவிட்டேன், சிறு வயதிலேயே கண்ணாடி அணியவேண்டிய நிலைக்கு நாங்கள் அவனை தள்ளிவிட்டோம் என புலம்பிக்கொண்டிருக்கின்றான். அந்த நிலை உங்களுக்கும் வந்துவிடக்கூடாது.” என்றார்.
“நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. எதிர்காலத்தைப்பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. என்ன செய்து இதை மாற்றலாம் என்று யோசித்து இதை தடுக்கத்தான் வேண்டும். மிகவும் நன்றி.” என்றவன் அந்த நிமிடமே சிந்திக்கத் தொடங்கிவிட்டான்.
“தம்பி, எங்களுக்கும் உங்கள் மகனைப் போல ஒரு மகன் இருக்கின்றான். நாங்கள் அவனுக்கு சித்திரக் கதைப் புத்தகங்கள் பார்க்கப் பழக்கியிருக்கின்றோம். செல்லும் இடங்களுக்கும் அதில் ஒன்றைக் கொண்டு செல்வோம். தேவைப்பட்டால் பார்க்கக் கொடுத்துவிடுவோம். வாசிக்கத் தொடங்கியதும் படங்களுடன் கூடிய கதைப்புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். இப்படியாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் போதும் படிப்பிலும் கெட்டிக்காரனாகிவிடுவான். அதுமட்டுமல்ல தம்பி, நீங்களும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிள்ளைகள் வளரும் வரை அவர்கள் முன்னிலையில் கதைப்பதற்கு மட்டுமே கைபேசியை உபயோகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கதைப்பதற்கு மட்டும்தான் கைபேசி என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியும். சரி தம்பி, அதோ என் வீட்டவர்கள் வருகிறார்கள். நான் சென்று வருகிறேன்.”
“நல்ல ஆலோசனை தந்தீர்கள். உங்கள் பெயர்…..” என இழுத்தான் சுதன்.
“நான் மாதவன்” என்றவரிடம்,
“மிகவும் நன்றி மாதவன். இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.” என்ற சுதனிடம் விடைபெற்று சென்றுவிட்டார் மாதவன்.
தனது மகனின் கண்களை மட்டுமல்ல கல்வியுடன் கூடிய எதிர்காலத்தையும் காப்பாற்றவே மாதவனை சந்திக்க கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற உணர்வுடன் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை சிந்திக்கத் தொடங்கினான் சுதன்.
*****