குவியல் 3 எண்ணம் 2
காது

ஐம்புலன்களில் ஒன்று செவி என்றும் அழைக்கப்படும் காது.
காதுகள் இரு முக்கிய வழிகளில் எமக்கு உதவுகின்றன. ஒன்று கேட்டல் மற்றையது நாம் நிமிர்ந்து நேராக நிற்பதற்கு எமது உடலின் சமநிலையைப் பேணுதல்.
எமது உறுப்புக்களில் காதின் முக்கியத்துவத்தை பார்ப்போம்.
தகவல் தொடர்பாடலுக்கு மொழி அவசியம். மொழிக்கு காதுகள் மிகவும் முக்கியமானவை. எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்பு செவி வழியாகத்தான் தகவல்கள் கடத்தப்பட்டன. குரு சொல்வதைக் கேட்டு மனதில் பதிய வைப்பதே கல்வி முறையாக இருந்தது. பிறர் கூறுவதைக் கேட்டு பெறும் அறிவை கேள்விஞானம் என்பர்.
காதுகள் இருபத்துநான்கு மணி நேரமும் ஓய்வே இல்லாது வேலை செய்துகொண்டிருக்கின்றன. அதனால்தான் நித்திரை செய்யும்போதும் ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்கிறோம்.
எம்மைச் சுற்றி என்னென்ன நடக்கின்றன என்பதை நாம் கேட்கும் ஒலிகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. கற்றல் நடவடிக்கைகளுக்கும் தொழில் புரிவதற்கும் கேட்கும் திறன் மிகவும் அத்தியாவசியமாகும். காதுகள் மூலம் எம்முடன் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன கதைக்கிறார்கள் என்பதை கேட்க முடிகிறது. சொற்பொழிவுகள், கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகளை கேட்டு பயன்பெறவும் இன்புறவும் காதுகள் உதவுகின்றன. பிறரின் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து உதவக்கூடியதாக இருக்கிறது. இனிய பாடல்களை கேட்பது கவலைகளை மறக்கச் செய்து இனிய மனநிலையை தருகிறது.
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதாலும்,
தாய் கருவுற்றிருக்கும் போது வைரஸ் கிருமித்தொற்றுக்கு ஆளாகினாலும் அதனால் உட்கொள்ளும் மருந்துகளினாலும்,
பரம்பரை நோய் காரணமாகவும்,
பிறக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் பாதிப்படையலாம்.
முதுமை, கேட்கும் திறனை மந்தமடையச் செய்வது இயற்கையே. நாளாந்த நடவடிக்கைகளில் பல, எமது அலட்சியத்தினால், காது கேட்கும் திறனை மந்தமடையச் செய்கின்றன. வானொலி கேட்கும் போதும் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் உரத்த சத்தத்தில் கேட்பது, ஒலிபெருக்கி உள்ள இடங்களுக்குச் செல்லும்போது அதன் அருகாமையில் இருப்பது, செவிப்பொறியை உரத்த சத்தத்தில் உபயோகிப்பது, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இயந்திரங்களின் இரைச்சலுடன் வேலை செய்வது போன்ற காரணிகள் படிப்படியாக காது கேளாமையை உண்டாக்குகின்றன. சில மருந்துகளின் பக்கவிளைவுகளும் காது கேளாமையை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி உண்டாகும் சளித் தொல்லையால் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புண்டாகிறது. காதுகள் பாதிக்கப்படுவதால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு தலைசுற்றல், தள்ளாடல் ஏற்படுகின்றன.
காது கேளாமையினால் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். உரையாடல், தொடர்பாடல் முடியாதிருக்கும். அழைப்பது கேட்காது. தனியே பயணங்கள் கடினமாக இருக்கும். கற்றலில் சிக்கல் ஏற்படும், வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். வானொலி, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குகள் இயலாமல் போகும். இவற்றால் மனநலம் பாதிக்கப்படலாம். குடும்ப வாழ்வில் நிம்மதி இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
காது கேளாமையை தடுப்பதற்கு பாதுகாப்பான முறையில் கேட்டல் அவசியம். அதிக சத்தத்தை தவிர்க்க வேண்டும். வானொலி, தொலைக்காட்சி என்பவற்றை அளவான சத்தத்தில் கேட்க வேண்டும். அதிக இரைச்சல் உள்ள இடங்களுக்கு செல்லும் போதும் அதிக சத்தமுள்ள இடங்களில் வேலை செய்யும் போதும் காது செருகிகளை பாவிக்கலாம். ஒலிபெருக்கிகளின் அருகில் நிற்றல், இருத்தல் கூடாது. உரத்த குரலில் கதைப்பதையும் தவிர்த்தல் நல்லது. புகைப்பிடித்தலும் காதுகளை பாதிப்படையச் செய்கின்றது என வைத்தியர்கள் கூறுகின்றனர். காதுகளில் நோ ஏற்படும்போதும், நீர் அல்லது சீழ் வடிதல் போன்றவை ஏற்பட்டாலும் உடனே வைத்திய ஆலோசனை பெறுதல் அவசியம். இயலுமானவரை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்த்தல் நல்லது. கருவுற்ற தாய்மார் கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் அவதானமாக இருப்பதுடன் வைத்திய ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளக்கூடாது.
கேட்கும் திறனை அதிகரிக்க வைத்தியரின் ஆலோசனையுடன் காதொலிக்கருவி (hearing aid) பயன்படுத்தலாம்.
காதுகளால் பெறும் கேள்விஞானத்தின் பெருமையினை திருவள்ளுவர் பின்வரும் குறள்களின் மூலம் அழகாகச் சொல்கிறார்.
குறள் – “செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.”
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் விளக்கவுரை – காதுகளால் கேட்டறியும் சுவைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளாமல், வாயால் சுவைத்து உண்ணப்படும் சுவைகளையே அறிந்த மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு நன்மை ஒன்றும் இல்லை.
குறள் – செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் விளக்கவுரை – கேள்விச் செல்வமே மற்றைய எல்லாச் செல்வங்களினும் உயர்வானது. ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும்.
கேட்கும் திறனை பாதிப்படையச் செய்யும் காரணிகளிலிருந்து எம்மை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்து மகிழ்வோடு வாழ்வோம்.
உதாரணக்கதை
வழக்கம் போல மாலைநேரம் அந்தப் பூங்காவில் சந்தித்தனர் நண்பர்களான மணிவண்ணனும் சிவலிங்கமும். இருவரும் அரச நிறுவனம் ஒன்றில் ஒன்றாகப் பணியாற்றி ஒன்றாக ஓய்வுபெற்றவர்கள்.
சிவலிங்கத்தின் மகள் தன்னிடம் பேசியது மணிவண்ணனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று எப்படியாவது தனது நண்பனின் மனதை மாற்றிவிட வேண்டும் என்று தீர்மானித்தவர்,
“என்னடா, இன்றைக்கு என்ன புதினம்?” என்று சத்தமாகக் கேட்டார்.
சலிப்புடன், “வைத்தியரிடம் செல்ல வேண்டும், காதொலிக்கருவி பற்றி ஆலோசிக்க வேண்டும் என்ற வழமையான புராணம் தான்.” என்றார் சிவலிங்கம்.
“அது நல்ல விஷயம் தானே. ஏன் தான் நீ அதை விரும்பவில்லையோ தெரியவில்லை.”
“ஏன், எனக்கு காது கேட்காது என்று ஊரெல்லாம் தண்டோரா போடுவதற்கா? அதெல்லாம் தேவையில்லை.”
“இதில் என்ன வெட்கம் இருக்கிறது? எத்தனையோ பேர் இதை பாவிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். உன்னுடைய நன்மைக்குத் தானே. இதை சொல்கிறார்கள்.”
“அட போடா, எல்லாம் அவர்களுடைய வசதியைத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் கதைக்கும்போது சிறிது சத்தமாகக் கதைத்தால்தான் என்ன. சரி, ஒரு முறைக்கு இரு முறையாகச் சொன்னால் என்ன. அது அவர்களால் முடியாது. நான்தான் மாறவேண்டும்.”
“சரி, ஒன்றும் வேண்டாம். இதனால் உனக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று சிந்தித்துப் பார்த்தாயா?.”
“அப்படி எதுவும் எனக்குத் தோன்றவில்லை.”
“அதுதானே. அவையெல்லாம் உனக்குத் தோன்றினால் எப்போதோ இதற்கு சம்மதித்திருப்பாய்.”
“என்னென்ன நன்மைகள் என்று சொல் பார்ப்போம்.”
“தயக்கமின்றி எல்லோருடனும் உரையாடலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்கள் கதைப்பது மட்டுமன்றி இரகசியம் பேசினாலும் துல்லியமாகக் கேட்கும். அவர்கள் உன்னைப்பற்றித்தான் குறை கூறிக் கதைக்கிறார்களா என்ற சந்தேகம் நீங்கிவிடும். முக்கியமாக உனது மனைவி அடிக்கடி முணுமுணுக்கின்றாள் என்று சொல்வாயே. அவர் முணுமுணுப்பதும் உனக்கு துல்லியமாகக் கேட்கும். அதனால் உனது மனைவி பயத்தில் முணுமுணுப்பதை விட்டுவிடுவார். வீட்டில் எல்லோருமே உன்னுடன் கவனமாக இருப்பார்கள். நீ ராஜா மாதிரி இருக்கலாம். இதைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு.”
மனைவியின் செயலை மணிவண்ணன் குறிப்பிட்டதும்தான் தாமதம் சிவலிங்கத்திற்கு உற்சாகத்துடன் ஆர்வம் மேலிடத்தொடங்கிவிட்டது. நித்தம் வீட்டில் மனைவியுடன் ஏற்படும் வாக்குவாதத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டதைப்போல் உணர்ந்தார். அவள் என்ன முணுமுணுக்கிறாள் என்று தெரியாமல் ஏற்படும் தவிப்பிற்கும் சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கணப்பொழுதில் தீர்மானித்துவிட்டார்.
“மணிவண்ணா! இன்று நீ எனக்கு நல்லதொரு விளக்கம் தந்திருக்கிறாய். நான் இந்த விதத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை. கேள்விச் சாதனம் பற்றி இன்றே மகளுடன் கதைத்து அதற்கு ஆவண செய்கிறேன். சரி, நேரமாகிறது. நாளை சந்திக்கும்போது என்ன நடந்தது என சொல்கிறேன். கிளம்புவோமா?” என்றபடி எழுந்தார் சிவலிங்கம்.
“சரியடா, நாளை சந்திப்போம்.” என்றபடி மணிவண்ணனும் எழுந்தார்.
இருவரும் நிம்மதியுடன் அவரவர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினர்.
*****