தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
January 24, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ2

குவியல் 7                                                                                                                              எண்ணம் 2

சந்தேகம்

சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி  மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.

சிறு சிறு சந்தேகங்கள் வாழ்க்கையில் வருவது சகஜமே. வெளியே செல்லும்போது கதவை சரியாகப் பூட்டினோமா,  கொண்டு செல்லவேண்டியவற்றை எடுத்து வைத்தோமா, அழைத்துச் செல்லும் சாரதிக்கு பாதை தெரியுமா, மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் என உடனடியாகத் தீர்க்கப்படக்கூடிய சந்தேகங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது.

சில விடயங்களை எப்போதும் நாம் சந்தேகக் கண்ணோடு  பார்ப்பது மிகவும் அவசியமாகும். பின் தொடர்வது, அநாவசியமாகத் தொட்டுத் தொட்டுக் கதைப்பது, விளையாட்டாக என பொய் சொல்வது, தேவையில்லாமல் அதிகமாகப் புகழ்வது போன்ற செயல்களைச் செய்பவர்களை இலகுவில் நம்பிவிடக்கூடாது.

பிள்ளைகள் நல்லது, கெட்டது பிரித்தறியக்கூடிய பருவத்தை அடையும்வரை அவர்கள் அறியாவண்ணம் அவர்களை சந்தேகக் கண்ணோடு கண்காணிப்பது அவசியம். கூடாத சேர்க்கை தீய பழக்கவழக்கங்களை  தந்துவிடும். கல்வியையும் பாதித்துவிடும். ஆரம்பத்திலேயே அவற்றைக் கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

இவை வாழ்க்கைக்கு தேவையான சந்தேகங்கள்.

எமது வாழ்வை அழிவுப்பாதைக்குத் தள்ளும் சந்தேகங்களை பார்க்கும்போது,

நம்பிக்கையின்மையே சந்தேகத்தின் மூலகாரணம். நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதனின் வாழ்க்கை பயணிக்கிறது. முதலில் எம்மீதே எமக்கு சந்தேகத்திற்கு இடமளிக்காது நம்பிக்கை இருக்க வேண்டும். என்னால் முடியும் என்ற நம்பிக்கை மனதில் நிறைந்திருக்க வேண்டும். தோல்விகள் எமக்கு அனுபவப் பாடங்கள். அவை என்னால் முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பிவிடக்கூடாது. வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் எம்மை செம்மைப்படுத்துகின்றன. சிந்தனையை தூண்டிவிடுகின்றன. தவறுகளை ஆராய்ந்து அவை மீண்டும் ஏற்படா வண்ணம் செயற்பட வைக்கின்றன. வாழ்க்கையை சவாலாக ஏற்று முன்னேறிச் செல்லவேண்டுமே அன்றி  சந்தேகத்திற்கு இடமளித்து சோர்ந்து போய்விடக்கூடாது.

குடும்பத்துள் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருத்தல் அவர்களுடைய வாழ்க்கைக்குள் கள்ளம், சந்தேகம் போன்ற தீய சக்திகள் உள்நுழைவதைத் தடுத்துவிடும். ஒருவர் மீது மற்றவர் சந்தேகப்படுவது ஆபத்தானது. சந்தேகம் ஒன்று வந்துவிட்டால் அதை வெளிப்படையாகக் கேட்டு உடனடியாகப் போக்குவது அவசியமாகும். பயத்துடன் அமைதியாக இருத்தல் அல்லது சந்தர்ப்பத்திற்காகக் காத்திருத்தல் மனஉளைச்சலை ஏற்படுத்தி பாரிய விளைவுகளை குடும்பத்துள் உண்டாக்கிவிடும்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகள் பின்வருமாறு கூறுகின்றன.

“சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு

இதை மறந்தவர் வீடு

துன்பம் வளர்ந்திடும் காடு”.

நம்பிக்கைக்குரியவர் என நாம் தீர்மானித்தபின் அவர் மீது எழும் சந்தேகமானது எப்படிப்பட்டது என்பதை திருவள்ளுவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

குறள் – தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
               தீரா இடும்பை தரும்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் விளக்கவுரை– ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

சந்தேகம் என்பது கொடியநோய். அதைப் பரவவிடாமல் தடுப்பது அவரவர் நடத்தையிலும் செயல்களிலுமே தங்கியுள்ளது.

உதாரணக்கதை

மாதவன் புளுங்கிக் கொண்டிருந்தான். திருமணமாகி இரு வருடங்களாகின்றன. பணம் தேவைப்படும் நேரங்களில் எடுக்கும்படி வங்கிக் கடன் அட்டையை தன் மனைவி சுகியிடம் கொடுத்திருந்தான் மாதவன். சுகியும் பணம் எடுக்கவேண்டிவரும்போது மாதவனிடம் கூறிவிடுவாள். பணம் எடுத்தபின் மாதவனது கைபேசிக்கு குறும் செய்தியும் வந்துவிடும். ஆனால் இரு நாட்களுக்கு முன் கைபேசிக்கு வந்த குறுஞசெய்தியை பார்த்தபின்தான் சுகி வங்கியில் பணம் எடுத்தது தெரிந்தது. வழமையைவிட பெருந்தொகை எடுத்திருக்கிறாள். இன்றுவரை அதுபற்றி தன்னிடம் ஒரு வார்த்தை கூறவில்லை என்பதுதான் அவனது மனதை அரித்துக்கொண்டிருந்தது.

அப்படி என்ன செலவு வந்திருக்கும்? சரி பரவாயில்லை. ஏதோ பெரிய தேவை வந்திருக்கும். ஆனால் ஏன் என்னிடம் கூறவில்லை? பணம் எடுத்ததற்கு குறுஞ்செய்தி எனக்கு வந்திருக்கும் எனவும் சுகிக்கு தெரியும். என்னை அலட்சியம் செய்கிறாளா? என்னிடம் உள்ள மரியாதை குறைந்துவிட்டதா? என்னிடம் சொல்லத் தேவையில்லை என்ற எண்ணம் வந்துவிட்டதா? சுகியிடம் இது பற்றி கேட்போமா? வேண்டாம் வேண்டாம். ஆனால் அவள் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் தெரியவில்லையே. வழமைபோல் சந்தோஷமாகத்தானே இருக்கிறாள். மறந்திருப்பாளோ? இப்படியாக சந்தேகப்பேய் பல உருவங்களில் மாதவன் மனதை ஆட்டிக்கொண்டிருந்தது. அவன் நிம்மதியை இழந்தான். இன்னும் இரு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என முடிவெடுத்தான்.

இரு நாட்கள் சுகிக்கு சாதாரணமாகவும் மாதவனுக்கு மன உளைச்சலுடனும் சென்று முடிந்தது. இன்று கேட்டுவிடுவது என்ற முடிவுடன்,

“சுகி, நீ ஒரு விஷயத்தை மறந்துவிட்டாய் போல் இருக்கிறது.” அமைதியை வரவழைத்து சாராரணமாகக் கேட்டான்.

“அப்படி எதை மறந்தேன்…” இழுத்தவள், “ஆமாம். மறந்தேபோய்விட்டேன்.நேற்றுத்தான் அந்த பற்றுச் சீட்டு தபாலில் வந்தது. பெரிய தொகை என்பதால் கவனமாக வைத்ததில் மறந்துவிட்டேன்.” என்றவள் உடனே சென்று அதை எடுத்துவந்து கொடுத்தாள்.

என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அதை பார்த்ததும் புரிந்துவிட்டது. ஊரில் உள்ள கோவிலில் இருந்து வந்த பற்றுச்சீட்டு. அதே தொகைக்கு. மாதவனின் முகபாவத்தை கவனிக்காதவள்,

“அன்று நீங்கள் ஏதோ வேலையாக இருந்ததில் விபரம் கூறவில்லை. அதன்பிறகு நீங்களும் கேட்கவில்லை நானும் மறந்துவிட்டேன்.”

மாதவனுக்கு, அன்று இயர்போன் போட்டுக்கொண்டு கதைத்தது நினைவு வந்தது.

“சரி, இப்போது கூறு.” என்றான் நிம்மதியுடன்.

“அம்மா கைபேசியில் கதைத்தபோது கோயில் திருவிழா பற்றி கூறினார்கள். போன வருடம் கொடுத்ததுபோல் கொடுப்பதாகக் கூறிவிட்டேன். மறக்கமுன் உங்களிடம் கூறலாம் என்று வந்தபோது நீங்கள் மறுபக்கமாக திரும்பியிருந்து ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அங்கயே நின்று, கோவிலுக்குக் கொடுப்பதற்காக அன்று பணம் எடுக்கப்போவதாக கூறினேன். நீங்கள் சரி, அது நல்ல விஷயம்தானே என்றதும் நான் மீண்டும் சமையலறைக்குச் சென்றுவிட்டேன்.  வருகிற மாதம் திருவிழா தொடங்குகிறது. அக்காவும் பிள்ளைகளும் லண்டனிலிருந்து வருகிறார்களாம் உறவினர்களும் எல்லோரும் வருகிறார்களாம். நாங்களும் செல்வோம். சரிதானே.”

“நிச்சயமாக சுகி. அப்புறம் ஒரு விஷயம். இனிமேல் என்னிடம் ஏதாவது சொல்வதாக இருந்தால் என் முன்னால் வந்துதான் சொல்லவேண்டும். இது எனது அன்புக் கட்டளை. ஏனென்றால் அன்று நீ கூறியதை நான் கேட்கவில்லை. காதில் இயர்போன் போட்டுக்கொண்டு  எனது மேலதிகாரியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன்.”

“ஆனால் கோவிலுக்கு கொடுப்பதற்கு கூடுதலாக பணம் எடுக்கப்போகிறேன் என கூறியதற்கு, சரி அது நல்ல விஷயம்தானே எனக் கூறினீர்களே.” வியப்புடன் கேட்டாள் சுகி.

“அது, அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வொன்று நடாத்தப்போவதாகக் கூறினார். அதற்குத்தான் அந்தப் பதில்.” என அசடு வழிந்தான் மாதவன்.

“அப்போ குறுஞ்செய்தி வந்திருக்குமே. ஏன் என்னைக் கேட்கவில்லை.”

“மறந்திருப்பாய். பிறகு சொல்வாய் என நினைத்தேன். அதுதான் இன்று கேட்டுவிட்டேன்.”

“அதற்கு இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமா? அன்றே கேட்டிருக்க வேண்டாமா. இப்படி ஏதாவது கூற மறந்திருந்தால் உடனே அதைக் கேட்டு தெரிந்துகொள்வதுதான் வாழ்க்கைக்கு நல்லது. இந்த நிகழ்வுகள் தான் சந்தேகம் என்ற புற்றுநோய் எம்மை அரிப்பதற்குரிய காரணங்களாகின்றன. அதை எம் வாழ்க்கையில் நுழையவிடக் கூடாது.”

“உண்மைதான் சுகி. பிழை என்மீது தான். இது ஒரு நல்ல அனுபவம். வாழ்க்கையில் சந்தேகம் எனும் புற்றுநோய் நுழைவதற்கு நாம் தான் காரணமாக இருக்கமுடியும். அதை அனுதிக்கக்கூடாது.”

“இப்போதாவது புரிந்ததே.” என்றவாறு கள்ளம் கபடமின்றி சிரித்தாள் சுகி.

நிம்மதிப் பெருமூச்சு விட்டான் மாதவன்.

*****

Posted in எண்ணக்குவியல்கள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 151
வாழ்த்திச் செல் »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved