தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
February 21, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ4

குவியல் 7                                                                                                                    எண்ணம் 4

பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்

​பிறரை துன்பப்படுத்தி மகிழ்வதும் பிறரது துன்பத்தைப் பார்த்து மகிழ்வதும் ஒருவித மனநோய் ஆகும். இவர்களை ஆங்கிலத்தில் sadists எனக் கூறுவர். அந்த நோயை தாங்களே அனுபவித்தோ அல்லது உணர்ந்தோதான் குணப்படுத்த முடியும். ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்ற முதுமொழி கூறுவது போல நாம் பிறருக்குச் செய்வது சுவரில் அடித்த பந்துபோல திரும்பி எம்மை வந்தடையும். நல்லது செய்தாலோ நினைத்தாலோ எமக்கும் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தாலோ செய்தாலோ அது திரும்பி வந்து எம்மைத் தாக்கும்.

கவலைகளை மறந்திருப்பவரை மீண்டும் அவற்றை நினைத்து கவலைப்படவைக்கும் விதமாக அவர்களது உணர்வுகளை தூண்டும் வண்ணம் கதைப்பவர்களும் இருக்கிறார்கள். துன்பத்தில் உழன்றுகொண்டிருப்பவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைத்து மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தைக் கெடுப்பது எப்படி என்று திட்டமிட்டு செயற்படுபவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நன்று. சிறுபிள்ளைகளை அழவைத்து பார்ப்பதில் மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை அழவைத்துவிட்டு பின்பு சிரிக்க வைப்பதில் ஒருவித பயனும் இல்லை. அவர்கள் சிரித்தாலும் மனதின் ஒரு மூலையில் அழவைத்தவரைப் பற்றிய அபிப்பிராயம் சரிந்துகொண்டே போகும்.

துன்பத்தில் வாடுபவரை சமாதானப்படுத்தி அவர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களைத் தூண்டும் விதமாகக் கதைத்து அவரின் துன்பத்தைப் போக்குவதே சிறந்த குணமாகும். பிறரை மகிழ்விப்பதில் எமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் எத்தகையது என்பதை உணர்ந்து பார்த்தால்தான் புரியும்.

பிறர் துன்பத்தைத் தூண்டிவிடும் விஷமாக இல்லாமல் அவர்களது துன்பத்தை அழித்துவிடும் மருந்தாக செயற்பட்டு நாட்டில் ஒரு நல்ல பிரஜையாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ விடுவோம்.

உதாரணக்கதை

மனோகரன் தமயந்திக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் முதலாம் தரத்தில் படித்துக்கொண்டிருக்கும் ஆறு வயது பெண் குழந்தை மந்திரா. இரண்டாவது பாலர் வகுப்புக்கு சென்றுகொண்டிருக்கும் மூன்று வயது ஆண் குழந்தை தருண். மனோகரனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மனைவிக்கோ குழந்தைகளுக்கோ ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தால் ஆரம்பத்தில் அழ வைத்துவிட்டுத்தான் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வார். தமயந்தியும் எத்தனையோ தடவைகள் கூறிப் பார்த்துவிட்டாள்.

“உங்களை திருமணம் செய்த புதிதில் நான் எவ்வளவு துன்பப்பட்டிருக்கிறேன். மற்றவரை அழவைத்துப் பார்ப்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? என்னை விடுங்கள், உங்களைப் பற்றி எனக்கு இப்போது தெரிந்து விட்டது. ஆனால் பிள்ளைகளுக்கு உங்கள் மேல் வெறுப்பு வந்துவிடும். அவர்களை அழ வைப்பதால் உங்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது. எப்படியோ எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கிறீர்கள். ஆனால் அதை அழவைத்துவிட்டு செய்கிறீர்கள். இது நன்றாகவா இருக்கிறது.”

“முதலில் கிடைக்காது என நினைத்து அழுபவர்களுக்கு கிடைக்கிறது என்பது தெரிந்தவுடன் அவர்கள் முகத்தில் தெரியும் ஆனந்தத்தைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அது மட்டுமல்ல கண்ணீருடன் சிரித்தபடி ஓடி வந்து கட்டி அணைக்கிறார்களே, பார்த்தாய் அல்லவா?”

“இப்போது அவர்கள் சிறு பிள்ளைகள் என்பதால் அப்படி நடக்கிறார்கள். வளர வளர அப்பா ஏன் இப்படி செய்கிறார் என உங்கள் மேல் வெறுப்பு தான் வளரும். ஒரு நாள் மந்திரா, அப்பா ஏன் எங்களை அழவைத்துவிட்டு தருகிறார் எனக் கேட்கிறாள். நானும் ஏதோ கூறி சமாளித்துவிட்டேன்.”

“சரி, சரி, இதையெல்லாம் ஒரு பிரச்சனை என கதைக்க வந்துவிட்டாய். போய் வேலையைப் பார்.”

“ஏதோ எனக்குத் தோன்றியதைக் கூறிவிட்டேன். பார்த்து நடந்துகொள்ளுங்கள். இதே பழக்கத்தை வெளி ஆட்களிடமும்​ காட்டிக்கொள்ளப் போகிறீர்கள். அவதானமாக இருங்கள். அவ்வளவுதான் நான் சொல்வேன்.” சலிப்புடன் கூறிச் சென்றாள் தமயந்தி.

சில நாட்களின் பின்,

“அம்மா! என்னுடன் படிக்கும் எனது சிநேகிதிகளின் அப்பாக்கள், அவர்கள் கேட்பதில் தேவையானவற்றை உடனடியாக வாங்கிக் கொடுத்துவிடுவார்களாம். எங்களது அப்பா மாதிரி அழ வைக்க மாட்டார்களாம். அப்பா எங்களை அழ வைத்துவிட்டுத்தான் தருவார் என நான் கூறியதும் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்கள் ஏதேனும் பிழை செய்தால் தான் அவர்களுடைய அப்பா பேசுவார். பெரிய பிழை என்றால் அடித்தும் விடுவார். அப்போதுதான் நாங்கள் அழுவோம் என்று சொல்கிறார்கள். ஏன் அம்மா, எங்கள் அப்பா மட்டும் இப்படிச் செய்கிறார்?”

கண்ணீர் மல்க மந்திரா தாயைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த தருண் ஏதோ புரிந்ததும் புரியாததுமாக தாயைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தமயந்தி வாயடைத்துப் போய் நின்றாள். அவளுக்கு என்ன பதில் கூறி சமாளிப்பது என்று தெரியவில்லை. நிமிர்ந்தவள், பிள்ளைகளுக்குப் பின்னால் கணவன் திகைத்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். விளையாட்டாக தான் நடந்துகொண்டிருந்த விஷயம் இவ்வளவு பூதாகாரமாக மாறிவிடும் என்று மனோகரன் நினைக்கவில்லை. உடனே பிள்ளைகளை அணைத்து,

“கண்ணுகளா, அப்பா விளையாட்டாகத் தான் இப்படி செய்திருக்கிறேன். அது உங்களை கடுமையாக யோசிக்க வைக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. என் செல்லங்களா, உங்களுக்கு சத்தியம் செய்து தருகிறேன். இனிமேல் அப்பா உங்களை அழவைக்க மாட்டேன். சரிதானே. ஆனால் நீங்கள் பிழை செய்தால் திட்டுவேன், தேவைப்பட்டால் அடிக்கவும் செய்வேன். அதுவும் சரிதானே.” என்றபடி புன்னகைத்தான் மனோகரன்.

“சரி அப்பா, நல்ல அப்பா.” என்றபடி இருவரும் தகப்பனின் கன்னங்களில் முத்தமிட்டு விளையாடுவதற்கு ஓடிச் சென்றுவிட்டார்கள்.

அம்மாவுக்கு விளையாட்டாக ஒவ்வொன்று கூறி அழவைப்பதும். அவர்கள் திட்டித் தீர்ப்பதும். நினைவில் வந்து சென்றது. அப்போதெல்லாம், மனோகரா, இது ஒரு மனநோய். திருத்திக்கொள். இல்லாவிட்டால் பிற்காலத்தில் கஷ்டப்படுவாய் என்றெல்லாம் கூறியதும் வந்து சென்றது. தனது பிள்ளைகள் தன்னைத் திருத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான்.

மற்றவரை அழவைத்துப் பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தவன், பிள்ளைகள் தாயுடன் கதைத்ததைக் கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி கூறினான் மனோகரன்.

*****

Posted in எண்ணக்குவியல்கள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 153
அசையாது ஓர் அணுவும் »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved