தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
March 6, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ5

குவியல் 7                                                                                                                             எண்ணம் 5

சோம்பேறித்தனம்

காலத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தன்பாட்டில் போய்க்கொண்டே இருக்கும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாம்தான் அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு சுறுசுறுப்பும் சுயவிருப்பமும் மிக மிக அவசியமாகும். ஒருவரை அசையவிடாது இழுத்து வைத்திருக்கும் காரணிகளில் ஒன்று சோம்பேறித்தனமாகும். வாழ்க்கையில் பின்தங்கி நிற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் சோம்பேறித்தனமானது முன்னேற்றப் பாதையில் காணப்படும் தடைக்கற்களில் ஒன்று எனவும் கொள்ளலாம்.

ஒருவர் செய்யவேண்டிய செயல்களை விருப்பத்தோடு செய்யவேண்டும். அது அவருக்கு உற்சாகத்தை தருவதுடன் வெற்றியை நோக்கி அவரை நகர்த்தவும் உதவும். சோம்பேறித்தனத்தினால் ஒருவர் செயல்களை பிற்போடுவதனால் அவருக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புக்களையும் அதிஷ்டங்களையும் அவர் இழக்கவேண்டி நேரிடலாம். கருமங்களை பிற்போடாது செய்துகொண்டு செல்வதன்மூலம் பாதி வெற்றியை அடைந்துவிடலாம்.

ஒருவரது சோம்பேறித்தனமானது அவரை மட்டுமல்லாது மற்றவர்களையும் பாதிக்கும் நிலையை உருவாக்கக் கூடும். தமது வேலைகளை மற்றவர்களைக்கொண்டு செய்விப்பதால் மற்றவர்கள் கூடிய நேரம் வேலை செய்யவேண்டிய நிலை, அவரது வேலையை தொடர்ந்து செய்வதற்கு மற்றவர் நீண்ட நேரமோ நாட்களோ காத்திருத்தல் போன்ற சிரமங்கள் ஏற்படலாம். அவ்வாறான செயல்கள் அவர்மீது வெறுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கலாம்.

சோம்பேறித்தனமானது வாழ்க்கையை பாதிப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அன்றாடம் செய்யும் வேலைகள் உடலுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்கிறது. அதனால் அவயவங்களும் ஒழுங்காக இயங்குகின்றன. சோம்பேறித்தனமானது வேலைகளை ஒழுங்காகச் செய்யவிடாது. அதனால் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைக்காது போய்விடும். அதனால் உடல் எடை கூடி அவலட்சணமான தோற்றத்தை பெறுவதுடன் மூட்டுவலி, மாரடைப்பு, சக்கரை, கொழுப்பு கூடுதல் என பலவித நோய்கள் பீடிக்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.

விருப்பமான உணவு வகைகளை அதிகளவில் உண்பதாலும் சோம்பேறித்தனம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

சோம்பல் எத்தகையது என்பதை திருவள்ளுவரின் பின்வரும் குறளில் பார்க்கலாம்.

குறள் – மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

               குடிமடியும் தன்னினும் முந்து.

மு. வரதராசன் அவர்களின் விளக்கவுரை: அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சோம்பேறித்தனத்தை களைந்தெறிந்துவிட்டால் நிகழ்காலமும் எதிர்காலமும் பிரகாசமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உதாரணக்கதை

அந்த ஊர் செல்வந்தர் சங்கரனுடைய மனைவி ராதா. இருவருக்கும் ஒரே மகள் மஞ்சு. அவர்களுடைய வீட்டில்  சமையல் வேலை, பொருட்கள் வாங்குவதற்கு, வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ய, எடுபிடி வேலைகளுக்கு என நான்கு வேலையாட்கள் பணிபுரிகிறார்கள். மஞ்சு சிறு பிள்ளையாக இருக்கும் போது ஓடியாடி விளையாடி சுறுசுறுப்பாக இருப்பாள். ஆனால் வளர வளர அவளுடன் சோம்பேறித்தனமும் கூடவே வளர்ந்துகொண்டு வந்தது. ஒருவழியாக பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டாள். வீட்டில் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாதவளுக்கு வேலைக்குச் செல்லும் எண்ணமே இல்லை. வேளாவேளைக்கு உண்பதும் தொலைக்காட்சி பார்ப்பதும் கதைப்புத்தகங்கள் படிப்பதும் நித்திரை செய்வதுமாக பொழுது கழிந்ததுடன் உடம்பும் வளர்ந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு ஒரே செல்ல மகள் என்பதால் பெற்றோரும் அவள் எண்ணத்திற்கு விட்டுவிட்டார்கள். இனி என்ன இன்னும் இரு வருடங்களின் பின் ஏற்கெனவே நிச்சயித்தபடி சங்கரனுடைய அக்கா மகன் அருணுக்கு மஞ்சுவை திருமணம் செய்துகொடுத்துவிடலாம் என்பது அவர்களது எண்ணம். அருணுக்கும் இப்போதுதான் படிப்புக்கு ஏற்ற பெரிய பதவி பட்டணத்தில் கிடைத்து பொறுப்பேற்றிருந்தான்.

“மஞ்சு! எப்போதுமே வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறாய். என்னுடன் வா, இன்று வெள்ளிக்கிழமை, கோயிலுக்குச் சென்றுவரலாம்.” ராதா மகளை அழைத்தாள்.

“ஏன் அம்மா, எனக்காக நீங்கள் கும்பிட மாட்டீர்களா?”

“அப்படியா? உனக்காக நான் சாப்பிட முடியுமா? முடியாது தானே. கிளம்பி வா.”

“தினமும் காலையும் மாலையும் வீட்டில் கும்பிடுகிறேன் அல்லவா. கடவுள் எங்கும் இருக்கிறார். தெரியும்தானே.” சிரித்தபடி கூறினாள் மஞ்சு.

“எங்களுக்கும் தெரியும். ஆனால் கோயிலில் மந்திரங்கள், பிரார்த்னை சுலோகங்கள், மணியோசைகள், தீபாராதனைகள், பூசைகள், அலங்காரங்கள், நறுமணங்கள் என எல்லாம் நிறைந்திருக்கும். அவை எமது உள்ளத்திற்கும் உடலுக்கும் தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும் தருகின்றன.”

“நல்ல விஷயங்கள் என்றால்…..” இழுத்தாள் மஞ்சு.

“புத்துணர்ச்சி, மன அமைதி, மனத்தெளிவு, கடவுளுடைய அருள், ஆசிர்வாதம் என்பவற்றோடு அங்கு நிறைந்திருக்கும் சக்தி எமக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. சரி, பட்டப்படிப்பு படித்த உனக்கு இவை எல்லாம் தெரியாதா? விளக்கம் கேட்டது போதும். விரைந்து வா.”

“சரி, சரி, கொஞ்சம் சோம்பலாக இருக்கிறது. அதுதான்…”

“வீட்டில் சும்மா இருந்து உடம்புதான் வளர்கிறது. அறிவு மழுங்கிக்கொண்டு போகிறது.” சலிப்புடன் கூறியபடி சென்றாள் ராதா.

கோவிலில் பூஜைகள் முடிந்தபின்,

“வா, பிரகாரத்தை சுற்றி வரலாம்.” மஞ்சுவை அழைத்தாள் ராதா.

“இவ்வளவு நேரமும் நின்று எனக்கு கால்கள் நோகின்றன. நான் இங்கு அமர்ந்திருக்கின்றேன். நீங்கள் சுற்றிவிட்டு வாருங்கள்.”

கோவிலில் வைத்து ஏன் வாக்குவாதம் என நினைத்த ராதா சரி என்று சென்றுவிட்டாள்.

அப்போது அங்கிருந்த நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் கதைத்துக்கொண்டிருந்தது மஞ்சுவின் காதுகளில் வீழ்ந்தன.

“அந்த பெரியவீட்டுப் பெண்ணைப் பார்த்தாயா? எவ்வளவு குண்டாக இருக்கிறாள்.”

“ஆமாம் நானும் நினைத்தேன். அவளது முகம் நல்ல லட்சணமாக இருக்கிறது. ஆனால் உடம்புதான் இப்படி அவலட்சணமாக இருக்கிறது.”

“ஒரே பிள்ளை. செல்லமாக இருக்கிறாள் போலும்.”

“வீட்டில் வேலைகள் ஒன்றும் செய்வதில்லை என நினைக்கிறேன். பார், பிரகாரத்தை சுற்றக்கூட போகாமல் இருக்கிறாள். அதுதான் உடம்பு இப்படி வளர்ந்திருக்கிறது.”

“தினமும் கோவிலுக்கு வந்து இந்த பிரகாரத்தை ஒன்பது முறை சுற்றினாலாவது உடம்பு கொஞ்சம் குறையும். திருமணம் செய்யும் வயதுபோல் தெரிகிறது. இந்த உடம்பைப் பார்த்து யார்தான் சம்மதிப்பார்களோ?”

“நமக்கு ஏன் வீண் வம்பு. கோவிலுக்கு வந்த நாம் இப்படி எல்லாம் பேசுவது தவறு. அந்தப் பெண்ணுக்கு கேட்டுவிடப்போகிறது.” என்றபடி விலகிச் சென்றனர்.

மஞ்சுவிற்கு கோபத்திற்குப் பதில் பயம் பீடித்துக் கொண்டது. எனது உடல் இவ்வளவு கேவலமாகவா இருக்கிறது. நான் ஏன் இதை கவனிக்கவில்லை. ஏன் ஒருவரும் எனக்கு இதை சொல்லவில்லை. எனக்கு இதை அறியத் தருவதற்குத் தான் கடவுள் என்னை இங்கு வரவைத்திருக்கிறாரோ? என்றெல்லாம் நினைத்தவள், உடனடியாக எழுந்து பிரகாரத்தைச் சுற்றத் தொடங்கினாள்.  

சோம்பேறித்தனம் தன் வாழ்க்கையை பாழாக்க இருந்த​தை நினைத்து நடுநடுங்கினாள். தொலைக்காட்சி பார்ப்பதை கட்டுப்படுத்தி கதைப்புத்தகங்களுடன் மூழ்கி இருப்பதையும் நன்றாகக் குறைத்து தாயுடன் தானும் கோயிலுக்கு வரவேண்டும் எனவும், வீட்டுவேலைகள் அனைத்திலும் உதவி செய்ய வேண்டும் எனவும் அத்துடன் வேலைக்குச் செல்வதற்கு முயற்சி எடுக்கவேண்டும் எனவும் முடிவெடுத்தவள், கடவுளே, எனது சோம்பேறித்தனத்தை போக்கி அருள் புரியுங்கள் என வேண்டத் தொடங்கினாள் மஞ்சு.

*****

Posted in எண்ணக்குவியல்கள். RSS 2.0 feed.
« படித்ததில் பிடித்தது – தொகுப்பு 154
கடைக்கண் பார்வை »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved