குவியல் 7 எண்ணம் 6
வாக்கு மீறல்

எதற்காவது நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை மீறுதல் கூடாது. அவர் பெரியவராக இருந்தாலும் சிறு பிள்ளையாக இருந்தாலும் அச்செயல் அவர்கள் மனதை நோகச் செய்துவிடும். எம்மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவோம். வாக்குறுதி கொடுக்குமுன் அதை செயற்படுத்த முடியுமா எனச் சிந்தித்துப் பார்த்தல் அவசியமாகும். எம்மால் முடியாத விஷயங்களுக்கு வாக்குக் கொடுக்கக் கூடாது. அவசிய தேவைக்காக சிந்தித்துப் பாராது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாக்குக் கொடுத்து காரியத்தை முடிப்பது பெரும் தவறான செயலாகும். சிலவேளைகளில் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாது போக வாய்ப்புண்டு. இது அடுத்தவரை ஏமாற்றும் செயலாகும்.
சிறு பிள்ளைகளுக்கும், அவர்களின் பிடிவாதத்தைப் போக்குவதற்காகவோ அல்லது அழுகையை நிறுத்தி சமாதானம் செய்வதற்காகவோ அவர்களிடம் வேலை வாங்குவதற்காகவோ பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பது தவறாகும். நாளடைவில் பிள்ளைகளும் அவ்வழியைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவர்.
ஒருவரிடம் கடனாகப் பணம் கேட்கும்போது அதைத் திரும்பக் கொடுக்க முடியுமா? எவ்வளவு காலத்தில் கொடுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு கேட்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு பொருளை பாவிப்பதற்காக கேட்கும் போது கவனமாக பாவித்துவிட்டுத் தருகிறேன் என்று கூறி வாங்குவதும் ஒரு வாக்குறுதியே. எனவே எமது பொருளில் காட்டும் அவதானத்தைவிட பன்மடங்கு அவதானம் அப்பொருளில் காட்டவேண்டியது மிக மிக முக்கியமாகும். குறித்த நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நேரம் தாழ்த்திச் செல்லுதல், காதலித்தவரைக் கைவிடுவது, வரதட்சணை தருவதாகக் கூறி ஏமாற்றுதல், பரீட்சையில் சித்தியடைந்தால் பரிசு தருவதாகக் கூறி ஏமாற்றுவது, குறித்த பணம் தருவதாகக் கூறி வேலை வாங்கியபின் பணத்தைக் குறைத்துக் கொடுத்தல் போன்றவை வாக்கு மீறுதல் ஆகும்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது என்பது தெரிந்துவிட்டால் அதை உடனடியாக அறியத்தந்து ஒரு கால எல்லையைக் கேட்பது அல்லது மன்னிப்புக் கேட்டு, இனிமேல் இதுபோல் நடவாமல் பார்த்துக்கொள்வதாகக் கூறுவது நாகரீகமான செயலாகும்.
ஒருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டால் அதை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டியது அவரது தலையாய கடமையாகும்.
உதாரணக்கதை
“என்னங்க, வருகிற பாடசாலை விடுமுறைக்கு எல்லோரும் ஊருக்கு அழைத்துச் செல்வதாக பிள்ளைகளுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள். இருவரும் விடுமுறையை எதிர்பார்த்து பல திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். பரீட்சைகள் முடிந்துவிட்டன. இன்னும் இரு கிழமைகள்தான் இருக்கின்றது. எல்லோரும் செல்வதால் இப்போதே பயணத்திற்கு ஆயத்தங்கள் செய்வதுதான் சரி.”
“அவசரப்படாதே விமலா. அலுவலகத்தில் புதிதாக ஒருமாத வேலைத்திட்டம் ஒன்று வந்திருக்கிறது. நேற்றுத்தான் என்னால் முடியுமா என்று யோசித்துச் சொல்லும்படி கூறியிருக்கிறார்கள். நானும் அதைப்பற்றித்தான் ஆராய்ந்துகொண்டிருக்கின்றேன். இந்த வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் அதிக பணமும் சில சலுகைகளும் கிடைக்கும். ஊருக்குச் செல்வதை அடுத்த விடுமுறைக்கு பார்க்கலாம்.” என்றான் சந்துரு, பிள்ளைகளை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல்.
விக்கித்து நின்றாள் விமலா. உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டவள்,
“என்னங்க, இப்படி சாதாரணமாக சொல்கிறீர்கள். பிள்ளைகள் ஏமாற்றமடையப் போகிறார்கள். ஊருக்குச் செல்லப் போகிறோம் என்ற ஆவலில் கவனமாக படித்து பரீட்சைகளை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிள்ளைகள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். அதனால் எங்கள் மேல் இருக்கும் மரியாதையையும் இழக்கவேண்டி வரலாம். அப்பா ஒரு ஏமாற்றுக்காரர் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்கள் சிறு பிள்ளைகள் தானே. அவர்களுக்கு முன் உதாரணமாக நாங்கள் இருந்தால் தான் அவர்களும் அதைப் பின்பற்றி நல்ல குணமுள்ள பிள்ளைகளாக வளர்வார்கள்.”
“என்ன நீ பெரிய பெரிய வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகின்றாய். இது முதல்முறையாகத்தானே நடக்கின்றது. இந்த ஒரு முறை அவர்களை சமாளித்துவிடு. இனிமேல் இப்படி நேராமல் பார்த்துக்கொள்கிறேன். இந்த வேலைத் திட்டத்தில் நாம் எதிர்பாராத மிகப் பெரிய தொகை கிடைக்கும்.”
“எல்லாவற்றிற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருக்கிறது. பணத்தாசை வந்துவிட்டால் இது தொடர்கதையாகப் போய்விடும். வாக்குறுதியை மீறுவதும் சகஜமாகிவிடும். உங்களுக்கு பணம் முக்கியமா அல்லது பிள்ளைகளுக்குக் கொடுத்த வாக்கு முக்கியமா என்பதை இம்முறையே முடிவு செய்துவிடுங்கள். உங்களிடம் உள்ள திறமைக்கு பணம் எப்போதும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் பிள்ளைகளிடம் மதிப்பை இழந்துவிட்டால் அதை மீண்டும் சம்பாதிக்க முடியுமா?”
கணவனை சிந்திக்க வைத்துவிட்டு தனது வேலைகளைப் பார்க்க சென்றாள் விமலா.
விமலாவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணரத் தொடங்கினான் சந்திரு. பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது என முடிவெடுத்தவன் மனைவியை நாடிச் சென்றான், பயணத்திற்கு ஆயத்தமாகும்படி கூறுவதற்கு.
*****