குவியல் 8 எண்ணம் 2
கல்வித்துறை

மனிதன் வசதியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான காரணிகளுள் கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. பொருள் ஈட்டுவதற்கும் அதனை சரியான முறையில் செலவு செய்வதற்கும், ஈட்டிய பொருளை பாதுகாப்பதற்கும் கல்வி அறிவு பயன்படுகிறது. ஒரு மனிதனின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரியப்படுத்த கல்வி அறிவு துணை புரிகிறது. மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கவும் அதை நோக்கி பயணம் செய்யவும் வெற்றியடையவும் கல்வி வழிகாட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் கல்வி துணை நிற்கிறது.
ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படைக் கல்வி அறிவாவது இருக்கவேண்டும். அவற்றுள் வாழ்க்கைக்கு உதவும் எண்ணறிவும் எழுத்தறிவும் மிக முக்கியமானவை. ஈட்டிய செல்வத்தை சரியானமுறையில் செலவழிப்பதற்கு கணிதம் எவ்வளவு முக்கியமோ அதேபோல கருத்துக்களை தெரிவிப்பதற்கு எழுத, வாசிக்க, பேச மொழி மிகவும் முக்கியமாகும். இவ்வுலகில் மேற்கொள்ளப்படும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும், பூமியைத் தாண்டி பிரபஞ்சத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் கணிதம் அடிப்படையாக இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இவ்விரண்டினதும் மகத்துவத்தை வள்ளுவப் பெருந்தகை அருளிய குறள் பின்வருமாறு கூறுகிறது.
திருவள்ளுவரின் குறள் கூறுவது;
குறள் – எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் விளக்கவுரை – எண் என்று சொல்லப்படுவனவும், எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள்.
இதனையே ஔவைப் பிராட்டியும் பின்வரும் பாடல் வரிகள் மூலம் மிகவும் சுருக்கமாகக் கூறியுள்ளார்.
ஔவையாரின் கொன்றைவேந்தன் கூறுவது;
கொன்றை வேந்தன் – எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
கவிஞர் பத்மதேவன் அவர்களின் விளக்கவுரை- கணக்கறிவும் எழுத்தறிவும் மக்களுக்கு இரு கண்கள் என்று சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை யாகும்.
மேலும், இன்று “சுடோகு” (sudoku) எனும் எண் புதிர் விளையாட்டு மிகவும் பிரபல்யப்பட்டு வயதெல்லை இல்லாது பலரும் விளையாடுகிறார்கள். இவ் விளையாட்டானது மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மூளையை சுறுசுறுப்பாகவும் கூர்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
இன்றைய காலத்தில் சிறுவர்களுக்கு எண்சட்டம் அல்லது “அபக்கசு” (abacus) முறையினால் கணிதத்தினை கற்பிப்பதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இம்முறையானது மாணவர்களது கணித திறனையும் புத்திசாதுரியத்தையும் மேம்படுத்துகிறது என்பது அறிஞர்களின் கருத்தாகும். வசதிபடைத்த பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இம்முறையினை கற்பிற்கின்றார்கள்.
எழுத்தறிவை நோக்குமிடத்து, நமது தமிழ்மொழியை நோக்குவோமேயானால், சங்ககாலம் தொட்டே மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் மொழியைப் பேணிப் பாதுகாப்பதற்கு தமிழ்ச்சங்கங்கள் அமைத்து இயல், இசை, நாடகம் என மொழியை வளர்த்து வருகின்றனர். இயல் என்பது எழுதுவதும் வாசிப்பதும், இசை என்பது பண்ணிசைத்து பாடுவதும், நாடகம் என்பது ஆடல்பாடல்களுடன் கூடியதுமாகும். கலை, பண்பாடு, நாகரீகம் என்பவற்றை பண்டைய காலத்திலிருந்து புதிய தலைமுறையினருக்குக் கடத்தி செல்வதற்கு மொழி உதவுகிறது. ஆராய்ச்சிகளையும் அதன் பெறுபேறுகளையும் உலகத்திற்கு அறியத் தரவும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கும் எழுத்தறிவு எவ்வளவு முக்கியமானது என்பது யாவரும் அறிந்ததே.
பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் கல்வியானது தொடர்ந்து பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்வி புகட்டும் நிறுவனங்கள் மூலமாகவும் கற்பிக்கப்படுகின்றது. கற்பதற்கு வயதெல்லை கிடையாது. சிறு குழந்தை முதல் முதியோர் வரை ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இள வயதில் குடும்பச் சுமைகளை ஏற்கவேண்டிய சூழ்நிலையால் கற்றலை பாடசாலை மட்டத்தோடு நிறுத்தியவர்கள் சுமைகள் குறைந்ததும், வயதினை கருத்திற்கொள்ளாது, தொடர்ந்து படித்து இளமானிப் பட்டம், முதுமானிப் பட்டம், டாக்டர் பட்டம் என பட்டப்படிப்பினை முடித்தவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
கற்கக் கற்க அறிவு வளர்ச்சியடையும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை அருளிய இன்னொரு குறள் பின்வருமாறு கூறுகிறது.
குறள் – தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் விளக்கவுரை – தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
கற்றல் நடவடிக்கைமூலம் பெறும் அறிவு மட்டுமல்லாது அனுபவக் கல்வியும் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமாகும். வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே இப்பூவுலகில் பிறந்திருக்கும் அனைத்து மக்களும் ஆசிரியர்களே எனக் கருத முடியும்.
கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்கள் மிகவும் பொறுப்பும் பொறுமையும் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். இளவயது மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்ற பழமொழிக்கேற்ப சிறுவயதில் கற்கும் கல்வியானது அவர்கள் மனதில் ஆழமாக பதியும்படி செய்ய வேண்டியது ஆசிரியர் கடமை. அத்தகைய ஆசிரியர்கள் போற்றுதற்குரியவர்கள் ஆவர்.
ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கையானது சேவை மனப்பான்மையுடன் செய்யவேண்டிய தொழிலாகும். ஒரு ஆசிரியருக்கு தகைமைகளும் அறிவும் இருந்தால் மட்டும் போதாது. மாணவர்களுக்கு மனதில் பதிந்து நிலைத்து நிற்கும் வண்ணம் கற்பிக்கும் திறமை இருத்தல் சிறப்பாகும். இக் கற்பிக்கும் கலையானது மிகச் சிலருக்கே கைவந்த கலையாகும். கற்பித்தல் நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆளணியினர்களுக்கு பொருத்தமான, தேவையான பயிற்சிகளையும் அவர்களது தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் மேற்படிப்பையும் தொடர்வதற்கு கல்வித்துறை வழிசமைத்துள்ளது. இதற்காகவே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் இயங்குகின்றன.
எல்லாப் பிள்ளைகளும் கற்பிப்பதை விரைவாகப் புரிந்து படிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். சில பிள்ளைகள் விரிவாக பலமுறை கற்பித்த பின்புதான் புரிந்துகொள்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு கூடிய கவனம் செலுத்தவேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியரின் கடமை கற்பித்தல் நடவடிக்கை மட்டுமல்ல. பிள்ளைகள் வளர வளர அவர்களது ஆர்வமும் கெட்டித்தனமும் எத்துறையில் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து அத்துறையில் அவர்கள் கல்வியைத் தொடர வழிசமைக்கவேண்டியது பெற்றோர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களுமே.
ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை இனங்கண்டு, நன்கொடைகள் மூலம் கிடைக்கும் கல்வி தொடர்பான உபகரணங்கள் அவர்களுக்குக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டியதும் ஆசிரியரின் கடமைகளில் ஒன்றாகும்.
மாணவர்களது கல்வியில் மட்டுமல்லாது அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களை ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் பிற்காலத்தில் வாழ வழிசமைக்கவேண்டியதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.
ஆசிரியர்களின் பன்முகப் பொறுப்புக்களைக் கருத்திற்கொண்டு தமிழில் பிற்காலத்தில் எழுதப்பட்ட நீதி நால்களில் ஒன்றான நறுந்தொகையில் அதிவீரராம பாண்டியர், ஆசிரியரின் முக்கியத்துவத்தை மிகச் சுருக்கமாக பின்வருமாறு கூறியுள்ளார்.
“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.”
- ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வழிபடவேண்டும் என்பது கருத்து.
ஆசிரியர்கள், அதிபர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என பலதரப்பட்ட உத்தியோகத்தர்கள் அடங்கலாக கல்வித்துறை இயங்குகிறது. எமது நாட்டில் கல்வி தொடர்பான கொள்கைகளையும் மாணவர்களுக்குரிய பாடத்திட்டங்களையும் ஆசிரியர்களுக்குரிய கைநூல்களையும் மிக நுணுக்கமான முறையில் கல்வித் திணைக்களம் தயாரிக்கின்றது. பாடப்புத்தகங்கள், பயிற்றுவிப்புக் கைநூல்கள், வழிகாட்டிகள் போன்றவற்றை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
பொதுக் கல்வியின் அபிவிருத்தி தொடர்பான அலுவல்களை மேற்கொள்வதற்கு தேசிய கல்வி நிறுவனம் இயங்குகிறது. இந்நிறுவனம் காலத்திற்குக் காலம் பாடத்திட்டங்களில் திருத்தங்களை செய்வதன் மூலம் கல்வியின் தரத்தினை உயர்த்துகிறது. ஆசிரியர்களின் தரத்தினையும் உயர்த்தும் நோக்குடன் கருத்தரங்குகள், பயிற்சிகள் முதலானவற்றை செயல்படுத்துகிறது.
பரீட்சைகள் நடாத்துவது, விடைத்தாள்களை திருத்துவது, பரீட்சை முடிவுகளை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளையும் மிகவும் பாதுகாப்பான, நேர்மையான முறையில் பரீட்சைத் திணைக்களம் செயற்படுத்துகின்றது.
அத்துடன் பல அதிகாரிகளை நியமித்து பாடசாலைகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு அங்கு கற்றல் நடவடிக்கைகளை சரி பார்க்க, கண்காணிக்க, மேற்பார்வையிட கல்வித் திணைக்களம் ஒழுங்கு செய்துள்ளது.
எல்லாக் குழந்தைகளுக்கும் கற்கும் உரிமை உள்ளது. அதை நிலைநாட்டுவதற்காக இலவச கல்வியை அரசு வழங்குகின்றது. அதே சமயம் தனியார் பாடசாலைகளும் இயங்குகின்றன. அனைத்து பாடசாலைகளும் கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றன.
உடல் ரீதியில் ஊனமுள்ள சிறப்புக் குழந்தைகளுக்காக தனிப்பட்ட பாடசாலைகள் இயங்குகின்றன.
கல்வித்துறையானது கற்பித்தல் நடவடிக்கையுடன் வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்பயிற்சியையும் கொடுக்கின்றது. விளையாட்டு, கலைகள், போன்றவற்றிற்கும் கல்வித்துறை முக்கியத்துவம் கொடுக்கின்றது. பல துறைகளிலும் போட்டிகளை பாடசாலைகளுக்கிடையே நடாத்தி மாணவர்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கின்றது கல்வித்துறை.
1960 ஆம் ஆண்டு காலகட்டங்களில் பல்கலைக்கழக அனுமதி பெறும் நோக்குடன் சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் பெறும் கல்வியுடன் மேலதிகமான வகுப்புகளுக்கும் செல்லத் தொடங்கியதால் நாட்டில் தனியார் கல்வி நிலையங்கள் பெருகிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் போட்டி மனப்பான்மையுடன் பிள்ளைகளை கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துகின்றனர். அதனால் தற்போது தரம் ஒன்றிலிருந்தே பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக குழந்தைகளை தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் வழக்கம் தொடங்கிவிட்டது. இதனால் சிறுவர்களின் ஓய்வு நேரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் ஒரு இயந்திரமாக மாறும் நிலை உருவாகுகிறது. இதனால் குழந்தைகளுக்கு விளையாடுவதற்குக்கூட நேரம் கிடைப்பதில்லை.
ஒரு குழந்தை எப்படியாக வளரவேண்டும் என்பதை பாரதியாரின் பாப்பாப் பாட்டில் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.
“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா”.
பாரதியாரின் இப்பாடலுக்கு மதிப்பளிக்கும் முகமாக விளையாடுவதற்கோ அல்லது வேறு பொழுதுபோக்கிற்காகவோ சிறிதளவு நேரமாவது சிறுவர்களுக்கு ஒதுக்குவது அவர்களது உடல், உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றான செயலாகும்.
உயர்கல்வியை நோக்கும் போது வெளிநாடுகளில் பெரும்பான்மையாக தனியார் பல்கலைக்கழகங்களே இயங்குகின்றன. எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தன. பின்பு படிப்படியாக அதிகரித்து தற்போது நாடு முழுவதும் பதினைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. எல்லாப் பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றன. முக்கியமாக அரச மானியங்கள் மூலம் நடாத்தப்படும் இப் பல்கலைக்கழகங்களில் இலவச கல்வி வழங்கப்படுவதுடன் வறுமைக்கோட்டிலிருக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கி அவர்கள் கல்வியைத் தொடர உதவிபுரிகிறது. நமது நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரிக் கற்கைநெறிகளாக பல்வேறு கற்கைநெறிகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் இவ் வாய்ப்பினைப் பயன்படுத்தி உயர்கல்வியினை இப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள முடிகிறது. அத்துடன் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களின் நன்மை கருதி திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. அவர்களுக்காக பல தனியார் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன.
ஒரு நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதில் கல்வித்துறை பெரும் பங்கினை வகிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
உதாரணக்கதை
பாடசாலையில் அன்று மூன்றாம் தவணை முடிவடையும் இறுதி நாள். பரீட்சை முடிவுகள் அறிக்கை கொடுக்கப்பட்டு விடுமுறை விடும் நாள். இனி அடுத்தவருடம் புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் பரபரப்புடனும் ஆவலுடனும் காத்திருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை அதிபரினால் அறிக்கை வழங்கப்படும். மீதி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்குவார்கள். அதுதான் அந்தப் பாடசாலையின் வழக்கம்.
அறிக்கைகள் வழங்கப்பட்டபின் மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர் வாயிற்புறமாக காத்திருந்தனர்.
ஆறாம் வகுப்பில் கல்விபயிலும் மாணவி மீனா, தன்னுடன் படிக்கும் கயலின் தாய் தமயந்தியை நெருங்கி,
“ஆண்டி, வழமையாக முதலாம் நிலையில் இருக்கும் கயல் இம்முறை நான்காம் நிலைக்கு போய்விட்டாள். இம்முறை நான்தான் முதலாம் நிலையில் இருக்கிறேன்.” மகிழ்வுடன் கூறிவிட்டு ஓடிச்சென்றுவிட்டாள்.
தமயந்திக்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது. என்ன நடந்திருக்கும், எந்தெந்தப் பாடங்களில் புள்ளிகள் குறைவாக இருந்திருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தவள் வகுப்பாசிரியரை சந்தித்து கேட்போம் என்ற முடிவுடன் உள்ளே சென்றாள்.
வகுப்பாசிரியரிடம் புள்ளி விபரங்களை வாங்கிப் பார்த்தபோது தமிழ் பாடத்தில் நூறுக்கு நூறு வழமையாக எடுக்கும் கயல் இம்முறை எழுபது புள்ளிகளே எடுத்திருந்தாள். நான்காம் நிலைக்கு சென்றதன் காரணம் அதுதான் என்பதை பார்த்தவள் ஆசிரியரிடம்,
“தயவுசெய்து கயலின் தமிழ்பாடத்திற்குரிய விடைத்தாளை பார்க்கமுடியுமா? அந்தப்பாடத்தில் வழமையாக நூறு புள்ளிகள் எடுப்பவள் இம்முறை எழுபதுதான் எடுத்திருக்கிறாள். எந்தப் பகுதியில் குறைவாக இருக்கிறது என்று பார்த்தால் அடுத்தமுறை கூடிய கவனம் எடுக்கலாம் அல்லவா.” என பணிவுடன் கேட்டாள் தமயந்தி.
“கண்டிப்பாக, தமிழ் ஆசிரியை வேறு வகுப்பில் இருக்கிறார். நான் தருகிறேன் பாருங்கள்.”
அவசர அவசரமாக பார்த்துக்கொண்டு சென்றவள், எல்லா பகுதிகளிலும் முழுப் புள்ளிகள் எடுத்திருக்கிறாளே. எவ்வாறு புள்ளிகள் குறைந்திருக்கும் என தடுமாறியவளை அணுகிய ஆசிரியை,
“பார்த்துவிட்டீர்களா?”
“பார்த்துவிட்டேன். ஆனால் எல்லா பகுதிகளிலும் முழுப் புள்ளிகள் எடுத்திருக்கிறாள்….” என இழுத்தவளிடம் விடைத்தாளை வாங்கிய ஆசிரியை, யோசனையுடன் பார்த்தார்.
தமயந்தி கூறியது சரிதான். அப்புறம் எப்படி என புள்ளிகளை கூட்டிப் பார்த்தார். கூட்டியதில் தவறு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டார். அதன்படி பார்த்தால் கயல்தான் முதலாம் நிலை மாணவி. இப்போது என்ன செய்வது? அதிபரிடம் முதல் மூன்று நிலை மாணவர்களது அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு அவர் இன்னும் செல்லவில்லை. அவரிடம் சென்று அறிக்கையில் ஏற்பட்ட குழப்பத்தை எப்படிக் கூறுவது? என கலங்கிய ஆசிரியை, விடயத்தை தமயந்தியிடம் கூறிவிட்டு, தமிழ் ஆசிரியையை அழைத்துவரும்படி மாணவி ஒருவரை அனுப்பினார்.
அவர் வந்ததும் நிலைமையை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் சமாளித்துக்கொண்டு,
“இப்போது ஒன்றும் செய்யமுடியாது. அறிக்கைகள் அதிபரிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. மாணவர்களும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். பாடசாலை ஆரம்பமானதும் நான் இதை வகுப்பாசிரியருடன் சேர்ந்து சரிசெய்து தருகிறேன். மன்னித்துவிடுங்கள்.” என பொறுப்பில்லாமல் பதிலளித்தார்.
தமயந்திக்கு கோபம் தலைக்கேறிவிட்டது.
“என்ன சொல்கிறீர்கள். ஒரு ஆசிரியர் இப்படித்தான் கவலையீனமாக இருப்பதா? வழமையாக நூறு எடுக்கும் மாணவி ஏன் இம்முறை இப்படியானது என்றாவது சிந்தித்து மறுமுறை விடைத்தாளை ஆராய்ந்து பார்க்கமாட்டீர்களா? உங்களால் இப்போதே சரிசெய்ய முடியாதென்றால் சொல்லுங்கள். நான் அதிபரிடம் சென்று கதைக்கிறேன்.”
“இல்லை இல்லை. சற்றுப் பொறுங்கள். நானே சென்று சரி செய்கிறேன்.” என அதிபர் அறையை நோக்கி விரைந்தார் தமிழ் ஆசிரியை.
அதிபரிடம் நடந்ததைக் கூறி அறிக்கையைக் கேட்டபோது, அதிபர் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்தியவர்,
“இது முதல் முறையல்ல. முன்பும் இருமுறை உங்கள்மீது புகார் வந்திருக்கிறது. பயிற்சி ஆசரியைதானே, போகப் போக பயிற்சி பொறுப்புக்களை உணரச் செய்து உங்களை செம்மைப்படுத்திவிடும் என நினைத்தேன். ஆனால் அது தவறு என்பதை இன்றைய செயல் உணர்த்திவிட்டது. ஆசிரியர் தொழில் மிகவும் பொறுப்பு வாய்ந்தது. அதை விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். நீங்களோ அப்படி இல்லை. உங்களுக்கு பொருத்தமான விருப்பமான வேறு தொழில் வாய்ப்பைத் தேடுவதே சிறந்தது. நீங்கள் இங்கு பயிற்சி ஆசிரியையாக இருப்பதால் இலகுவாக விலகிவிடலாம். அதுதான் உங்களுக்கு நல்லது. இந்தாருங்கள் அறிக்கைகளை மாற்றம் செய்து விரைவாக கொண்டுவந்து தாருங்கள்.”
அறிக்கைகளை பெற்றுக்கொண்ட ஆசிரியை தனது பிழைகளை நன்றாக புரிந்துகொண்டார். இந்தப் பதவி தனக்குப் பொருத்தமற்றது என்பதை இன்றைய நிகழ்வு அவருக்கு உணர்த்திவிட்டது.
*****