அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். கதிரவன் வந்து தழுவி எழுப்பும்வரை எழுந்திருக்கமாட்டாள் கஸ்தூரி. வழமைபோல் யன்னலை திறந்து திரைச்சீலைகளை இழுத்துவிட்டு சென்றிருந்தாள் தாய் புனிதா.
கதிரவனின் தழுவலில் விழி மலர்ந்தவள் இயற்கையின் விளையாட்டில் தன்னையே மறந்துவிட்டாள்… முதல் நாள் இரவு இதழ் விரித்த மல்லிகை நறுமணம் வீசிக்கொண்டிருக்க, வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டு முத்தமிட்டு தேனருந்தி பறந்து திரிகின்றன. மொட்டுவிரித்த றோஜாக்கள், செவ்வந்தி, செவ்வரத்தை என சிறிய பூந்தோட்டம் ஒன்று விரிந்திருக்கிறது அவளது அறையின் யன்னலருகே. தேன் சிட்டுக்களின் ஆரவாரம், வண்டுகளின் ரீங்காரம் இன்னிசையாய் காதுகளில் ஒலிக்க பிரமிப்புடன் ரசிக்கத் தொடங்கினாள் கஸ்தூரி.
ஆதவனுடன் சல்லாபிக்கும் மலர்கள், மலர்களோடு உறவாடும் புள்ளினங்கள், இதமாக தழுவி உயிர் கொடுக்கும் தென்றல், அப்பப்பா இயற்கையின் கள்ளம் கபடமில்லா காதலை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை…
நடப்புக்கு திரும்பியவளை தந்தையின் நினைவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன…
மகளுக்கு ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையை வளர்த்து சொந்தக்காலில் நிற்கும்வரை கூடவே துணையாயிருந்தவர் கடமை முடிந்தது என்று மாரடைப்புடன் சென்றுவிட்டார்.
இயற்கையை ரசிக்க கற்றுத்தந்த தந்தை. அதில் காதலைக் காட்டிய தாய்…
சிந்தனை விரிகிறது…
மனிதர்களும் மாசு மறுவற்று காதலிக்கக் கற்றுக்கொண்டால் உலகம் எவ்வளவு அழகானதாக மாறிவிடும்…
பெற்றவரிடம் அன்புக் காதல், உற்றார் உறவினரிடம் பாசக் காதல், நண்பர்களிடம் நட்புக் காதல், காதலன் காதலியிடம் – கணவன் மனைவியிடம் காமம் கலந்த காதல், இயற்கையிடம் ரசனைக் காதல், இறைவனிடம் பக்திக் காதல்… எவ்வளவு அழகானது…
அட… சட்டென்று நினைவு வர துள்ளி எழுந்தாள் கஸ்தூரி. இன்னும் இரு தினங்களில் காதலர் தினம் வருகிறதே. நண்பர்களின் அன்றைய மாலை கடற்கரை சந்திப்பில் நிச்சயம் செந்தூரன் தனது காதலை சொல்லிவிடுவான்… அம்மாவின் சம்மதம் கண்டிப்பாக கிடைக்கும்…
நம்பிக்கையுடன் எழுந்து காலைக்கடன்களை முடித்தவள் தாயை நாடிச் செல்கிறாள்…
“அம்மா! காலை வணக்கம்”. கட்டியணைத்து முத்தமிட்டவுடன் பதில் கிடைக்குமுன், “அம்மா, நான் உங்களை காதலிக்கிறேன்”.
புனிதாவின் முகம் கேள்விக்குறியுடன் பார்க்க…
“அம்மா, காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடையே பிறக்கும் அன்புக்கு மட்டும்தான் காதல் என்ற பெயரா… நான் உங்கள்மீது கொண்டது அன்புக் காதல்…”
“என்ன, எனக்கே பாடம் நடத்துகிறாயா…” செல்லமாக மகளின் கன்னத்தில் தட்டி தன் வேலைகளில் மூழ்கிவிட்டாள் புனிதா.
அன்று காதலர் தினம், காலை 8 மணி. அழகிய மஞ்சள் நிற பருத்திச் சேலையில் செவ்வந்திப் பூப்போல தயாராகிவிட்டாள் கஸ்தூரி.
“அம்மா, போய்ட்டு வர்ரேன்” என்று தனது இரு சக்கர வண்டியை நோக்கிச் செல்ல, உள்ளிருந்து “சாப்பாட்டு பெட்டி எடுத்தியாம்மா…” என்ற தாயின் குரல் துரத்திக்கொண்டு வந்தது.
“எடுத்திட்டேன்மா… வர்ரேன்மா…” என்று அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள்.
செந்தூரன்… ஒரே கல்லூரியில் வேறு வேறு பிரிவில் படித்தவர்கள். கணிணி துறையில் செந்தூரன், கணக்கியல் துறையில் கஸ்தூரி. சிற்றுண்டிச் சாலையில் முதல் பார்வை பரிமாற்றம். அன்று மாறனின் முதற்கணை தொடுக்கப்பட்டு இருவருக்குமிடையே காந்த அலைகள் உருவாகிவிட்டன. நண்பர்களோடு நண்பர்களாக பழகினர்.
தங்களிடையே உருவான ஈர்ப்பு தெரிந்தும் இருவருமே வௌிப்படுத்த விரும்பவில்லை. கல்வியை சிறப்பாக முடித்து நிலையான ஒரு நல்ல பதவியில் அமர்வதே தற்போதைய இலட்சியம் என்றும் அதுவரை வேறு சிந்தனை தனக்கு இல்லை என்றும் நண்பர்களிடையே கூறிய செந்தூரனின் விழிகள், கஸ்தூரியிடம் சொன்னதோ வேறு. அவளும் புரிந்து, காத்திருத்தலுக்கு தன்னை தயார்படுத்திவிட்டாள்.
காத்திருத்தல் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இருவருமே நல்ல பதவிகளில் இடம்பிடித்துக்கொண்டனர். இருவரது சந்திப்பும் நண்பர்களுடனேயே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
செந்தூரனின் நினைவுகளுடன் கஸ்தூரி ஒழுங்காக அலுவலகம் வந்து சேர்ந்தாள். காலை தேநீர் இடைவேளையின் போது கைபேசியில் அழைத்தாள் சிநேகிதி கார்த்திகா.
“கஸ்த்தூ, இப்போதான் விமலன் சொன்னான், புதிதாக இருவர் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளப்போகிறார்களாம். யார் தெரியுமா… செந்தூரனின் அத்தை பெண்கள் இருவர், சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார்களாம்… அவர்களில் ஒருத்தி அவனை கொத்திக்கொண்டு போய்விடுவாள் என்று எதிர்பார்க்கிறார்களாம். அழகில் அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டவேணும். அதனால நாங்கள் எல்லோரும் அழகுக்கு மெருகேற்றி வருவோம். அப்புறம் உனக்கு சொல்லல என்றிடாதே. வைக்கட்டுமா” என்று பதிலை எதிர்பாராமல் அணைத்துவிட்டாள் கைபேசியை மட்டுமல்ல அவள் ஏற்றிய காதல் தீபத்தையும்தான்.
எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ தெரியவில்லை. வழமைக்கு மாறாக மதியமே வாடிய மலராக வந்தவளை கவலையுடன் பார்த்த புனிதா,
“என்னம்மா, வேலை அதிகமா… ரொம்பவே களைப்பாக தெரிகிறாயே…”
“ஆமா, தலை வலிக்கிறது அம்மா. சிறிது தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். ஒரு மணி நேரம் என்னை தொந்தரவுசெய்ய வேண்டாம்…” என்று முறுவலித்து தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
“மனமே அமைதிகொள். என் பார்வையில்தான் கோளாறு. தவறாக நினைத்து கற்பனையை வளர்த்தவள் நான். செந்தூரன் எனக்குரியவன் அல்ல. மனமே ஏற்றுக்கொள். போட்டியும் பொறாமையும் வேண்டாம். ஒரு தலையாய் காதலை வளர்த்தவள் நான். ஏமாற்றப்படவில்லை. புரிந்துகொள் மனமே… அவன் ஒரு நல்ல நண்பன். அவ்வளவுதான்.” என உருப்போட்டுக்கொண்டிருந்தாள்.
“அம்மாவுக்கு சொல்லுமுன் அறிந்தது கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம். என் மகிழ்வுக்காகவே வாழும் அம்மா. அம்மாவை மகிழ்வாக வைத்திருக்கவேண்டியது எனது கடமை. வேதனைப்பட்டு என்னை வருத்திக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை.” என்று நினைத்தவள், தந்தை சொல்வதை நினைவுகூர்ந்தாள்…
“கடவுள் தந்த அழகிய வாழ்க்கை, மகிழ்வோடு வாழ்வதற்கே. வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம், இன்பம் துன்பம் எல்லாம் சேர்ந்ததே வாழ்க்கை. தேவையான சந்தர்ப்பங்களில் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் வாழ்வில் மகிழ்வை அழைத்துவரும்.”
பலவாறாக சிந்தித்து மனதை வென்றுவிட்டாள் கஸ்தூரி. அன்பு, பாசம், நேசம், காதல், பக்தி, ரசனை இவற்றோடு தீய பண்புகளையும் உருவாக்குவது நம் மனம்தான். அதை நம் கட்டுக்குள் வைத்து, எல்லாம் நன்மைக்கே என்று குறை நிறைகளோடு வாழ்க்கையை காதலிக்க தாய் கற்றுத்தந்தது வீண்போகவில்லை.
பட்ட காயத்திற்கு காலமே மருந்தென்ற நம்பிக்கையுடன் மனதை தேற்றிக்கொண்டு, எழுந்துவிட்டாள் கஸ்தூரி வாழ்க்கையை காதலிக்க… கடற்கரை சந்திப்புக்கும் ஆயத்தமாகிவிட்டாள் புதுப்பொலிவுடன்…
ஆதலினாற் காதல் செய்வீர் வாழ்க்கையை
மகிழ்வுடன் இருப்பீர் வாழும் காலம்…
பின்குறிப்பு – தனது அத்தை பெண்களென செந்தூரன் அழைத்து வந்தது இரு சிறுமியரை என்பதும், நண்பர்களின் அதீத கற்பனையே அவனது திருமணம் என்பதும், காதலர் தினத்தன்று செந்தூரன் தனது காதலைச் சொல்லி கஸ்த்தூரியை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ததும் வேறு கதை.
*******