இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதற்கே குடும்பத் தலைவியும் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அவளால் சமையலை சரிவர கவனிக்க முடியாதுள்ளது. அவசர அவசரமாக தயாராகி கணவர், பிள்ளைகளுடன் தானும் செல்வதற்கு துரித உணவையே பெரும்பாலும் நாடுகிறாள். குடும்பத்தினரும் அதற்கு பழக்கப்பட்டு அதை விரும்பி உண்ணுகிறார்கள். இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் புதிது புதிதாக முளைத்து எல்லோரையும் கவரும் வண்ணம் பல பிரபலங்களை நடிக்க வைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்கிறார்கள். இதில் கவரப்பட்டு அடிமைப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான்.
முன்னைய காலங்களில் தூள் வகைகள், மா வகைகள் எல்லாமே வீட்டிலேயே பெண்கள் தயாரிப்பார்கள். ஆனால் இப்போது இவை எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவற்றில் சுத்தத்தை எதிர்பார்க்கவும் முடியாது, கலப்படமும் இருக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் இவற்றையே நம்பி வாழ்கிறார்கள். துரித உணவு வகைகளாலும் கலப்படம் நிறைந்த உணவுகளினாலும் வரும் கேடுகளை சிந்தித்துப் பார்ப்பதற்கும் அவர்களுக்கு நேரமில்லை.
இப்படியான சூழலிலிருந்து மக்களைக் காப்பதற்கு அரசாங்கமும் முயற்சிகள் எடுக்க வேண்டும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் முயற்சிகள்:
– துரித உணவு வகைகளுக்கு உயர் வரி விதித்து விலையேற்றம் செய்ய வேண்டும்.
– துரித உணவு உற்பத்தியை/இறக்குமதியை படிப்படியாக குறைத்து, அது தொடர்பான நிறுவனங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.
– தொலைக்காட்சிகளில் இவை தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
– காலத்திற்கு காலம் கலப்படம் தொடர்பாகவும் காலாவதியாவது தொடர்பாகவும் பரிசீலனை செய்து மீறுவோரை தடை செய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
– பாடசாலைகளில் சுகாதார பாடத்திட்டத்தில் இவ்வகையான உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை உதாரணங்களுடன் புகுத்த வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வியில் சித்திரக்கதைகள் மூலம் சொல்லித்தரலாம்.
– கல்லூரிகளில் நடைபெறும் கலைப் போட்டிகளை/கலை நிகழ்சிகளை இதை மையமாக வைத்து நடாத்தலாம்.
– துரித உணவு வகைகளை தவிர்த்து சரியான முறையில் சமையல் செய்வதற்காக அலுவலகங்களை அரை மணி/ஒரு மணி நேரம் பிந்தி ஆரம்பிக்கலாம். முடியும் நேரத்தை நீடிப்பதன் மூலம் அந்த நேரத்தை சரிசெய்ய முடியும்.
பொது மக்கள் செய்ய வேண்டியவை:
– குழந்தைகளின் நலனை நினைவில் கொண்டு துரித உணவு வகைகளை படிப்படியாக குறைத்து, சத்தான உணவு வகைகளை அவர்களை கவரும் வகையில் சமைப்பதில் முழு மனதுடன் ஈடுபடவேண்டும்.
– காலாவதியாகும் திகதியை பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்.
– கலப்படம் உள்ள பொருட்களை அடையாளம் கண்டு அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கக்கூடாது.
– சிறுவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே கிழமைக்கு ஒரு முறை தரலாம் என்றும், பின்பு சிறிது நாட்களின் பின் மாதம் ஒருமுறை என்று நீடித்தும், அடிக்கடி விதம் விதமாக அவர்களை கவரும் வகையில் உணவு வகைகள் செய்து கொடுத்தும், துரித உணவு வகைகளில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை களைய வேண்டும்.
எனவே துரித உணவு மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகளின் கேடுகளில் இருந்து மக்களை காப்பற்ற அரசாங்கமும் முயற்சி எடுக்க வேண்டும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பது எனது கருத்து.