நவீன யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில், காலத்திற்கேற்ப சிந்திக்கும் திறனும் வேகமும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்ற பிடிவாதத்துடனும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்பது எனது கருத்து.
வேகமாக வளரும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இளைய தலைமுறையினரின் மன வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கிறது. அதற்கு ஈடுகட்ட முடியாத பெரியவர்கள் சிறிது திண்டாடித்தான் போகிறார்கள். ஆனாலும் அன்பும் பண்பும் ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையும் கற்றுத்தந்து வாழும் குடும்பங்களில் இளைஞர்கள் இன்றும் பெரியவர்களின் அறிவுரைகளை கருத்திற்கொள்ள தவறுவதில்லை.
நற்பண்புகளுடன் வளரும் பிள்ளைகளின் விருப்பங்களில் தவறு இல்லை என்று காணும் பட்சத்தில் பெரியவர்கள் அவர்களுடன் அனுசரித்து போவதே உகந்தது. தவறு என்று உணர்ந்தால், அதை இதமாக சுட்டிக்காட்டி விலகி நின்றால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். இதனால் பிள்ளைகளுக்கு பெற்றோர்மீது நம்பிக்கை அதிகரிக்கும். அவர்களது ஆலோசனைகளை பெறுவதிலும் தயக்கம் இருக்காது. பிள்ளைகளின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.
பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த வீடுகளில் சரியான அன்பும் வழிகாட்டலும் இல்லாது பிள்ளைகள் தவறான பாதையில் அவற்றை தேடிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. அவர்களில் நல்ல நட்புகளை பெறும் பிள்ளைகள் தப்பிவிடுகிறார்கள். தீய நட்புகளை பெறும் பிள்ளைகள் கெட்டழிந்து போகிறார்கள். எனவே குழந்தைகள் முன் தங்கள் வாக்குவாதங்களையும் கோபதாபங்களையும் தவிர்த்து அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்வது பெரியவர்களது தலையாய கடமையாகும்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்கள் கருத்தில் தெளிவாக இருக்கிறார்கள் என்பதும்;
அவர்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது தங்களது சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா என்பதை அவர்களது குடும்ப சூழல் தீர்மானிக்கிறது என்பதும் எனது கருத்தாகும்.