தந்தை தாய் இருவரும் உழைத்து வாழவேண்டிய சூழ்நிலையில் வளர்ந்த குழந்தைகள் இன்றைய இளைஞர்கள்.
வீட்டுவேலைகள் செய்யத் தெரியாத தந்தை, பெண்கள் மட்டும் வீட்டுவேலைகளை செய்துகொண்டிருக்கும் இக் குடும்பங்களில் புதிதாக பெண் வேலைக்குச் செல்லும்போது வேலைப்பளுவில் பெண் திண்டாடித்தான் போகிறாள். இச்சூழ்நிலையில் கணவனோ, வீட்டுவேலை தெரியாது என்றும் அதை பழகி உதவும் எண்ணமும் இல்லாதிருக்கிறான். மரியாதை/கெளரவம் இல்லாது போய்விடும் என்பதே காரணம்.
தந்தையின் உதவியில்லாமல் தாய் படும் கஷ்டங்களையும், அதனால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் இழப்புக்களையும் உணர்ந்து வளர்ந்த குழந்தைகள் இன்றைய இளைஞர்கள்.
எனவே, குடும்பம் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் சுகமாகவும் இருப்பதற்கு கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வீட்டுவேலைகளிலும் வெளிவேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவிசெய்யவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இன்றையக் காலக்கட்டத்தில் கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கிறார்கள், அவர்களுக்கு பகிர்ந்து செய்யும் மனப்பான்மை இருக்கிறது என்பது எனது கருத்து.