உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.
நாம் தொடங்கும் ஒரு காரியம் வெற்றியளிப்பதற்கு தாமதம் ஏற்பட்டால், அதைத் துரிதப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்தும் தாமதம் ஏற்பட்டால் கவலை கொள்ளாது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து வாழும்போது நிம்மதியும் மகிழ்வும் கிடைக்கும். அக்காரியம் முன்பாகவே நடந்து முடிந்திருந்தால் ஏதாவது தீமை/நஷ்டம் ஏற்படுவதாக இருந்திருக்கலாம், அதைத் தடுப்பதற்காகவே தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்கும் மனப் பக்குவம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
உதாரணமாக இரு நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நெருங்கிய உறவினர் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வதற்கு புகையிரதத்திற்கு இருக்கைப் பதிவு செய்வதற்கு சென்றபோது பதிவுகள் முடிந்துவிட்டன. எவ்வளவு முயன்றும் அன்று போக முடியவில்லை. மனம் நொந்து கவலையடைந்து மறுநாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, முதல் நாளே தவிர்க்க முடியாத காரணத்தினால் பயணம் சென்றுவிட்டார்கள் என்று அறிந்து, போகாதது நல்லதாகப் போய்விட்டது என்று மகிழ்ந்தார்கள். போயிருந்தால் பணமும் நேரமும் வீணாகிப் போயிருக்கும். இதைத்தான் எல்லாம் நன்மைக்கே என்று சொல்வோம்.
வேலை தேடும் பட்டதாரி ஒருவருடைய தாய், பக்கத்து ஊரில் வசிக்கும் வயதான உறவினரை மாதம் ஒருமுறை சென்று பார்த்து உணவுப் பொருட்கள் கொடுத்து வருவது வழக்கம். அந்த மாதம் அவரால் செல்ல முடியவில்லை. மகனை சென்று பார்த்து வரும்படி கூறிக்கொண்டிருந்தார். மகனும், தவிர்க்கமுடியாது வேண்டா வெறுப்புடன் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் எதிர்பாராதவிதமாக நண்பன் ஒருவனின் உறவினரை சந்தித்தார். அவர், இவருடைய விபரங்களை அறிந்து தனக்கு தெரிந்த பிரபலமான நிறுவனத்திற்கு சென்று மிகவும் வேண்டப்பட்ட ஒருவரை சந்திக்கும்படி கூறிச் சென்றார். அதன்படி அவரைச் சந்தித்து நல்ல வேலையும் கிடைத்தது. தாயின் வேண்டுதலின்படி நடந்ததால் அவருக்கு நன்மை கிடைத்தது.
எமது வாழ்க்கையில் ஏற்படும் எமது சக்திக்கு அப்பாற்பட்ட தடைகள், மாற்றங்கள் எல்லாம் நன்மைக்கே என்று வாழ்ந்து நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடைவோம்.