நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவு வகைகளில் காளான், இஞ்சி, பூண்டு, கரட் என்பனவும் அடங்கும்.
காளான் பொரியல்
காளானை நன்றாக கழுவி, சிறிது சிறிதாக பிய்த்து, உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து சாதத்துடன் பரிமாறலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
இஞ்சி சம்பல்
இஞ்சி – 1 துண்டு (சுவைக்கேற்ப)
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5
உப்பு, புளி, கறி வேப்பிலை – தேவையான அளவு
இவை யாவற்றையும் ஒன்றாக அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து உணவுடன் பரிமாறலாம்.
பூண்டுக் குழம்பு
பூண்டு – 20 பல்
பெரிய வெங்காயம் – 1
தக்காளிப்பழம் பெரிது – 1
தேங்காய்ப் பால் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
மசாலாத்தூள் – 1 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெரிய சீரகம் – 1/2 தேக்கரண்டி
புளிக் கரைசல் -2 மேசைக்கரண்டி
கறி வேப்பிலை
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
தோல் நீக்கிய பூண்டையும் சுத்தம்செய்து நறுக்கிய வெங்காயத்தையும் எண்ணெயில் வதங்க விடவும்.
முக்கால் பதம் வதங்கியதும் வெந்தயம் சேர்த்து கிளறி பின் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி வதங்கியதும் புளிக் கரைசல், தேங்காய்ப்பால், தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேவையான பதத்திற்கு வற்றியதும் இறக்கி சாதத்துடன் பரிமாறலாம்.
கரட் வறை
தோல் நீக்கி துருவிய கரட் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
சுத்தம்செய்து சிறிதாக நறுக்கிய வெங்காயம் – 1/8 கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சின்னச் சீரகத்தூள் (நற்சீரகம்) – 1/2 தேக்கரண்டி
கறி வேப்பிலை, உப்பு நீர், தேசிப் புளி – தேவையான அளவு
தேசிப்புளியைத் தவிர இவை யாவற்றையும் ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் கிளறி வறுத்து பொன்னிறமானதும் தேசிப்புளி சேர்த்து கிளறி இறக்கி சாதத்துடன் பரிமாறலாம்.
தண்ணீரோ எண்ணெயோ சேர்க்கத் தேவையில்லை.