“இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை.
உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை.
பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்குக் கொடுத்தவண்ணம் இருக்கிறது.
அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது.”
” ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ எனும் மனநிலையே இன்பம் ஏற்படக் காரணம்.
மகிழ்ச்சி உதிரிப் பொருளாக இருப்பதில்லை. அதுவே மூலப்பொருளாக இருக்கிறது.
நல்லவற்றை போற்றும் சமூகத்தில், தீயவைகள் மறையத் தொடங்கிவிடும்.
‘நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்’ எனும் சிந்தனை எல்லோருக்கும் ஏற்படும்.
அந்த நிலையில்,
சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும், அது பிரசாதம்.
குடிக்கும் நீர் தீர்த்தம்.
நடக்கும் பாதை கம்பளம்.
சந்திக்கின்ற மனிதர்கள் தென்றல்.”
“பசியையும் தாகத்தையும், அனுபவங்களாகவும் படிப்பினையாகவும் ஏற்கும் திட உள்ளம் ஏற்பட்டால், மகிழ்ச்சியும் இன்பமும் நம்மைவிட்டுப் பிரிந்து ஒரு நொடிகூடத் தனிக்குடித்தனம் நடத்தாது.”
“கருணையை விதைக்காத கல்வி வியர்த்தம்.
கல்வி, எல்லோரையும் எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுத்தருவதில்தான் தொடங்கவேண்டும்.
பேராசையும் சுயநலமும் இல்லாதவர்களே கருணையுடன் திகழமுடியும்.
மற்றவர்கள் எல்லாம் அன்புடன், கருணையுடன் இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.
நம்மிடமிருந்தே அது தொடங்கலாம்.
சிரிப்பைப்போல அது மற்றவர்களையும் பற்றிக்கொள்ளும்.
நம் பார்வையின் கோணமே மாறிப்போகும்.
கோபம் குறையும்.
உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆரோக்கியம் கொப்பளிக்கும்.
தற்காலிகத் துன்பங்களைத் தாண்டி, நெடிய இன்பம் வேர் விட்டு விரியும்.”