அரசாங்க வேலையில் இருக்கும் பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பிக்கை; தனியார் வேலையில் இல்லை. எனவே எல்லோரும் எப்போதுமே அரசாங்க வேலையையே விரும்புவார்கள். ஆனால் அரசாங்க வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் தனியார் வேலையை நாடிச் செல்கிறார்கள் என்பதே எனது கருத்து.
தனியார் நிறுவனங்கள் நட்டத்தைச் சந்திக்கும்போது இழுத்து மூடுதல், இயலாமையால் அல்லது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறுவதால் நிறுவனம் கைமாறும்போது ஆட்குறைப்பு செய்தல் போன்ற காரணங்களால் வேலைக்கு பாதுகாப்பில்லை. அத்துடன் ஓய்வு பெறும்போது சேமலாபநிதி தொகையாக கிடைத்தாலும் அதற்கென்றே செலவுகள் காத்திருந்து அழித்துவிடுவதால் பிற்காலத்தில் அடுத்தவரை நம்பியிருக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் அரசாங்க வேலையில் சம்பளம் குறைவென்றாலும் சலுகைகள் இல்லை என்றாலும் இப்படியான risk எதுவும் இல்லை. ஓய்வூதியம் வேலை செய்தவருக்கு மட்டுமல்லாது அவர் இல்லாத காலத்தில் அவரது வாழ்க்கைத் துணைவருக்கும் கிடைப்பது அந்த குடும்பத்துக்கு நிரந்தர பாதுகாப்பைக் கொடுக்கிறது. இது மறுக்கமுடியாத எல்லோருக்குமே தெரிந்த உண்மையாகும்.
ஒருவருக்கு அரசாங்க நியமனமும் தனியார் நிறுவனத்தில் நியமனமும் கிடைத்து எதை தெரிவு செய்வது என்ற நிலை ஏற்பட்டால் நிச்சயமாக அரசாங்க நியமனத்தையே தெரிவு செய்வார். அடுத்தவர்களும் அதையே தெரிவு செய்யும்படி ஆலோசனை சொல்வார்கள்.
அரசாங்க வேலை கிடைக்காதவர்கள் ‘எட்டாப் பழம் புளிக்கும்’ என்றவிதமாக தனியார் வேலையில் கிடைக்கும் சலுகைகளையும் அதிக சம்பளத்தையும் கூறிப் பெருமைப்பட்டு சமாதானமடைவார்கள். இது இயற்கையே.
சிலர் உடனடித் தேவைக்கு தனியார் வேலையில் சேர்ந்துகொண்டு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்வார்கள். கிடைத்தால் விட்டுச் செல்ல தயங்கமாட்டார்கள் என்பதே எனது கருத்து.