இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.
அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.
கணினி யுகத்தில் இணையப் பயன்பாடு இன்றியமையாதது. நினைத்தும் பார்க்க முடியாத அற்புதமான விஷயங்களை நிகழ்த்தி வருகிறது. உலகிலே எந்த மூலையில் இருந்தாலும் நினைத்த நேரத்தில் தேவையானவர்களோடு தொடர்பு கொள்ள முடியும் என்பதோடு பார்த்துப் பேசவும் முடிகிறது என்பது மிக மிக ஆச்சரியமான விடயமே. முக்கியமான கடிதங்களை தேவையான நேரத்தில் அந்த நிமிடமே பெறக்கூடிய வசதி. போகும் இடங்களுக்கெல்லாம் பணத்தை கையில் கொண்டு செல்லத் தேவையில்லாமல் அந்தந்த இடங்களிலேயே பெரும் வசதி. பொருட்கள் வாங்குவதற்கு கையில் பணம் இல்லாமலேயே கடன் அட்டை மூலம் வாங்கும் வசதி. கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என ஒரு மனிதனுக்கு தேவையான எல்லாத் துறைகளிலும் ஏற்படும் சந்தேகங்களை அடுத்தவர் துணை இல்லாமலே தீர்த்து வைக்கிறது. அது மட்டுமல்லாது, புதிதாக ஒரு இடத்திற்கு செல்வதற்கு எந்தவித ஐயமும் இல்லாமல் இலகுவாக செல்வதற்கு வழி காட்டுகிறது.
சிறந்த வழியில் பொழுதைக் கழிக்கவும், ஆக்கங்களை வெளிப்படுத்தவும், ஆரோக்கியமான நட்பை பேணவும் உறுதுணையாக இருக்கிறது.
இப்படியாக கூறிக்கொண்டே போகலாம்.
அதே சமயம் இவற்றின் மீது வெறுப்பை உண்டாக்கும் வண்ணம் சில தீய சக்திகள் ஒரு செம்பு பாலில் ஒரு துளி விஷம் கலந்து எப்படி பரவுகிறதோ அப்படியான சூழலை உருவாக்கி கதி கலங்கச் செய்கிறது. சிறியவர்கள் பாதை மாறிச் செல்வதற்கும், பெரியவர்கள் தடம் பிறழ்வதற்கும் வழி செய்கிறது.
எல்லாக் கண்டுபிடுப்புக்களிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. அதைப் பிரித்தறிந்து நல்ல வழியில் பயன் பெறுபவர்களுக்கு இணையப் பயன்பாடு வரமாக அமைகிறது.
தீய வழியில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு அதுவே சாபமாக அமைகிறது.