இன்றைய கால கட்டத்தில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே கிடையாது எனலாம். இல்லாதவர்களும் குறிப்பிட்ட சில நிகழ்சிகளை நேரம் தவறாது அக்கம்பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்சிகளில் விளம்பரங்கள் இன்றியமையாதவையாகி விட்டன.
முன்பு, விற்பனையாகாமல் முடங்கி இருக்கும் பொருட்களுக்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுபவைக்குமே விளம்பரங்கள் கையாளப்பட்டன. ஆனால் இன்றோ விளம்பரங்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன. விளம்பரம் செய்யாவிட்டால் மதிப்பில்லை, வியாபாரம் படுத்துவிட்டது என்ற எண்ணம் தோன்றக்கூடிய நிலை வந்துவிட்டது.
விளம்பரங்களை இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று சேவை தொடர்பானது. மற்றையது விற்பனை தொடர்பானது.
சேவை தொடர்பான விளம்பரங்களால் மக்கள் நூறுவீத நன்மையைப் பெறுகிறார்கள்.
* மருத்துவம் – இலவச மருத்துவ முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம்.
– தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு.
– தடுப்பு மருந்து நினைவூட்டல்.
– சுகாதாரம், சுத்தம் பற்றிய அறிவுரை.
– இரத்ததானம் பற்றிய அவசியம்.
* சுற்றுச்சூழல் – மாசடைதல் தொடர்பான அறிவுறுத்தல்.
– பாதுகாப்பு நடவடிக்கைகள்.
– பசுமைப் புரட்சி.
* விவசாயம் – பயிர்களின் நோய் எச்சரிக்கை.
– பசளைகள், பூச்சிக்கொல்லிகள்
– காலத்திற்கு உகந்த பயிர்ச் செய்கை.
* காலநிலை – மழை, புயல் பற்றிய எச்சரிக்கை.
– கடலுக்குச் செல்வோருக்கான எச்சரிக்கை.
* சமயம் – சமய நிகழ்வுகள் நினைவூட்டல்.
* பாதுகாப்பு – சிறுவர் துஷ்பிரயோகம்.
– பெண்கள் பாதுகாப்பு.
– முதியோர் பாதுகாப்பு.
இவை எல்லாமே தனி நபர்களுக்கு மட்டுமல்லாது, சமுதாயத்திற்கே வழிகாட்டியாக இருந்து நன்மை பயப்பது உண்மை.
வியாபாரம் தொடர்பான விளம்பரங்களே முக்கிய இடத்தை வகிக்கின்றன.
புதிதாக அறிமுகமாகும் பொருட்கள் விளம்பரம் மூலம் மக்களை விரைவாக சென்றடைகின்றன. உதாரணமாக உணவு வகைகள், பூச்சிக்கொல்லிகள் – spray… இவை மக்களுக்கு நன்மையையே தருகின்றன.
சில விளம்பரங்களில் அன்றாட நடவடிக்கைகளில் எமது அலட்சியத்தால் வரும் நோய்கள் பற்றி அறிய முடிகிறது.
உதாரணமாக பற்பசை – இவ்விளம்பரம் மூலம் பற்களுக்கு வரும் ஆபத்தை சிறு குழந்தைகள் கூட அறிய முடிகிறது.
சவர்க்காரம் – தோலில் வரும் நோய்கள்.
திருத்த வேலைகள் செய்து கொடுக்கப்படும் இடங்கள், மலிவு/கழிவு விற்பனை நடைபெறும் இடங்கள் போன்ற விளம்பரங்களும் மிகவும் நன்மை பயப்பவையே.
முக்கிய நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நடைபெற இருக்கும் நாள், நேரம் தொடர்பான விளம்பரங்கள் மூலம் முன்கூட்டியே திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கி அந்நிகழ்வை பார்க்க முடிகிறது.
இப்படியாக பல நன்மைகள் இடையே சில குழப்பங்களும் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு வேறு வேறு தயாரிப்பாளர்களின் விளம்பரம் அடுத்தடுத்து வரும்போது மக்கள் குழப்பமடைகிறார்கள். உதாரணமாக சவர்க்காரம், பற்பசை, shampoo, அழகுசாதனப் பொருட்கள்… எது நல்லது என்று புரியாமல் எல்லாவற்றையும் மாறி மாறி வாங்கி பாவிப்பவர்கள் தீமையையே பெறுவார்கள். பணச்செலவுடன் ஆரோக்கிய சீர்கேடு வருவதற்கும் வாய்ப்புண்டு.
ஒரு பொருள் வாங்கினால் இன்னொரு பொருள் இலவசம் என்பதில் மயங்கி தரமற்ற பொருட்களை வாங்கும் நிலை ஏற்படலாம்.
இவற்றினிடையே தீமை பயக்கக்கூடிய விளம்பரங்களும் இருக்கின்றன.
நிலம், மனை விற்பனை தொடர்பானதும் கட்டட நிர்மான சேவை தொடர்பான விளம்பரங்களும் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை நம்பி மக்கள் படுகுழியில் விழவும் நேரலாம். எனவே இது போன்ற விளம்பரங்களை ஏற்குமுன் தொலைக்காட்சி நிறுவனங்கள் குழுக்களை அமைத்து, அவற்றை ஆராய்ந்து உறுதிப்படுத்தியபின் விளம்பரம் செய்வதே சிறந்ததாகும். மக்களும் இது தொடர்பான விளம்பரங்களில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மனக்கட்டுப்பாடும் தீயவற்றை கண்டறிந்து விலக்கி வாழும் பண்பும் இருக்கும் பட்சத்தில் விளம்பரங்கள் நன்மை பயப்பவையே.