எப்போதுமே பிள்ளைகளிடம் பெற்றோர் கனிவோடு கூடிய கண்டிப்புடன் செயற்படுவதே மிகவும் சிறந்த வழிமுறை என்பதே எனது கருத்தாகும். கண்டிப்புடன் செய்யமுடியாத எத்தனையோ காரியங்களை கனிவுடன் கேட்கும்போது அதைத் தட்ட பிள்ளைகளுக்கு மனம்வர மாட்டாது.
பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டதை பகுத்தறிவதற்கு கற்றுக்கொடுத்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை. அதை கனிவுடன் சொல்லும்போது அவர்கள் இலகுவாக புரிந்தும்கொள்வார்கள் ஏற்றுங்கொள்வார்கள்.
அளவுக்கு மீறிய செல்லமும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பிள்ளைகளை பிழையான வழிக்குத்தான் அழைத்துச் செல்லும்.
அளவுக்கு மீறிய செல்லம், கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வளரவிடும். தவறானவற்றை கேட்கும்போது மறுத்தால் பிடிவாதத்தைக் கொண்டுவரும். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்கும் மனப்பக்குவம் இருக்காது. தீயவழிநோக்கி அவர்களை அழைத்துச் செல்லும்.
அளவுக்கு மீறிய கண்டிப்பு, திருட்டுத்தனத்தைக் கொண்டுவரும். கேட்டால் அனுமதி கிடைக்காது, ஏன் சொல்ல வேண்டும் என்ற மனப்பாங்கைக் கொடுக்கும்.
தவறானவழியில் காலடியெடுத்து வைக்கும் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே தடைசெய்ய வேண்டும். காலம்கடந்தால் ஆபத்தைத்தான் கொண்டுவரும். எந்தவொரு தீயசெயலையும் ஆரம்பத்திலேயே தடுப்பது சுலபமாகும். அதைக் கனிவுடன் எடுத்துக்கூறித் தடுப்பது இன்னும் இலகுவாக்கும். அது ஏன் பிழையானது என்ற காரணத்தையும் அதன் பின்விளைவுகளையும் கனிவுடன் கூறி முடிவில் திட்டவட்டமாக மறுக்கும்போது புரிந்துகொள்வார்கள்.
பிழைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கு பெற்றோர் எப்போதும் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருப்பதுடன் மனம்விட்டுக் கதைக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுடன் பெற்றோர் மனம்விட்டுக் கதைக்கவேண்டும். அதன்மூலம் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் பழக்கம் ஏற்படும். மனதில் கள்ளம் வரமாட்டாது.
வருமுன் காப்போனாக சிறுவயதிலிருந்தே நல்ல அறிவுரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் புகட்டவேண்டும். நீதிக்கதைகள் கூறி நடைமுறை உதாரணங்களையும் சுட்டிக்காட்டலாம். கவலையீனமாக அவர்கள் போக்கில் விட்டுவிட்டால், தேவையான நேரம் கண்டிப்பைக் காட்டும்போது, பிள்ளைகள் பெற்றோரை எதிரியாகவே பார்ப்பார்கள். அவர்களுக்கு கோபமும் பிடிவாதமும்தான் ஏற்படும். அது அவர்களை மேலும் மேலும் தவறுகள் செய்யத் தூண்டும்.
இணையத்தளம், கைபேசி போன்ற நவீன வசதிகள் தற்போதைய கல்விக்கும் வேலைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டன. இவற்றைப் பிள்ளைகள் பாவிப்பதைத் தடைசெய்ய முடியாது. எனவே இவற்றின் நன்மை தீமைகளை தெரியப்படுத்தி அனுமதி கொடுத்து பின் அவர்களை அடிக்கடி கண்காணிப்பதன்மூலம் கண்டிப்பைக் காட்டலாம்.
தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளைகளை கண்டித்து எதையும் செய்துவிட முடியாது. ஆபத்தைத் தரக்கூடிய காரியங்களில் அவர்கள் ஈடுபட நினைக்கும்போது, விபரங்களைக் கேட்டு அதில் உள்ள நிறைகளையும் குறைகளையும் அவர்களுடனேயே கதைத்து ஆராயலாம். அப்பொழுது பின்விளைவுகளையும் கஷ்டங்களையும் கூறி அவர்களிடமே அபிப்பிராயம் கேட்கும்போது அவர்களின் மனமும் மாறி தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் அப்படியான காரியங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
இவையே எனது கருத்துக்கள்.