இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்றவகையில்தான் அரசாங்கம் சட்டங்கள் இயற்றி நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கின்றது. ஆனால் பதவி ஆசை, பொருள் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை என்பவற்றால் பேராசை கொள்ளும் சமூகமே அச்சட்டங்களை மீறி நடக்கின்றது.
பெண்களின் பிரச்சனைகளை உரிய முறையில் கையாண்டு பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடப்பதற்கு காரணம் அந்தப் பதவியில் அமர்ந்திருக்கும் நபரின் சுயநலமே அன்றி அரசாங்கம் அல்ல. அந்த நபர் தீய எண்ணம் கொண்டவராக இருக்கலாம், லஞ்சம் செலுத்தி பதவி பெற்றவராக இருக்கலாம், பதவி உயர்வு/இடமாற்றம் இவற்றை கருத்திற்கொண்டு தீயவற்றிற்கு துணை செல்பவராக இருக்கலாம். சமுதாயத்தில் இருக்கும் இப்படியான எண்ணங்கள் கொண்டவர்களாலேயே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
அன்றைய பெண்ணுக்கும் இன்றைய பெண்ணுக்கும் வித்தியாசங்கள் நிறைய உள்ளன. அன்றைய பெண், ஆணின் உழைப்பில் வீட்டிலிருந்து நிர்வாகம் செய்துகொண்டிருந்தாள். இன்றைய பெண்ணோ சுதந்திரம் என்ற பெயரில் கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு நிகராக திகழ்கிறாள். அவளுடைய சிந்தனை மற்றவர்களை பாதிக்காதவகையில் சரியே. எல்லாவற்றிலும் பெண் சுதந்திரம் கதைக்கும் பெண்களுள் ஒரு சிலர் தமது உடைகளிலும் பழக்கவழக்கங்களிலும் அளவுக்கதிகமாக சுதந்திரம் எடுத்துக்கொள்வது அவளது பாதுகாப்பின்மைக்கு முதல் காரணமாக அமைகிறது. அரைகுறை ஆடைகள் அணிவதும் நேரம் கேட்ட நேரங்களில் வெளியே திரிவதும் அவளுக்கு எதிராக திரும்புகிறது.
பெண்ணுக்கு பெண்ணாலேயே வீட்டில் நடக்கும் அநீதிகள் – மாமியார்/மருமகள் கொடுமை. இதற்க்கு காரணம் சமூகம்தான். ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தால்தான் அந்த வீட்டில் வாழலாம் என்று இலவச ஆலோசனைகள் வழங்கும் அயலவர், சொந்தங்கள், சிநேகிதர்கள்.
கணவனுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் – சந்தேகம், நான் என்னும் அகங்காரம் என்பவற்றை ஏற்படுத்தி வாழ்வை நரகமாக்கும்.
பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் சமூகம் இருக்கும்வரை அவளுக்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லை.