கூட்டுக் குடும்பத்தில் நாம் மிக முக்கியமாக பாதுகாப்பை உணர முடியும். இதன் மூலம் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. எந்த ஒரு இக்கட்டான, துன்பமான தருணத்திலும் உடனடியாக உதவுவதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் அனுபவம் மிக்க பெரியவர்கள், உறவினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய நிம்மதியையும் பாதுகாப்புணர்ச்சியையும் தருகிறது.
இது தவிர பண்பாடு, கலாச்சாரம், நல்ல பழக்க வழக்கங்கள், பொறுப்புணர்ச்சி, புரிந்துணர்வு – விட்டுக்கொடுத்தல் போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானவை கூட்டுக் குடும்பம் மூலம் கிடைக்கிறது.
வருங்கால தலைவர்களான குழந்தைகள் அனுபவம் மிக்க பெரியவர்களின் வழிகாட்டலில் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதோடு சமய உணர்வு, பொறுப்புணர்ச்சிமிக்கவர்களாக வளர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெற்றோர், தாத்தா-பாட்டியிடம் எவ்வளவு பணிவாகவும், பண்பாகவும், அன்பாகவும் பழகுகிறார்கள் என்பது நாளாந்த நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதுவே தலைமுறை தலைமுறையாக நல்ல குடும்பங்கள் உருவாக வழிவகுக்கிறது.
தனிக்குடித்தனத்தில், பெற்றோரைப் போலவே குழந்தைகளும் சுயநலவாதிகளாகவும், பொறுப்புணர்ச்சி அற்றவர்களாகவும், பிடிவாத குணமுள்ளோராகவும் வளரும் வாய்ப்பே அதிகமாகும். தனிமை, தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்ற துணிவில், அவர்களை அறியாமலே பிழையான வழியில் செல்ல வழிவகுக்கிறது. நாகரீகம் என்ற போர்வையில் கீழ்த்தரமான உடை, அலங்காரம், பொழுதுபோக்கு என மெது மெதுவாக தீய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பளிக்கிறது.
பெற்றோர் இருவரும் தொழில்புரிபவர்களாயின் குழந்தைகள் வேலையாட்களிடம் வளரவேண்டிய சூழ்நிலை. இதனால் அன்பு, பாசம், கவனிப்பு இல்லாமல் போகின்றது. சீரற்ற-ஊட்டமில்லாத உணவு முறை, பாதுகாப்பின்மை, வேலைப்பளுவினால் சிறு விடயங்களுக்கும் கோபம், வாக்குவாதம், முரண்பாடுகள் என பெரும்பாலும் நிம்மதியற்ற வாழ்க்கையே கிடைக்கிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது வெகு சில கூட்டுக் குடும்பங்களில், மாமியார்-மருமகள், தாத்தா, பாட்டி-பேரப்பிள்ளைகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாளடைவில் புரிந்துணர்வு-விட்டுக்கொடுத்தல் மூலம் சரிசெய்யப்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு நான் கூட்டுக் குடும்பமே வாழ்க்கை முறைக்கு சிறந்ததென கருதுகிறேன்.