குவியல் 2 எண்ணம் 2
ஆறுவது சினம்

மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்று கோபம். கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது மனதையும் உடலையும் அது பாதிப்பதுடன் அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது. முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் கோபம் அத்துடன் தணியாவிடின் அது வாய் மூலம் மனதை புண்படுத்தும் தகாத வார்த்தைகளாகவோ அல்லது மூர்க்கத்தனமான நடத்தைகள் மூலமாகவோ வெளிப்படுகிறது.
மனிதனுக்கு கோபம் வருவது இயற்கையே. தான் செய்யாத குற்றத்தை செய்ததாக கூறும்போது, தவறான புரிதலினால், அநியாயம் நடப்பதை காணும்போது இப்படியாக பலவேறு காரணங்களுக்காக கோபம் உண்டாகிறது. கோபத்தின் வெளிப்பாடு முகத்தில் தெரிவதோடு நிறுத்தி அக்கோபத்தை கட்டுப்படுத்தல் அவசியம். இச் செய்கையினால் உடலும் உள்ளமும் பாதிப்படையாமல் காப்பாற்றப்படுவதுடன் மரியாதையும் அங்கு காப்பாற்றப்படுகிறது என்பது உண்மை. கோபத்தை அடக்கப் பயிலவேண்டும் என்பதை ஆத்திசூடியில் ஔவையார் பின்வருமாறு கூறுகிறார்.
ஆத்தி சூடி – “ஆறுவது சினம்”
கவிஞர் பத்மதேவனின் விளக்கவுரை – தணிய வேண்டியது கோபம் என்னும் உஷ்ணமாகும்.
வெளியிடத்தில் கண்ணெதிரே ஒரு அநியாயம் நடப்பதைப் பார்க்கும்போது, நமக்கென்ன என்று கண்டும் காணாததுபோல் சிலர் விலகிச் சென்றுவிடுவார்கள். அது தவறு. சிலர் கோபம் தலைக்கேற ஒன்றையும் சிந்திக்காது களத்தில் குதித்துவிடுவார்கள். அதுவும் தவறு. கோபப்படத்தான் வேண்டும். ஆனால் அறிவைப் பயன்படுத்தி அந்த அநியாயத்தை தடுக்கவேண்டும் அல்லது தட்டிக் கேட்கவேண்டும்.
கோபத்தை கட்டுப்படுத்தாவிடில் எம்மை அறியாமலே வெளியேறும் தகாத வார்த்தைகளையும், அடுத்தவர் மனதை குத்திக் கிழிக்கும் சொற் பிரயோகத்தையும் தடுக்க முடியாது. கோபம் தணிந்த பின் அவற்றை நினைத்து கவலைப்படுவதில் ஒரு பயனுமில்லை. கொட்டிய வார்த்தைகளை அழிக்க முடியாது. அவை இருவரது மனதையும் உறுத்திக்கொண்டே இருக்கும். என்னதான் சமாதானமாகி பழகினாலும் அங்கு பழைய அந்நியோன்யம் இருக்காது. சுடு சொற்களால் ஏற்படும் பாதிப்பை திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
குறள் – தீயினால் சுட்ட புண் உள்ஆறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு
பி.எஸ். ஆச்சார்யா அவர்களின் உரை – தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒருபோதும் மறையாது.
கோபம் வரும் வேளையில் சிறிது நேரம் மௌனமாக இருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டபின் கதைப்பது நன்று. அது முடியாவிட்டால் அந்த இடத்தைவிட்டு அகன்று விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் மனதை வேறு விடயங்களில் செலுத்தி அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் கோபத்தை ஏற்படுத்தும் காரணியை மறந்துவிடலாம்.
அதிக கோபம் உறவையும் நட்பையும் முறித்துவிடும் என்பதில் ஐயமில்லை.
உதாரணக் கதை
மாலை 5.30 மணி. வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தான் சேகர். பேரூந்து நிலையத்தை அடைந்தவனுக்கு அங்கு நடந்துகொண்டிருந்த சம்பவம் கோபத்தை தலைக்கேறச் செய்தது.
வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக நின்ற பெண் பிள்ளைகள் இருவரை மூன்று பையன்கள் வம்புக்கிழுத்து கேலி செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் பிள்ளைகளும் பேரூந்து வருகிறதா என பயத்துடன் பார்த்துப் பார்த்து தவித்துக்கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அங்கு நின்றிருந்த மற்றவர்களோ ஒன்றுமே நடவாதது போல தங்களுக்குள் கதைத்துக்கொண்டும் வேறு பக்கம் பார்த்துக்கொண்டும் நின்றிருந்தது சேகரது சினத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. அந்தப் பையன்களின் சட்டையைப் பிடித்து நாலு அறை அறைந்து துரத்திவிட கால்கள் பரபரத்தன. ஆனால் முன்பு நடந்த இரு சம்பவங்களும் அதில் அவசரப்பட்டு தலையிட்டு மூக்குடைபட்டு தர்ம அடி வாங்கிய நினைவுகளுடன் அவனது மனைவி கூறிய ஆலோசனைகளும் நினைவுக்கு வர சற்று நிதானித்து என்ன செய்யலாம் என அவசர அவசரமாக சிந்தித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
உடனே தனது மனைவிக்கு கைபேசி மூலம் தொடர்புகொண்டவன், “இரு நிமிடங்களுக்குப் பின் எனக்கு கைபேசியில் தொடர்புகொள். நான் சொல்லும் வரை வைக்காதே. நான் கதைப்பவற்றை கேட்டுக் கொண்டிரு. விபரங்களை நான் வந்து சொல்கிறேன்.” என்று கூறி கைபேசியை அணைத்துவிட்டு அவர்களை கவனிக்காதது போன்ற பாவனையுடன் அந்தப் பிள்ளைகளை நோக்கி மெதுவாகச் செல்லத் தொடங்கினான்.
சேகர் சொன்னது போல் இரண்டு நிமிடங்களில் கைபேசி அலறியது. உடனே எடுத்தவன், சிறிது உரத்த குரலில் “ஹலோ!…… யார்?…….. சிவாவா?……… அட எப்படி இருக்கிறாய்?….. அப்படியா?….. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிறது. எப்படி எனது எண் கிடைத்தது?……சரி சரி…. அட, உனது பொலிஸ் உயர் அதிகாரியாகும் கனவு பலித்து விட்டது என்று சொல்கிறாய். வாழ்த்துக்கள் நண்பா……. இப்போதேவா….. நான் இங்கு கடை அங்காடி அருகில் இருக்கும் பேரூந்து நிலையத்தில் தான் நிற்கிறேன்…. கடமையில் நிற்கிறேன் என்கிறாய். எப்படி? என்னது அருகில் வந்துவிட்டாயா?……. சரி வா….. இரு நிமிடங்களில் என்றால் மிக அருகில்தான் வந்துவிட்டாய்….” என்று சொல்லவும் அந்தப் பையன்கள் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். அந்தப் பிள்ளைகளும் நிம்மதிப் பெருமூச்சுடன் மற்றவர்களுக்கு அருகாமையில் சென்று அவர்களுக்கு நெருக்கமாக நின்றார்கள். சிறிது நேரத்தில் பேரூந்து ஒன்று வர அந்தப் பிள்ளைகளும் வேறு சிலரும் ஏறிச் சென்றுவிட்டார்கள்.
அந்தப் பையன்கள் தூர நின்று பார்ப்பதைக் கவனித்தவன், இரண்டு முறை கைக்கடிகாரத்தையும் வழியையும் மாறி மாறிப் பார்த்தவன் தன் மனைவியுடன் தொடர்புகொண்டு, அந்த பொலிஸ் அதிகாரியுன் கதைப்பதாகப் பாவனை செய்து, அடுத்து வந்த பேரூந்தில் ஏறிவிட்டான்.
வீட்டில் மனைவியின் நிலைமையை கற்பனை பண்ணியவனுக்கு சிரிப்பாகவும், கோபத்தை கட்டுப்படுத்தி அறிவை பயன்படுத்தி நிலைமையை சரி செய்ததை நினைத்து நிம்மதியாகவும் இருந்தது.
“கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.” – கன்பூசியஸ் (சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார்).
*****